BBC Indian Sportswoman of the Year 2020: மார்ச் 8இல் வெற்றியாளர் அறிவிப்பு

பிபிசி வீராங்கனை

பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனைக்கான விருதிற்கு வாக்குப்பதிவு காலம் நிறைவுக்கு வந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி முதல், உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்கள், தேர்வான ஐந்து போட்டியாளர்களில், தங்களுக்கு விருப்பமான விளையாட்டு வீராங்கனைக்கு வாக்களித்து வந்தனர்.

இந்த ஆண்டிற்கான போட்டியாளர்கள், துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனையான மனு பாக்கர், தடகள வீராங்கனை தூத்தி சந்த், சதுரங்க வீராங்கனை கொனேரு ஹம்பி, மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகாட் மற்றும் இந்திய ஹாக்கி அணியின் தற்போதைய கேப்டனான ராணி ராம்பால்.

அதிக வாக்குகளை வெல்லும் வீராங்கனை இந்த ஆண்டிற்கான பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருதை பெறுவார்.

வரும் மார்ச் 8ஆம் தேதி, டெல்லியில் காணொளிக்காட்சி மூலம் நடக்கவுள்ள நிகழ்ச்சியில் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். இது மட்டுமின்றி, பிபிசியின் வளர்ந்து வரும் வீராங்கனை விருதும் ஒரு வீராங்கனைக்கு அளிக்கப்படும்.

இந்த ஐந்து வீராங்கனைகளும், துறை சார்ந்த வல்லுநர்கள், ஊடகவியலாளர்கள் என்ற பெரிய குழுவால் தேர்வானவர்கள்.

கடந்த ஆண்டு நடந்த நிகழ்ச்சியில் பாட்மிட்டன் வீராங்கனையான பி.வி.சிந்து இந்த விருதை வென்றார். மேலும், தடகள வீராங்கனை பி.டி.உஷாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.

தேர்வாகியுள்ள ஐந்து போட்டியாளர்கள் குறித்து காண்போம்:

1. மனு பாக்கர், வயது: 19

விளையாட்டு: துப்பாக்கிச்சுடுதல்

கடந்த 2018ஆம் ஆண்டு, சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் விளையாட்டிற்கான அமைப்பின் கோப்பைக்காக போட்டியிட்ட மனு, 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றார். இதன்மூலம், இந்த விருதை வென்ற மிகவும் இளம் வயது வீராங்கனை ஆனார். 2018ஆம் ஆண்டு நடந்த யூத் ஒலிம்பிக் போட்டியிலும் தங்கம் வென்றார். அதே ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் பங்கெடுத்த அவர், 240.9 புள்ளிகள் எடுத்து பெண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றார். 2019ஆம் ஆண்ட்டு நடந்த உலக்கோப்பை போட்டியில் பெண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் அவர் தங்கம் வென்றார்.

காணொளிக் குறிப்பு, மனு பாக்கர்: 2020 பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்

2.தூத்தி சந்த், வயது: 26

விளையாட்டு: தடகளம்

பெண்கள் 100மீ ஓட்டப்பந்தயத்தில், இந்தியாவின் தற்போதைய சாம்பியன் தூத்தி சந்த். 2019ஆம் ஆண்டு நேபல்ஸில் நடந்த விளையாட்டில் பங்கெடுத்த அவர், 100மீ பிரிவில் தங்கம் வென்றார். 2020ஆம் ஆண்டு, இந்திய அரசு, அவருக்கு அர்ஜூனா விருது வழங்கி கௌரவித்தது. 2016ஆம் ஆண்டு நடந்த கோடைகால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தேர்வானார் தூத்தி. கோடைகால ஒலிம்பிக்கில் பெண்கள் 100மீ பிரிவில் கலந்துகொள்ள தேர்வான மூன்றாவது இந்திய வீராங்கனை இவரே. 2018ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடந்த ஆசியப்போட்டிகளில் அவர் தங்கம் வென்றார். 1998முதல், இந்த போட்டிகளில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இதுவே. 2014ஆம் ஆண்டு, 'பெண்களுக்கான ஹைபர் ஆண்ட்ரோஜெனிசம்' காரணங்களுக்காக அவர் விளையாட தடைவிதிக்கப்பட்டது. இதற்கு எதிராக வழக்கு தொடர்ந்த அவர், வழக்கில் வெற்றி பெற்றவுடன், 2015ஆம் ஆண்டு அவர் மீது போடப்பட்ட தடை நீக்கப்பட்டது. மிகவும் சாதாரண குடும்பத்திலிருந்து வந்துள்ளார் தூத்தி. தான் ஒரு ஓரினசேர்க்கையாளர் என்பதை வெளிப்படையாக அறிவித்த முதல் இந்திய தடகள வீராங்கனை இவரே.

காணொளிக் குறிப்பு, தூட்டி சந்த்: 2021 பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்

3. கொனேரு ஹம்பி, வயது: 33

விளையாட்டு: சதுரங்கம்

மகளிர் உலக ராப்பிட் சதுரங்க சாம்பியன், 2019

சதுரங்கத்தில் இந்தியாவின் மிகச்சிறந்த வீராங்கனை கொனேரு ஹம்பி. ஆந்திர மாநிலத்தில் பிறந்த அவர், சதுரங்கத்தில் திறமையானவராக உள்ளார் என்பதை அவரின் தந்தை மிகவும் இள வயதிலேயே கண்டறிந்தார். அதற்கு ஏற்றது போல, 2002 ஆம் ஆண்டு, வெறும் 15 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று, உலகிலேயே மிகவும் இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றவர் என்ற பெருமையை பெற்றார். இந்த சாதனையை சீனாவின் ஹௌ யீஃபன், 2008ஆம் ஆண்டு முறியடித்தார்.

உலக ராப்பிட் சதுரங்க போட்டிகளில் தற்போதைய சாம்பியன் கொனேரு. இந்த பட்டத்தை அவர் டிசம்பர் 2019ஆம் ஆண்டு வென்றார். குழந்தைக்காக இரண்டு ஆண்டுகள் விளையாட்டுகளிலிருந்து விலகி இருந்த அவர், திரும்பி வந்தவுடன் பெற்ற வெற்றி இது. இதைத்தொடர்ந்து, 2020ஆம் ஆண்டின் கைரன்ஸ் கோப்பையை வென்றார். 2003ஆம் ஆண்டு, கொனேரு ஹம்பிக்கு இந்திய அரசு அர்ஜூனா விருது வழங்கி கௌரவித்தது. இதுமட்டுமின்றி, 2007ஆம் ஆண்டு, அவர் பதம்ஸ்ரீ விருதையும் வென்றார்.

காணொளிக் குறிப்பு, கோனேரு ஹம்பி: 2021 பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்

4.வினேஷ் போகாட், வயது: 26

விளையாட்டு: மல்யுத்தம்

சர்வதேச மல்யுத்த வீராங்கனைகளைக்கொண்ட குடும்பத்தில் பிறந்த இவர், கடந்த 2018ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடந்த ஆசியபோட்டிகளில் தங்கம் வென்றார். இதன்மூலம், ஆசியபோட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். காமன்வெல்த் போட்டிகளில் இரண்டு தங்கமும் வென்றுள்ளார் போகாட்.

காமன்வெல்த் மற்றும் ஆசிய போட்டிகள் என இரண்டிலும் தங்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை இவரே. கடந்த செப்டம்பர் 2019ஆம் ஆண்டு, வெண்கலப்பதக்கம் வென்று, உலக சாம்பியன்ஷிப்பில் வென்றார். 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம், ரோம் ராங்கிங் சீரிஸில் தங்கம் வென்ற இவர், கடந்த ஆண்டு கொரோனா வைரஸையும் வென்றுள்ளார்.

காணொளிக் குறிப்பு, வினேஷ் போகாட்: தந்தை மறைவின்பின் மல்யுத்தத்தில் சாதித்த வீராங்கனை

5. ராணி ராம்பால், வயது: 26

விளையாட்டு: ஹாக்கி

தலைவி, இந்திய ஹாக்கி அணி

2020ஆம் ஆண்டிற்கான 'வேல்ட் கேம்ஸ் அதிலெடிக் ஆஃப் தி இயர்' விருதை வென்ற முதல் ஹாக்கி வீரர் என்ற பெருமையை அடைந்தார் ராணி. 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவிற்கு எதிராக விளையாடும்போது அவர் அடித்த ஒரு முக்கிய கோல், டோக்கியோ ஒலிம்பிக்கில் இவரும் இடம்பெற ஒரு நல்ல வாய்ப்பை அளித்தது.

2016ஆம் ஆண்டு ரியோவில் பங்கேற்ற இந்திய அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார். இந்தியாவின் சார்பில் 'உலகக்கோப்பை' போட்டிகளில் விளையாடிய மிகவும் இளம்வயது வீராங்கனை ராணி. 2010ஆம் நடந்த உலகக்கோப்பையில் இவர் 'இளம் வீராங்கனை' விருதும் பெற்றார்.

2018ஆம் ஆண்டு நடந்த ஆசிய போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றது இந்திய அணி. அதே ஆண்டு உலகக்கோப்பையில் காலிறுதி ஆட்டம் வரை சென்றது; காமன்வெல்த் போட்டியில் நான்காவதாக வந்தது.

ஹரியானாவில் ஒரு கூலித்தொழிலாயின் மகளாக பிறந்த ராணி, தன் உழைப்பால் முன்னேறி, 2020 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை வென்றார்.

காணொளிக் குறிப்பு, எளிமையான குடும்ப பின்னணி, கடின உழைப்பு – ஹாக்கி அணியின் கேப்டன் – இது ராணியின் வெற்றி கதை
BBC Indian Sports Woman of the Year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: