விவசாயிகள் போராட்டம்: மீண்டும் டிராக்டர் பேரணிக்கு அழைப்பு விடுக்கும் ராகேஷ் திகைத்: என்ன சொல்கிறது அரசு?

ராகேஷ்

பட மூலாதாரம், Getty Images

இன்று 25 பிப்ரவரி 2021, (வியாழக்கிழமை) இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெறாவிட்டால், டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகள் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவார்கள் என விவசாயிகள் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார் என இந்து தமிழ் திசையின் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

டெல்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளின் முக்கியத் தலைவராக இருப்பவர், பாரதிய கிசான் யூனியன் (பிகேயூ) தலைவர் ராகேஷ் திகைத். இவர், ராஜாஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று நடைபெற்ற மகா பஞ்சாயத்து கூட்டத்தில் பங்கேற்றார். இதில் ராகேஷ் டிகைத் பேசியதாவது:

டெல்லி பேரணிக்கு எப்போது வேண்டுமானாலும் அழைப்பு விடுக்கப்படும். இதற்கு விவசாயிகள் தயாராக இருக்க வேண்டும். இம்முறை இந்த அழைப்பு நாடாளுமன்ற முற்றுகைக்கானதாக இருக்கும். இதற்கான அறிவிப்பை நாங்கள் வெளியிடுவோம். அதன் பிறகு நீங்கள் டெல்லி நோக்கி புறப்படுங்கள். இம்முறை 4 லட்சம் டிராக்டர்களுக்கு பதிலாக 40 லட்சம் டிராக்டர்கள் டெல்லியில் இருக்க வேண்டும்.

நாடாளுமன்ற முற்றுகைக்கான தேதி, ஐக்கிய முன்னணி தலைவர்களால் முடிவு செய்யப்படும். டெல்லியில் இந்தியா கேட் அருகில் உள்ள பூங்காக்களில் உழவு செய்து பயிர்கள் வளர்க்கப்படும்.

ஜனவரி 26-ம் தேதி டிராக்டர் பேரணியின் போது விவசாயிகளை களங்கப்படுத்த சதி நடந்துள்ளது. நம் நாட்டு விவசாயிகள் தேசியக்கொடியை மிகவும் நேசிக்கின்றனர். ஆனால் அரசியல் தலைவர்களை அல்ல. இவ்வாறு ராகேஷ் டிகைத் பேசினார்.

டிராக்டர் பேரணிக்கு அழைப்பு

டெல்லியில் இரண்டாவது டிராக்டர் பேரணிக்கு ராகேஷ் திகைத் அழைப்பு விடுத்துள்ளது குறித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறும்போது, ''விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. வேளான் துறை நலனுக்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விவசாயிகளுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இப்போதுகூட எங்களிடம் எழுப்புவதற்கு அவர்களிடம் ஏதேனும் விஷயம் இருந்தால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்,'' எனக் கூறியுள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சட்டவிரோத மதமாற்ற தடைச் சட்ட மசோதா: உ.பி. பேரவையில் நிறைவேற்றம்

சட்டவிரோத மதமாற்றத் தடைச் சட்ட மசோதா, உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது என தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.

"சட்டவிரோத மதமாற்றத் தடைச் சட்ட மசோதா- 2021'யின்படி, எந்த ஒரு நபரும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, கட்டாயப்படுத்தியோ, செல்வாக்கைப் பயன்படுத்தியோ அல்லது திருமணம் என்ற பெயரிலோ மதமாற்றத்தில் ஈடுபடக் கூடாது. அதையும் மீறி, சட்டவிரோத மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ. 50,000 அபராதமும் விதிக்கப்படும். மேலும், பெண்ணை மதமாற்றம் செய்து நடைபெற்ற திருமணமும் சட்டப்படி செல்லாது என்று அறிவிக்கப்படும். அவ்வாறு விருப்பத்துடன் பெண் மதம் மாற முடிவு செய்தால், திருமணத்துக்குப் பிறகு மாவட்ட ஆட்சியரிடம் அதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, அனுமதி பெற வேண்டும்.

ஒருவேளை, அதிக எண்ணிக்கையிலான நபர்கள் ஒரே நேரத்தில் மதமாற்றம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த நடவடிக்கையில் ஈடுபட்ட சமூக அமைப்பின் பதிவு ரத்து செய்யப்படும் என்பதோடு, அந்த அமைப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படும்.

இந்த சட்டத்தின் கீழ் ஒருமுறை தண்டிக்கப்பட்டவர்கள், மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு இரட்டிப்பு தண்டனை விதிக்கப்படும்' என்று இந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மசோதா உத்தர பிரதேச சட்டப்பேரவையில் புதன்கிழமை கொண்டு வரப்பட்டது. இதை தேர்வுக் குழுக்கு அனுப்ப வேண்டும் என்று காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இறுதியில் அமளிக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது என அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

வேலைக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை; பஸ் ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை

பேருந்து

பட மூலாதாரம், Getty Images

கோவை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதை தினத்தந்தி செய்தியாக வெளியிட்டு இருக்கிறது.

14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி, தமிழக அரசை கண்டித்து இன்று (வியாழக்கிழமை) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

போக்குவரத்து கழகம் என்பது, அத்தியாவசிய பொது சேவை நிறுவனமாகும். போக்குவரத்து வசதியை முழுவதுமாக பொறுப்பேற்று நடத்தும் நிறுவனம் என்பதும், பொதுமக்களுக்கு அன்றாடம் சேவை செய்யக்கூடிய முக்கியமான பொறுப்புள்ள நிறுவனம் என்பதும் தொழிலாளர்கள் அனைவரும் அறிந்த ஒன்று.

அத்தியாவசிய சேவைக்குரிய நிறுவனம் என்பதால் போக்குவரத்து கழகத்தின் அனைத்து பணியாளர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளாமல் தவறாமல் பணிக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இன்று முதல் பணி ஓய்வு, வார ஓய்வு, மாற்றுப் பணி ஓய்வு எடுக்க அனுமதி பெற்றவர்களுக்கு ஓய்வு ரத்து செய்யப்பட்டு, பணிக்கு திரும்பும்படி அறிவிக்கப்படுகிறது. அதற்கான மாற்று ஓய்வு மற்றொரு நாளில் வழங்கப்படும். வேலை நிறுத்தப்போராட்டத்தில் கலந்துகொண்டு பணிக்கு வராதவர்கள் மீது தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

BBC Indian Sports Woman of the Year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: