இலங்கை தமிழ் கட்சிகள் ஒன்றிணைய திட்டம் - இதில் தமிழர்களுக்கு என்ன பலன் கிடைக்கும்?

பட மூலாதாரம், PRABA GANESAN
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தில் செயல்படும் தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் திட்டமொன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசனின் தலைமையில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேல் மாகாணத்தில் தமிழ் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், புதிய தமிழ் கூட்டணியொன்றை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன், பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
மேல் மாகாண தமிழ் மக்களின் அடிப்படை தேவைகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்ற பல தேவைகள் முன்னெடுக்கப்படவில்லை என அவர் கூறுகின்றார்.

பட மூலாதாரம், PRABA GANESAN
தமிழ் மக்களின் தேசிய பிரச்னைகளுக்கு அப்பால், தமிழ் மக்களின் நடைமுறை பிரச்னைகளும் உள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இதை அடிப்படையாகக் கொண்டு, ஒற்றுமையான கூட்டணி ஒன்றிணை உருவாக்க ஜனநாயக மக்கள் காங்கிரஸ் புதிய முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக பிரபா கணேசன் தெரிவிக்கின்றார்.
இந்த நிலையில், மேல் மாகாண தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் வகையில் புதிய கூட்டணியொன்றை ஆரம்பிக்கின்றமை தொடர்பிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை கொழும்பில் நேற்றைய தினம் (28/09/2022) நடைபெற்றது.
இந்த சந்திப்பில் ஜனநாயக மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்கள் உள்ளிட்ட மேலும் சிலர் கலந்து கொண்டிருந்தனர்.
ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட தீர்மானங்கள் குறித்து, ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன், பிபிசி தமிழிடம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

பட மூலாதாரம், PRABA GANESAN
மேல் மாகாணத்தில் தமிழ் கட்சிகளை இணைக்கும் வகையில் நேற்றைய தினம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?
பதில் :- புதிய தமிழ் கூட்டணி ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்ற முடிவு எட்டப்பட்டது. முதலில் மேல் மாகாணமும், வன்னி மாவட்டத்தையும் சேர்ந்து, புதிய கூட்டணி உருவாக்கப்படவுள்ளது. அடுத்த வாரம், மேலும் சில கட்சிகள் மற்றும் கூட்டணிகளுடன் சந்தித்து கலந்துரையாட எதிர்பார்த்துள்ளோம். தலைநகரத்தில் இருக்கும் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு எதிரான கூட்டணியா என்ற கேள்வியை பலரும் எழுப்புகின்றார்கள். நிச்சயமாக இல்லை. புதிய கூட்டணி உருவாக்கப்பட்டு, நாளை நாம் மனோ கணேசனுடன் இணைந்துக்கொள்ள முடியும். தமிழ் வாக்குகளை பிரிக்கும் எண்ணம் எமக்கு கிடையாது. மனோ கணேசன் தேசிய ரீதியிலான செயற்பாடுகளையே அதிகளவில் செய்கின்றார். இந்த மக்களின் அடிப்படை பிரச்னைகளை பற்றி பேசுவது சற்று குறைவு. கொழும்பில் வாழக்கூடிய பெருந்தோட்ட பகுதி மக்கள் பிரச்னைகள் இன்றும் தீர்க்கப்படாமல் உள்ளன. அதேபோன்று களுத்துறை மாவட்டம் ரொம்ப மோசமாக இருக்கின்றது. இந்த விடயங்களை கருத்தில் கொண்டே நாம் இந்த தீர்மானத்தை எடுத்தோம்.
இந்த கூட்டணியின் திட்டம் என்ன?
பதில் :- வாக்குகளை பலவீனப்படுத்தும் எண்ணம் எமக்கு இல்லை. உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தனித் தனியாக கேட்கலாம். ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் ஓர் அணியாக இருப்பது தமிழ் மக்களுக்கு நல்லதாக அமையும். 2020 ஆம் ஆண்டு தமிழ் வேட்பாளர்கள் யாரும் வேறு கட்சிகளில் போட்டியிடவில்லை. இந்த கூட்டணியை செயல்திறன் மிக்கதாக அமைப்பதற்கான எண்ணம் உள்ளது.

பட மூலாதாரம், PRABA GANESAN
கொழும்பில் கடந்த தேர்தல் காலங்களில் புதிய கூட்டணிகள் உருவாக்கப்பட்டன. அந்த கூட்டணிகள் பெரிதாக வெற்றி பெறவில்லை. இந்த கூட்டணி எவ்வாறு வெற்றி பெறும் என்ற எண்ணம் உங்களுக்கு உள்ளது?
பதில் :- அந்த கூட்டணி சரியாக எடுப்படவில்லை. கூட்டணி அமைக்கும் போது, நான் கடந்த காலங்களில் படித்த பாடம் என்னவென்றால், கூட்டணி அமைக்கும் போது, இன்னுமொரு கூட்டணிக்கு எதிரான கூட்டணியாக அது இருக்கக்கூடாது. அதனாலேயே அந்த பிரச்சினை வருகின்றது. நாங்கள் கடந்த காலங்களில் அமைத்த கூட்டணியானது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதேபோல, தென்னிலங்கையில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தோம். இன்னொரு கூட்டணியோ அல்லது கட்சிக்கோ எதிராக கருத்துக்களை தெரிவித்து, நாங்கள் முன்னோக்கி போனால், அது எப்போதும் வெற்றியளிக்காது. நல்லதொரு அரசியல் பாடம் கற்றுக்கொண்டேன். எங்களுடைய இலக்கை மாத்திரமே சொல்ல வேண்டும். அது மக்களுக்கு தெளிவாகும். நாங்கள் அமைக்கும் புதிய கூட்டணி, எந்தவொரு கட்சிக்கோ அல்லது எந்தவொரு கூட்டமைப்பிற்கோ எதிராக போகாமல், நாங்கள் எங்களுடைய கொள்கைகளை மக்களுக்கு சொல்லி, நகர வேண்டும் என்பதுதான் நோக்கமாக உள்ளது.
நீங்கள் அமைக்கும் கூட்டணி, எதிர்காலத்தில் பெரும்பான்மை சிங்கள கட்சிகளுடன் இணைந்து பயணிக்கும் எண்ணம் உள்ளதா? அல்லது தமிழ் கட்சிகளின் ஊடாக மாத்திரம் பயணிக்கும் எண்ணம் உள்ளதா?
பதில்: சந்தர்ப்பங்களை பார்த்தே முடிவுகளை எடுக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் என்கின்ற போது, தேசிய கட்சிகளுடன் இணைந்து போனால் தான் உறுப்புரிமைகளை பெறுவதற்கு சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. ஆனால் பிரதேச சபை மற்றும் மாகாண சபைத் தேர்தல்களில் தனித்து போவது சிறந்தது. கொழும்பை பொறுத்தவரை இரண்டு தேசிய கட்சிகளில் பிரிந்து போட்டியிட்டால், தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாது போய்விடும். ரணில் அணி தனியாக போட்டியிடலாம், சஜித் அணி தனியாக போட்டியிடலாம். இந்த இரண்டு கட்சிகளுக்குதான் கொழும்பு தமிழர்கள் வாக்களிப்பார்கள். அந்த இரண்டு கட்சிகளிலும் இரண்டு தமிழர்கள் போட்டியிட்டால், ஒருவருக்கு கூட வெற்றி பெற முடியாது.
புதிதாக உருவாக்கப்படும் தமிழ் கூட்டணி, வன்னி மாவட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் தமிழ் கட்சிகளுடன் அல்லது தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்குமா?
பதில்: நிச்சயமாக... தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு வடக்கில் இன்றும் பாரிய ஆதரவு இருக்கின்றது. அதனால், அவர்களுடனும் பேசலாம். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சியுடன் பேசலாம். விக்னேஷ்வரனிடம் பேசலாம். சேர்ந்து பயணிப்பது நல்ல விடயம் தானே. வட மாகாணத்தில் சேர்ந்து போனாலும், பிரிந்து போனாலும் வெற்றி பெற போவது தமிழர்கள் என்பது உறுதி. ஆனால் தென்னிலங்கையில் அப்படி இல்லை அல்லவா?. தென்னிலங்கையில் கொஞ்சம் பிரிந்தாலே, தமிழர்களின் பிரதிநிதித்துவம் இல்லாது போய்விடும். வடக்கில் தனியாக போனால், பிரச்சினை இல்லை. எப்படியும் தமிழர்கள் தான் வெற்றி பெறுவார்கள். இரத்தினபுரி மாவட்டத்தை எடுத்துக்கொண்டால், இரண்டு தமிழர்கள் வெவ்வேறு கட்சிகளில் கடந்த தேர்தலில் போட்டியிட்டார்கள். ஆனந்தகுமார் மற்றும் சந்திரகுமார். ஆனந்தகுமார், ரணிலுடன் இருக்கின்றார். சந்திரகுமார் மனோ கணேசனுடன் இருக்கின்றார். இவர்கள் பிரிந்து போட்டியிடுகின்றமையினால், சந்தர்ப்பம் இல்லாது போகின்றது. இவர்களை இணைத்து போட்டியிட வைத்தால், பாரிய வெற்றியை பெறுவதற்கு சந்தர்ப்பம் இருக்கின்றது. இல்லாவிட்டால், வெற்றி பெறுவது கடினமாக விடயம். இல்லையேல், சிங்கள தேசிய கட்சிக்கு வாக்குகளை வாங்கி கொடுத்து விட்டு, பேசாமல் இருக்க வேண்டும்.
புதிதாக உருவாக்க எதிர்பார்க்கப்படும் கூட்டணியில், முஸ்லிம் கட்சிகளை இணைக்கும் எண்ணம் உள்ளதா?

பட மூலாதாரம், PRABA GANESAN
பதில் :- புதிய கூட்டணிக்கு, தமிழ் என்ற பெயர் வராத வகையில், கூட்டணிக்கான பெயர் ஒன்றை வைக்க எதிர்பார்க்கின்றோம். சிங்கள கட்சிகளை இணைத்துக்கொண்டு செல்வது சாத்தியப்படாது. முஸ்லிம்களை இணைத்துக்கொண்டு போகலாம். முஸ்லிம்களையும் அரவணைத்துக்கொண்டு போவது தப்பு கிடையாது. முஸ்லிம்களையும் சேர்க்கக்கூடிய வகையிலான பெயர் ஒன்றை வைத்து, புதிய கூட்டணி உருவாக்கப்படும்.
அனைத்து பகுதிகளிலும் கட்சிகளுக்கு இடையில் எதிர் அணிகள் காணப்படுகின்றன. வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அரசியல் ரீதியில் எதிரணிகள், தென்னிலங்கையில் தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியன அரசியல் ரீதியில் எதிரணிகள். இவ்வாறான கட்சிகளை ஒன்றிணைக்கும் வேலைத்திட்டம் இருக்கின்றதா?
பதில்: இந்த விடயத்தை செய்வதற்கு நான் தயாராக இருக்கின்றேன். அதனை செய்வதற்கு முதலில் பலமான கூட்டணியொன்றை நாம் உருவாக்க வேண்டும். இவ்வாறு பலமான கூட்டணி உருவாக்கப்பட்டதன் பின்னர், கட்சிகளை இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தினால், அது இலகுவாக இருக்கும் என நம்புகின்றேன். தென்னிலங்கையை பார்த்தால், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியன இரண்டு சக்திகளாக இருக்கின்றனர். வேறு யாரும் பலமான சக்தியாக இல்லை. மூன்றாவது சக்தியாக நாம் உருவாகி, அந்த இரண்டு கட்சிகளையும் இணைத்துக்கொண்டு பயணிக்க முடியும். இவ்வாறு இணைந்து பயணிக்கும் பட்சத்தில், அதிகளவான மக்கள் பிரதிநிதிகளை எடுத்துக்கொள்ள முடியும். ஆனால், விட்டுக்கொடுப்புக்களும் செய்ய வேண்டும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்














