இலங்கையில் கொரோனாவால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி

போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

கொரோனா தொற்று காரணமாக மரணிப்போரை அடக்கம் செய்வதற்கான அனுமதியை வழங்கும் திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இலங்கை அரசாங்கம் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் கொரோனாவால் மரணிப்போரின் உடல்கள் தகனம் மட்டுமே செய்யப்பட வேண்டும் என்கிற கட்டளைச் சட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

'222ஆம் அத்தியாயமான தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு தொடர்பான கட்டளைச் சட்டம்' எனும் தலைப்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி திருத்தப்பட்ட புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இந்த வர்தமானி அறிவித்தலுக்கு அமைவாக, கொரோனாவால் மரணிப்பவர்களின் உடல்களை தகனம் செய்யவும், அடக்கம் செய்யவும் முடியும்.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராட்ச்சி

பட மூலாதாரம், PMO SRI LANKA

முந்தைய அறிவிப்பு

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக மரணிப்பவர்களின் அல்லது மரணித்துள்ளதாகச் சந்தேகிக்கப்படுகின்றவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படுதல் வேண்டுமென கட்டாயப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி, சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் வெளியிடப்பட்டது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது நபர் கடந்த வருடம் மார்ச் மாதம் 28ஆம் தேதி உயிரிழந்தார்.

அந்த வகையில் நேற்று வியாழக்கிழமை இரவு 9.00 மணி வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் 459 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மரணமடைந்ததாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கொரோனாவால் இறந்த முஸ்லிம்களின் உடல்களை இலங்கையில் தகனம் செய்யும் நடவடிக்கைக்கு எதிராக, அந்த நாட்டு முஸ்லிம்கள் பல்வேறு வழிகளிலும் தமது எதிர்ப்பைத் தெரிவித்து வந்தனர்.

அரசியல் ரீதியான பேச்சுவார்த்தை, ஆர்ப்பாட்டங்கள் மற்றும் நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்தல் போன்ற வழிகளில், கொரோனாவால் இறப்பவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு எதிராகவும், அவ்வுடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு கோரியும் முஸ்லிம் சமூகத்தினர் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

கொரோனாவால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு கோரி நடத்தப்பட்ட போராட்டங்களில் முஸ்லிம்கள் மட்டுமன்றி சிங்களவர், தமிழர் மற்றும் கிறிஸ்தவர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசுக்கு அழுத்தம்

கொரோனாவால் இறப்பவர்களின் உடல்களை பலவந்தமாக தகனம் செய்வதை நிறுத்தமாறு உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்தும் இலங்கை அரசாங்கத்துக்கு கோரிக்கைகளும் அழுத்தங்களும் விடுக்கப்பட்டு வந்தன.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதர், இது தொடர்பில் பல்வேறு அறிக்கைகளை விடுத்திருந்ததோடு, இலங்கை அரசாங்கத்தின் இந்தப் போக்கு தமக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்திருந்திருந்தார்.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் ஆரம்பமாகியுள்ள நிலையில், அதன் ஆணையாளர் மிஷல் பெச்சலட் ஜெரியா - இலங்கை தொடர்பில் சமர்ப்பித்துள்ள அறிக்கையிலும், கொரோனாவால் மரணிப்போரின் சடலங்கள் தகனம் செய்யப்படுகின்றமை குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.

"கோவிட் தொற்று காரணமாக மரணிப்பவர்களின் உடல்களை கட்டாய தகனம் செய்யும் இலங்கை அரசாங்கத்தின் கொள்கை காரணமாக, சிறுபான்மை முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்களுக்கு கவலையும், அழுத்தமும் ஏற்பட்டுள்ளது," என மிஷல் பெச்சலட் ஜெரியா கூறியிருந்தார்.

இம்ரான்

பட மூலாதாரம், FB/MAHINDA RAJAPAKSA

இதேவேளை, கடந்த 24ஆம் தேதி இலங்கைக்கு இரண்டுநாள் பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுகின்றமை தொடர்பில் இலங்கை ஆட்சியாளர்களுடன் பேசியதாக, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

என்ன சொன்னது அரசு?

இந்நிலையில்தான் கொரோனா காரணமாக மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியை வழங்கும் வர்த்தமானி அறிவித்தலை இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

கொரோனாவால் மரணிப்பவர்களின் உடல்களை தகனம் செய்யும் தீர்மானம் அரசியல் ரீதியாக எடுக்கப்பட்டவை அல்ல எனவும், சுகாதார அமைச்சு நியமித்த நிபுணர்களின் பரிந்துரைகளுக்கு அமையவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் இலங்கை ஆட்சியாளர்கள் தெரிவித்து வந்தனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட உடலை அடக்கம் செய்தால், அந்த உடலிலுள்ள வைரஸ், நிலத்தடி நீரைப் பாதிக்கும் என நிபுணர்கள் குழு தெரிவித்திருந்தது.

அரசியல் தலைவர்கள் கருத்து

திருத்தப்பட்ட புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டதை அடுத்து, இது தொடர்பில் அரசியல்வாதிகள் பலரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்; 'பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது, நீதி மேலோங்கியது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சாணக்கியன்; 'கோவிட்19 தொற்றால் மரணமடைந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை நாங்கள் வெற்றியாக கருதவில்லை. இதுஎங்களுடைய உரிமை. இது எங்களுக்கு கிடைத்த பரிசு அல்ல. அவர்கள் எப்போதோ கொடுத்திருக்க வேண்டிய உரிமை என்பதனை கருத்தில்கொள்ளவேண்டும். அனைத்து இலங்கையர்களுக்கும் சமத்துவத்தை மற்றும் தங்கள் உரிமையை அடைவதற்கான எங்கள் போராட்டத்தை என்றும் தொடருவோம்' என முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: