தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: தலைமையேற்கப் போவது சசிகலாவா, தினகரனா? அ.ம.மு.க பொதுக்குழுவில் பேசப்பட்டது என்ன?

சசிகலா தினகரன்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

`அம்மாவின் ஆட்சியை அமைக்க ஒன்றிணைந்து செயல்படுவோம்' என ஜெயலலிதா பிறந்த நாளன்று வி.கே. சசிகலா பேசியுள்ள நிலையில், இன்று அ.ம.மு.க பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள், தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. பொதுக்குழுவில் என்ன நடந்தது?

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முதல் பொதுக்கூட்டம் காணொளி வாயிலாக இன்று நடைபெற்றது. காலை 9 மணிக்குத் தொடங்கிய இந்தப் பொதுக்குழுவில் 2,670 பேர் வரையில் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் உள்ள 10 இடங்களை மையமாக வைத்து இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.

சபதமெடுத்த பொதுக்குழு!

பொதுக்குழு கூட்டத்தில், `ஜெயலலிதாவுடன் முப்பது ஆண்டுகாலம் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த சசிகலாவுக்கு நல்வாழ்த்துக்கள்' எனக் குறிப்பிட்டுவிட்டு, `ஜெயலலிதாவின் மக்கள் நலக் கொள்கைகளைப் பாதுகாக்கப் போராடும் பொதுச் செயலாளர் தினகரன் தலைமையின்கீழ் அம்மாவின் உண்மைத் தொண்டர்களாக என்றும் பயணிப்போம், குக்கர் சின்னத்தைப் பெற்றுக் கொடுத்து, கட்சியை அனைத்து நிலைகளிலும் கட்டியெழுப்பி காத்துவரும் டிடிவி தினகரனுக்குப் பாராட்டுகள்' எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்ந்து, `விவசாயப் பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள விவசாயிகள் விரும்பாத பிரிவுகள் குறித்துப் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண வேண்டும், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டு வரவேண்டும், எழுவர் விடுதலை' உள்பட பல தீர்மானங்களை நிறைவேற்றினர். மேலும், `வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட கட்சிக்கு நன்மை பயக்கும் அனைத்து முடிவுகளையும் எடுப்பதற்கு டிடிவி தினகரனுக்குப் பொதுக்குழு முழு அதிகாரம் வழங்குகிறது' எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூடவே, `தி.மு.கவுக்கு எதிராக தமிழகத்தைக் காக்க வேண்டிய பெரும் கடமை உள்ள நிலையில், அதை உணர்ந்து வரவிருக்கின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அப்பணியைச் செய்து முடிக்க பொதுக்குழு சபதம் எடுத்துள்ளது. சசிகலாவின் நல்வாழ்த்துகளுடன் செயல்படும் பொதுச்செயலாளர் தினகரனை தமிழக முதல்வர் அரியணையில் அமரவைக்க அயராது உழைப்பது' எனவும் பொதுக்குழுவில் பேசியுள்ளனர்.

பொதுக்குழுவில் என்ன நடந்தது?

சசிகலா தினகரன்

பட மூலாதாரம், Getty Images

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.ம.மு.கவின் தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் தினகரன் பங்கேற்றார். அவருடன் தேர்தல் பிரிவு செயலாளர் ஜி.செந்தமிழன் உள்பட சென்னை மண்டல நிர்வாகிகள் பங்கேற்றனர். இது தவிர, கோவை, மதுரை, தஞ்சாவூர், விழுப்புரம், கடலூர் உள்பட 10 பகுதிகளில் அ.ம.மு.க இணையத்தள பிரிவு ஏற்பாடு செய்திருந்த காணொளி கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன், ` கருணாநிதி முதல்வராவதற்கு எம்.ஜி.ஆர் பக்கபலமாக இருந்தார். அவரை தி.மு.கவில் இருந்து வெளியேற்றினர். இதனை ஏற்க விரும்பாத மக்கள், எம்.ஜி.ஆர் பக்கம் நின்றனர். தி.மு.கவின் வெற்றிக்காக அவர் செய்த தியாகத்தை உணர்ந்து அ.தி.மு.கவுக்கு மாபெரும் வெற்றியை மக்கள் தேடித் தந்தனர். அதன்பின்னர், ஜானகி அணி, ஜெயலலிதா அணியாகப் பிரிந்தபோதும், தொண்டர்கள் அம்மா பக்கம் நின்றனர். சொல்லப் போனால், துரோகத்தின் பக்கம் தமிழ்நாட்டு மக்கள் என்றுமே நின்றதில்லை' என்றார்.

நன்றி மறவாத கொங்கு!

தொடர்ந்து பேசிய மதுரை மண்டல பொறுப்பாளர் கே.கே.உமாதேவன், தனது பேச்சில் `தென்மண்டல செல்வாக்கு' குறித்து அழுத்தமாக சில வரிகளைப் பதிவு செய்தார். இதனை ஏற்காத கொங்கு மண்டல அ.ம.மு.க பொறுப்பாளர் உடுமலை சண்முகவேலு, `எப்போதுமே நன்றி மறவாத மண்டலமாக கொங்கு இருக்கும். எனவே, மண்டலங்களைப் பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. எங்கள் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்' என்றார். இதனை ஆமோதித்துப் பேசிய செந்தமிழன், ` தி.மு.க, அ.தி.முகவுக்கு அடுத்தபடியாக கிளைக் கழக கட்டமைப்பு வலுவாக உள்ளது நமக்கு மட்டும்தான். எனவே மண்டலங்களைப் பிரித்துப் பார்த்துப் பேச வேண்டாம்' என்றார்.

`நல்லவர்', `வல்லவர்' என்றார்கள்!

கூட்டத்தில் இறுதியாகப் பேசிய டி.டி.வி.தினகரன், ` டெல்லி உயர் நீதிமன்றம் நம்மைத் தனி அணியாக அங்கீகரித்தது. அதன்பிறகும் நம்மால் சின்னத்தைப் பயன்படுத்த முடியாமல் செய்தனர். அன்றைக்கு தொப்பி சின்னத்தில் நான் வாக்குக் கேட்டுச் சென்றபோது முதல்வர் எடப்பாடியும் அமைச்சர் ஜெயக்குமாரும் என்னை ஆதரித்து மக்களிடம் வாக்கு சேகரித்தனர். அன்று என்னை `நல்லவர்', `வல்லவர்' என்றெல்லாம் சொன்னார்கள். இன்றைக்கு மாற்றிப் பேசுகிறார்கள். நான் யார் என்பதே தெரியாமல் பேசுகிறார்கள்" என்றார் சிரித்தபடியே.

தொடர்ந்து பேசுகையில், `` சின்னம்மாவுக்கு தொண்டர்கள் 23 மணிநேரம் வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள். நம்மிடம் உணர்வுபூர்வமான ஆக்கப்பூர்வமான தொண்டர்கள் இருக்கிறார்கள். ஸ்டெர்லைட் விவகாரத்தில் 6 நாள்கள் அங்கே இருந்தோம். கஜா புயலின்போதும் நாம் களத்தில் நின்றோம். நீட் பிரச்னையிலும் நாம்தான் முதலில் நின்றோம். எனவே, மக்கள் நம்மை நம்புகிறார்கள். மக்களுக்காக உழைக்கிறோம். ஆளுமைமிக்க தலைமையாக நம்மைத்தான் மக்கள் கருதுகிறார்கள். தீய சக்தியான தி.மு.க ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது" என்றார்.

முதல் அணியா அ.ம.மு.க?

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

முடிவில், ` தொண்டர்களுக்காகத்தான் நான்கு ஆண்டுகளாக உழைத்து வருகிறேன். இரண்டாவது அணி, மூன்றாவது அணி என்றெல்லாம் சொல்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. நாம்தான் முதல் அணியாக இருக்கிறோம். நாம் அமைக்கும் கூட்டணிதான் வெற்றி பெறும். சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி உள்பட அனைத்தையும் நான் ஏற்பாடு செய்வேன்' என்றார்.

`நேற்று சசிகலா கூறியதையும் இன்று அ.ம.மு.க பொதுக்குழுவின் முடிவுகளையும் எப்படிப் பார்ப்பது?' என அ.ம.மு.க செய்தித் தொடர்பாளர் காசிநாத பாரதியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` சின்னம்மாவுக்கு 23 மணிநேரம் வரவேற்பு கொடுக்கப்படும் அளவுக்கான கட்டமைப்பை டி.டி.வி உருவாக்கி வைத்திருக்கிறார். ஐம்பதாண்டுகளாக இருக்கும் கட்சிகளைவிடவும் ஆர்.கே.நகரில் 45 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என இரண்டையும் டி.டி.வி தோற்கடித்தார். அந்த வரலாற்றை உருவாக்கிய அவரை நம்பித்தான் தொண்டர்களான நாங்கள் களத்தில் நிற்கிறோம்" என்கிறார்.

சசிகலாவின் எண்ணம்!

சசிகலா தினகரன்

பட மூலாதாரம், ANI

தொடர்ந்து பேசுகையில், `` பத்திரிகையாளர்களை எதிர்கொள்வது முதல் அனைத்தையும் தினகரன் எதிர்கொண்டு வருகிறார். ஆளுமை இல்லாத தலைவர்களுக்கு மத்தியில் ஆளுமையுள்ள தலைவராக அவர் பார்க்கப்படுகிறார். பொதுக்குழுவில் கூட்டணி அமைப்பதற்கும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்குமான அதிகாரம் அவருக்குக் கொடுக்கப்பட்டது. அ.தி.மு.கவை மீட்டெடுக்கும் முயற்சியில் அ.ம.மு.கவுக்கு சின்னம்மா ஆதரவுக் குரல் கொடுக்கலாம். இன்றுள்ள அ.தி.மு.க என்பது உண்மையான அ.தி.மு.க கிடையாது என்பது அனைவருக்கும் தெரியும். பா.ஜ.க சொன்ன காரணத்துக்காகத்தான் சின்னம்மாவையும் தினகரனையும் கட்சியில் இருந்து நீக்கினார்கள். உண்மையான அ.தி.மு.க ஆட்சியை அமைப்பதுதான் சின்னம்மாவின் எண்ணம். அதை நோக்கிய பயணத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்றார்.

`அ.ம.மு.க பொதுக்குழுவை எப்படிப் பார்க்கிறீர்கள்?' என அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` அ.தி.மு.கவின் பொதுக்குழுவும் செயற்குழுவும் நேரடியாகவே நடந்தது. கொரோனாவின் தாக்கம் குறைந்து சகஜமான நிலைக்குத் திரும்பிய பிறகும், கொரோனா பல்லவியை தினகரன் பாடிக் கொண்டு காணொளி காட்சி மூலம் தினகரன் பொதுக்குழுவை நடத்துகிறார். அவருடைய கட்சிக்குக் கூட்டத்தைக் கூட்டியதில் தவறில்லை. யாரை அவர்கள் அரியணையில் அமர வைக்கப் போகிறார்கள் என்பதுதான் புரியவில்லை. இந்த விவகாரத்தில் தினகரன் குழப்பத்தை உண்டு செய்கிறார்" என்கிறார்.

சசிகலா தலைமையா.... தினகரன் தலைமையா?

தொடர்ந்து பேசுகையில், `` பொதுக்குழுவில் இன்று பங்கேற்றவர்கள் எல்லாம் சின்னம்மா என்ற கொடியை உயர்த்திப் பிடிக்கின்றனர். இதன்மூலம் குழப்பமான அரசியலைச் செய்வதாகத்தான் பார்க்கிறேன். இது ஒரு ஏமாற்று வேலை. எல்லோரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என சசிகலா கூறினார். மறுபுறம் பொதுக்குழுவைக் கூட்டி தினகரன் வேறு ஒரு முடிவை அறிவிக்கிறார். மீண்டும் இவர்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து அறிவிப்பை வெளியிடுவது எனக் குழப்புகிறார்கள். இதுபோன்ற கூட்டங்களை எல்லாம் மிரட்டுவதற்காக தினகரன் கூட்டுவது வழக்கம்.

அ.ம.மு.க பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதுவும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக இல்லை. பொழுதுபோகாததால் இப்படியொரு கூட்டத்தை தினகரன் கூட்டியிருக்கிறார். அங்குள்ள நிர்வாகிகளைப் பார்க்கும்போது சொல்ல முடியாத துயரம் ஏற்படுகிறது. சின்னம்மாவின் தலைமையை தினகரன் ஏற்கப் போகிறாரா.. தினகரன் தலைமையை சசிகலா ஏற்கப் போகிறாரா.. இருவரில் யாருடைய அதிகாரத்தைத் தொண்டர்கள் ஏற்கப் போகிறார்கள். இந்தக் குழப்பத்துக்கு முதலில் அவர்கள் விடை சொல்லட்டும்" என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: