டெல்லி கலவர வழக்கு: ஆதாரங்கள், சமூக ஊடக பதிவுகள் - மர்மங்களும் திருப்பங்களும் - பகுதி 2

டெல்லி கலவர வழக்கு

பட மூலாதாரம், Getty Images

(கடந்த ஆண்டு நடந்த டெல்லி கலவரத்தின் ஓராண்டு நிலவரத்தை இரண்டு தொகுப்புகளாக பிபிசி தமிழ் வழங்குகிறது. அதில் முதல் தொகுப்பை நேற்று வழங்கியிருந்தோம். இரண்டாம் பகுதியை இந்த கட்டுரையில் படிக்கலாம்.)

பொதுவாக, விசாரணை அதிகாரியால் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய முடியாவிட்டால், குற்றம் சாட்டப்பட்டவர் தானாக ஜாமீன் பெறுவார். UAPA விசாரணை நிறுவனத்திற்கு கூடுதல் அதிகாரங்களை அளிப்பதால், விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் இருந்து 180 நாட்கள் வரை கால அவகாசம் கேட்கலாம். இந்த வழக்கில், முதல் குற்றப்பத்திரிகை 2020 செப்டம்பர் 17 அன்று தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது துணை குற்றப்பத்திரிகை 2020 நவம்பரில் தாக்கல் செய்யப்பட்டது.

காவல்துறையினரின் கூற்றுப்படி இந்த சதி, 2019 டிசம்பர் 4 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நாளில், 'முஸ்லிம் ஸ்டூடெண்ட் ஆஃப் ஜே.என்.யு' (எம்.எஸ்.ஜே) குழு உருவானது. ஷார்ஜில் இமாம், இந்த குழுவின் தீவிர உறுப்பினர் என்று வர்ணிக்கப்படுகிறார்.

ஷார்ஜில் இமாம், ஒரு 'தீவிர வகுப்புவாத குழுவான'. எம்.எஸ்.ஜே மூலம் ஸ்டூடண்ட் ஆஃப் ஜாமியா குழு மாணவர்களுடன் சேர்ந்தார். இந்த இரண்டு குழுக்களும் CAA பற்றி துண்டு பிரசுரங்களை விநியோகித்தன.

உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களிக்க CLICK HERE

சதித்திட்டத்திற்கு ஆதாரமாக காவல்துறை முன்வைக்கும் துண்டுப்பிரசுரம் ஏற்கனவே பகிரங்கமாக கிடைத்தது.

குற்றப்பத்திரிகையில், உமர் காலித், ஷார்ஜில் இமாமின் வழிகாட்டியாக விவரிக்கப்பட்டுள்ளார். மேலும் 2019 டிசம்பர் 7 ஆம் தேதி காலித் , யோகேந்திர யாதவுக்கு ஷார்ஜில் இமாமை அறிமுகப்படுத்தினார் என்று போலீஸ் காலவரிசை கூறுகிறது. யோகேந்திர யாதவ் ஒரு சமூக சேவகர் மற்றும் ஸ்வராஜ் இந்தியா கட்சியின் ஒருங்கிணைப்பாளர் .இந்த நாட்களில் விவசாயிகள் போராட்டத்திலும் அவர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

இதன் பின்னர், டிசம்பர் 8 ஆம் தேதி ஜங்புராவில், ஷார்ஜில் இமாம், யோகேந்திர யாதவ், உமர் காலித், நதீம் கான், பர்வேஸ் ஆலம், தஹிரா தாவூத், பிரசாந்த் டாண்டன் ஆகியோர் ஒரு கூட்டத்தை நடத்தி, ஏற்கனவே தயாரிக்கப்பட்ட முழு சாலை அடைப்பு சதித்திட்டத்தை செயல்படுத்த ஒப்புக்கொண்டனர். மாணவர்களை கவர்ந்திழுக்கும் பணி ஷார்ஜிலுக்கு வழங்கப்பட்டது. யுனைடெட் அகெயின்ஸ்ட் ஹேட், ஸ்வராஜ் அபியான் , இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட சிவில் சமூக மக்கள் தங்கள் ஆதரவை அளித்தனர்.

CAA க்கு எதிரான முதல் பெரிய போராட்டத்தை 'சதித்திட்டத்தின் முதல் கட்டம்' என்று காவல்துறை விவரிக்கிறது. குற்றப்பத்திரிகையில், ஒரு 'பாதுகாக்கப்பட்ட சாட்சியை' மேற்கோள் காட்டி, "டிசம்பர் 13 அன்று, உமர் காலித், ஷார்ஜிலை ஆஃசிப் இக்பால் தன்ஹாவுக்கு அறிமுகப்படுத்தி, சாலை அடைப்பு மற்றும் தர்ணாவுக்கு இடையேயான வித்தியாசத்தை விவரித்தார். இது இந்து அரசு என்பதால் அரசை வேருடன் களையும் பொருட்டு, இதற்காக, டெல்லியின் முஸ்லிம் பெரும்பான்மை பகுதி தேர்வுசெய்யப்பட்டது. ஜாமியாவின் கேட் எண் 7 இலிருந்து சாலை அடைப்பு தொடங்கியது,". என்று கூறப்பட்டுள்ளது.

நாட்டில் CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் ஆரம்பம், கலவரத்தை நோக்கிய முதல் படியாகும் என்று தில்லி காவல்துறை நம்புகிறது என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

குற்றப்பத்திரிகையில், வாட்ஸ்அப் சாட் மற்றும் பேஸ்புக் இடுகைகளின் ஸ்கிரீன் ஷாட்கள் மீண்டும் மீண்டும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் டெல்லி காவல்துறை சதி விஷயத்தை நிரூபிக்க முயன்றது.

முக்கியமாக டெல்லி ப்ரொடெஸ்ட் சாலிடாரிட்டி க்ரூப் (டி.பி.எஸ்.ஜி) என்ற வாட்ஸ்அப் குழுவை குற்றப்பத்திரிகை குறிப்பிடுகிறது. குற்றப்பத்திரிகையின் ஒரு பகுதியில், "ஜே.சி.சி (ஜாமியா ஒருங்கிணைப்புக் குழு), எம்.எஸ்.ஜே (முஸ்லிம் ஸ்டூடண்ட் ஆஃப் ஜேஎன்யூ) எஸ்.ஜே.எஃப் ( ஸ்டூடண்ட் ஆஃப் ஜாமியா), யுனைடெட் அகெயின்ஸ்ட் ஹேட், மற்றும் டெல்லி ப்ரொடெஸ்ட் சாலிடாரிட்டி க்ரூப் , இந்த குழுக்கள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து சதித்திட்டம் தீட்டின," என்று சொல்லப்பட்டது.

"ஜே.சி.சி மற்றும் எம்.எஸ்.ஜே போன்ற குழுக்களில் மாணவர்களும் ஆர்வலர்களும் இருந்தனர். அவர்கள் திட்டமிட்ட சதிகாரர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2019 டிசம்பரில், டி.பி.எஸ்.ஜி என்ற தொழில்முறை நபர்கள் குழு உருவாக்கப்பட்டது, அது மக்களை அச்சுறுத்துவதற்கான சதித்திட்டத்தை தயாரித்தது."என்று குற்றப்பத்திரிகை தெரிவிக்கிறது. சபா திவான் மற்றும் ஆவணப்படங்கள் தயாரிப்பாளர் ராகுல் ராய் ஆகியோரால், டிபிஎஸ்ஜி குழு 2019 டிசம்பர் 28 அன்று உருவாக்கப்பட்டது.

அமர்வு நீதிமன்றத்தில் தில்லி காவல்துறை சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையின் முதல் வரி இவ்வாறு கூறுகிறது: "டெல்லி கலவரத்தின் பின்னணியில் உள்ள பெரிய சதித்திட்டத்தை விசாரிப்பதே தற்போதைய வழக்கு. பிப்ரவரி 23 முதல் 25 வரை நிகழ்ந்த டெல்லி கலவரங்களின் சதித்திட்டத்தை உருவாக்கியது ஜே.என்.யூ முன்னாள் மாணவர் உமர் காலித். இதில் அவருடன் தொடர்புடைய பல குழுக்கள் உள்ளன ".

"இது பெரும் தயாரிப்புடன் திட்டமிடப்பட்ட ஒரு சதி என்று போலீசார் கூறுகிறார்கள். உமர் காலித் ஆத்திரமூட்டும் உரையை நிகழ்த்தினார். பிப்ரவரி 24-25 தேதிகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவிற்கு வருகை தந்தபோது, தெருக்களிலும் பொது இடங்களிலும் மக்கள் கூடினர். இந்தியாவில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற செய்தியை சர்வதேச அளவில் பரப்புவதே இதன் நோக்கம் ".

டெல்லி காவல்துறையினரின் கூற்றுப்படி, "இந்த நோக்கத்தை நிறைவேற்ற துப்பாக்கிகள், பெட்ரோல் குண்டுகள் மற்றும் அமில பாட்டில்கள் ஏற்பாடு செய்யப்பட்டன".

2020 ஜூன் மாதம் முதல், டெல்லி காவல்துறை உமர் காலித்தை "சதித்திட்டத்தின் தலைவர்" என்று அழைக்கிறது. ஆனால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு, 2020 செப்டம்பர் 13 அன்றுதான் காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

சதித்திட்டத்தின் கீழ், டெல்லியில் 21 இடங்களில் ஷாஹீன் பாக் போல CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடங்கப்படவேண்டும் என்று விசாரணையின்போது தெரியவந்ததாக காவல்துறை கூறியுள்ளது.

கலவரம் பற்றிய உடனடி தகவல்களை அளிக்கும் பல வாட்ஸ்அப் குழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் இந்த குழுக்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் விசாரணையின் போது தெரிய வந்ததாக சிறப்புப்பிரிவு கூறுகிறது.

ஜாகிர் நாயக்கின் பங்கு

ஜாகிர் நாயக்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜாகிர் நாயக்

டெல்லி கலவரத்திற்கான கயிறு இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக்கோடு இணைக்கப்பட்டுள்ளன. ஜாகிர் நாயக் தனது உரைகள் வாயிலாக வெறுப்பை தூண்டியதாகவும், பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர் இப்போது மலேசியாவில் உள்ளார். அவரை தன்னிடம் ஒப்படைக்குமாறு இந்தியா, மலேசிய அரசிடம் முறையிட்டது, அதை அங்குள்ள அரசு நிராகரித்தது.

"இந்த கலவரங்களுக்காக காலித் சைஃபி பி.எஃப்.ஐ யிலிருந்து நிதி திரட்டினார். அவரது பாஸ்போர்ட்டின் விவரங்களின்படி, அவர் இந்தியாவுக்கு வெளியே பயணம் செய்து ஆதரவு / நிதி பெற ஜாகிர் நாயக்கை சந்தித்தார் " என்று டெல்லி காவல்துறையின் சிறப்புப்பிரிவு கூறுகிறது.

இந்த கைதுகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் முன்னர், 2020 மார்ச் 11 அன்று மக்களவையில் டெல்லி கலவரங்கள் தொடர்பாக பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா , பிப்ரவரி 17 அன்று உமர் காலித் ஆற்றிய உரையை அவரை பெயரிடாமல் குறிப்பிட்டார். "பிப்ரவரி 17 அன்று இந்த உரை வழங்கப்பட்டது. இந்திய அரசு தனது மக்களுடன் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு வரும்போது உலகுக்கு தெரிவிப்போம். நாட்டின் ஆட்சியாளர்களுக்கு எதிராக நீங்கள் அனைவரும் வெளியே வருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று இதில் தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர், பிப்ரவரி 23-24 தேதிகளில் டெல்லியில் கலவரம் ஏற்பட்டது," என்று அமித் ஷா கூறினார்.

டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, 2020 பிப்ரவரி 17 அன்று மகாராஷ்டிராவின் அமராவதியில் உமர் காலித் ஆற்றிய உரையையும் குறிப்பிட்டுள்ளது.

உண்மையில், உமர் காலித் தனது உரையில், "அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவில் இருக்கும்போது, நாம் சாலைகளில் இறங்க வேண்டும். 24 ஆம் தேதி, டிரம்ப் வரும்போது, இந்திய அரசு நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கிறது என்று சொல்லுவோம். மகாத்மா காந்தியின் கொள்கைகள் காற்றில் பறக்கின்றன. இந்திய மக்கள் இந்தியாவின் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடுகிறார்கள் என்று கூறுவோம். அன்று நாம் பெரும் எண்ணிக்கையில் தெருக்களில் வருவோம்," என்றார்.

அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின்படி, மக்களை போராடச்சொல்வது குற்றம் அல்ல, இது ஜனநாயக உரிமை. ஆனால் வன்முறையைத் தூண்டுவது குற்றத்தின் கீழ் வரும்.

டெல்லி காவல்துறையின் பழைய காலவரிசை

டெல்லி மத வன்முறை: ஓராண்டுக்கு பிறகு நிலைமை எப்படி உள்ளது?

பட மூலாதாரம், Getty Images

உளவுத்துறையில் (ஐபி) பணிபுரிந்த அங்கித் ஷர்மா கொலை வழக்கில் டெல்லி காவல்துறை எஃப்.ஐ.ஆர் -65 இல் குற்றப்பத்திரிகையை 2020 ஜூன் மாதம் சமர்ப்பித்தது.

ஆனால், அங்கித் ஷர்மா கொலை வழக்கில் காவல்துறையினர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதற்கு முன்பே டெல்லி கலவரம் குறித்த காலவரிசையை (நிகழ்வுகளின் தகவல்கள்) முன்வைத்தனர். இந்த தொடர் நிகழ்வுகள்தான் டெல்லியில் நடந்த கலவரங்களுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

குற்றப்பத்திரிகையின் ஆரம்ப ஐந்து பக்கங்கள் கொலை தொடர்பான விசாரணை பற்றிய தகவல்களைத் தரவில்லை. ஆனால் 2019 டிசம்பர் முதல் நடைபெறும் CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், சமூக ஆர்வலர் ஹர்ஷ் மந்தரின் உரைகள் மற்றும் தலித் தலைவர் சந்திரசேகர் ஆசாத்தின் உரைகள், டெல்லி கலவரத்தின் அடித்தளம் என்று கூறுகிறது.

"டிசம்பர் 13 அன்று ஜாமியா பல்கலைக்கழக சாலையில் CAA-NRC ஐ எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டம் மூலம் தான் டெல்லி கலவரத்திற்கு அடித்தளம் போடப்பட்டது. 2000 பேர் ஜாமியா மெட்ரோ நிலையம் அருகே அனுமதியின்றி கூடி நாடாளுமன்றம் மற்றும் குடியரசுத்தலைவர் மாளிகை நோக்கி அணிவகுக்கத் தொடங்கினர்." அமைதியைக் காக்க போலீஸார் ஜாமியாவின் முதல் நம்பர் கேட்டில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை பின்னோக்கி விரட்டியடித்தனர். எதிர்ப்பாளர்கள் காவல்துறை மீது கற்களை வீசத் தொடங்கினர் மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்தினர்," என்று டெல்லி காவல்துறை தெரிவிக்கிறது.

2019 டிசம்பர் 15 அன்று, டெல்லி காவல்துறையினருக்கும் ஜாமியா மாணவர்களுக்கும் இடையிலான மோதலும் காவல்துறையினரின் காலவரிசை பட்டியலின் ஒரு பகுதியாக விவரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நள்ளிரவு வரை நீடித்தது. ஆகவே காவல்துறையினர் அதை டிசம்பர் 16 ஆம் தேதி என்று பதிவு செய்துள்ளனர்.

"மாலை 5.30 மணி முதல் மாலை 6 மணி வரை ஜாமியா மற்றும் சில முன்னாள் மாணவர்கள், உள்ளூர்வாசிகள் , ஜாமியா மற்றும் நியூ பிரண்ட்ஸ் காலனியில் பல்வேறு வழித்தடங்களில் ஆர்ப்பாட்டங்களின் போது பேருந்துகளுக்கு தீ வைத்தனர். காவல்துறையினர் போராட்டக்காரர்களை விரட்டியபோது திட்டத்தின் ஒரு பகுதியாக அவர்கள் ஜாமியா வளாகத்திற்கு உள்ளே நுழைந்தனர் . காவல்துறையினர் மீது வளாகத்திற்குள் இருந்து கல்லெறிந்து, குழாய் விளக்குகளால் தாக்கினர். ஆத்திரமூட்டும் கோஷங்களை எழுப்பினர். நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் ஜாமியா வளாகத்திற்குள் நுழைய வேண்டியிருந்தது மற்றும் 52 பேர் டெல்லி காவல்துறை சட்டத்தின் கீழ், சிறிது நேரம் காவலில் வைக்கப்பட்டனர்." என்று காவல்துறை தெரிவிக்கிறது.

டிசம்பர் 15 அன்று ஜாமியாவின் ஜாகிர் உசேன் நூலகத்தில் மாணவர்கள் மீது தாங்கள் பலப்பிரயோகம் செய்ததை காவல்துறை குறிப்பிடவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு, இந்த போலீஸ் நடவடிக்கையின் வீடியோவும் வெளிவந்தது. அதில் போலீஸ், நூலகத்தில் படிக்கும் மாணவர்களை அடிப்பதைக் காண முடிகிறது.

முன்னாள் ஐ.ஏ.எஸ் மற்றும் பிரபல சமூக ஆர்வலர் ஹர்ஷ் மந்தரின் அறிக்கையை ஆத்திரமூட்டும் உரையாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

காவல்துறை தனது அறிக்கையில், "ஹர்ஷ் மந்தர் டிசம்பர் 16 அன்று ஜாமியாவின் கேட் எண் 7 ஐ அடைந்தார். அங்கு அவர் எதிர்ப்பாளர்களுக்கு உச்சநீதிமன்றத்தை நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தினார். மேலும் அவர்கள் தெருக்களில் இறங்கி போராட வேண்டியிருக்கும் என்று கூறினார்".என்று குறிப்பிட்டுள்ளது.

ஹர்ஷ் மந்தர் மக்களைத் தூண்டுவதற்காக செயல்பட்டார் என்றும் அதற்கு ஆதாரமாக 2019 டிசம்பர் 16 அன்று அவர் ஆற்றிய உரையின் ஒரு சிறிய பகுதியை காவல்துறை குறிப்பிட்டுள்ளது. ஆனால் அவரது பேச்சு முழுவதும் காந்தியின் கொள்கைகள், பரஸ்பர அன்பு மற்றும் அமைதி பற்றியே இருந்தது. ஆனால் அது குறித்து போலீஸ் எதையும் குறிப்பிடவில்லை.

உண்மையில், முந்தைய நாள் இரவு அதாவது டெல்லி போலீஸ் தடியடி நடத்திய மறுநாள் ஹர்ஷ் மந்தர் டிசம்பர் 16 அன்று மாணவர்களுடன் பேச ஜாமியாவின் கேட் எண் 7 ஐ அடைந்தார்.

இங்கே அவர் ஒரு உரை நிகழ்த்தினார், பல விஷயங்களுக்கிடையில், "போராட்டம் யாருக்காக, எதற்காக என்று நான் ஒரு முழக்கத்தை எழுப்புவேன். போராட்டம் நம் நாட்டிற்காகவும், நமது அரசியலமைப்பிற்காகவும் என்று நீங்கள் சொல்லவேண்டும்." என்றார். அரசை விமர்சித்த அவர் CAA தவறு என்று கூறினார். நீதிமன்றங்களின் அணுகுமுறை குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.

"அரசியலமைப்பு வாழ்க, அன்பு வாழ்க" என்று கூறி இந்த உரையை அவர் முடித்தார்.

இந்த ஏழரை நிமிட முழுஉரை யூடியூபில் கிடைக்கிறது. அதை நீங்கள் இங்கே கேட்கலாம்.

ஷாஹின் பாகில் CAA-NRC க்கு எதிரான மகளிரின் 101 நாள் போராட்டத்தை கலவரத்தின் 'காலவரிசையின்' ஒரு பகுதியாக தில்லி காவல்துறை கருதுகிறது.

கபில் மிஸ்ரா விவகாரம்

கபில் மிஸ்ரா

பட மூலாதாரம், Getty Images

இதற்குப் பிறகு, பிப்ரவரி 22 அன்று ஜாஃப்ராபாத் மெட்ரோ நிலையம் அருகே கூடியிருந்த ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்களிடம் காவல்துறையின் 'காலவரிசை' வருகிறது. "66 அடி சாலையில் சந்திரசேகர் ஆசாதின் பாரத் பந்த் அழைப்பின்பேரில் கூட்டம் கூடியது. அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கூட்டம் காரணமாக மக்களின் நடமாட்டம் தடுக்கப்பட்டது," என்று போலீசார் கூறுகிறார்கள். இதன் பின்னர், பிப்ரவரி 23 மாலை ஜாஃப்ராபாத்- மெளஜ்பூர் எல்லையில் நடந்த வன்முறைகளுக்கு போலீஸ் அறிக்கை செல்கிறது.

ஆனால் அந்த நாள் பாஜக தலைவர் கபில் மிஸ்ரா வெளியிட்ட அறிக்கை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அவர் போலீஸின் முன்னிலையில் CAA க்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு மூன்று நாள் இறுதி எச்சரிக்கை விடுத்தார்.

கபில் மிஸ்ரா மெளஜ்பூரில் CAA க்கு ஆதரவாக நடந்த பேரணியை அடைந்தார். ஒரு காவல்துறை துணை ஆணையர் முன்னிலையில், "டி.சி.பி அவர்கள் நம் முன்னால் நிற்கிறார். உங்கள் அனைவரின் சார்பாக நான் சொல்கிறேன் . நாங்கள் டிரம்ப் புறப்படும் வரை அமைதியாக இருப்போம். ஆனால் அதற்குப்பின்னரும் சாலைகள் காலியாகாவிட்டால் நாங்கள் நீங்கள் சொல்வதைக் கூட கேட்க மாட்டோம். நீங்கள் (காவல்துறை) ஜாஃபராபாத் மற்றும் சந்த்பாக் ஆகிய இடங்களை விட்டு மக்களை வெளியேற வேண்டும். உங்களிடம் மன்றாடி கேட்டுக்கொள்கிறோம். இல்லையெனில் நாங்கள் சாலையில் வர வேண்டியிருக்கும்," என்று முழங்கினார்.

அதேநாள் மாலை, CAA க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மற்றும் ஆதரிக்கும் மக்களுக்கு இடையே மோதல் தொடங்கியது. ஆனால் டிசம்பர் 13 அன்று தொடங்கிய "காலவரிசையில்" பிப்ரவரி 23 அன்று கபில் மிஸ்ரா வெளியிட்ட அறிக்கையை காவல்துறை முற்றிலும் புறக்கணித்தது.

உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவுக்கு பதிலளித்த தில்லி காவல்துறை "இந்த பேச்சு டெல்லியில் கலவரத்திற்கு வழிவகுத்தது என்பதைக் குறிக்கும் எந்த ஆதாரமும் விசாரணையின் போது கிடைக்கவில்லை" என்று கூறியது.

"மெளஜ்பூரில் உள்ள ஜஃப்ராபாத் மெட்ரோ நிலையத்திற்கு செல்லும் பாதையை காலி செய்யக் கோரி ஆயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ளதாகவும், இரு தரப்பினருக்கும் இடையே கல்வீச்சு நடப்பதாகவும் பிப்ரவரி 23 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு எங்களுக்கு தகவல் கிடைத்தது," என்று டெல்லி போலீஸ் அறிக்கை கூறுகிறது.

கபில் மிஸ்ராவின் பேச்சு போலீஸ் பதிவுகளில் எங்கும் பதிவு செய்யப்படவில்லை, ஆனால் செப்டம்பர் மாதம் எஃப்.ஐ.ஆர் 59 பதிவு செய்யப்பட்டபோது, அதில் கபில் மிஸ்ராவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. 2020 ஜூலை 28 ஆம் தேதி கபில் மிஸ்ராவிடம் விசாரணை நடைபெற்றது என்றும் தான் எந்த உரையும் நிகழ்த்தவில்லை என்று மிஸ்ரா தெரிவித்ததாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"அந்த மக்களின் பிரச்சினைகளை காவல்துறைக்கு எடுத்துச்சொல்லவும், காவல்துறை உதவியுடன் சாலையைத் திறக்கும் யோசனையுடனும் நான் அங்கு சென்றேன். நான் எந்த உரையும் நிகழ்த்தவில்லை. மூன்று நாட்களில் சாலையைத் திறக்கும்படி காவல்துறையினரிடம் மட்டுமே சொன்னேன், இதனால் அப்பகுதி மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும். சாலையை திறக்கவில்லை என்றால் நாமும் ஒரு தர்ணாவில் அமர்வோம் என்பதே என் கூற்று," என்று கபில் மிஸ்ரா கூறினார்.

கபில் மிஸ்ராவின் விசாரணைக்கு பின்னர், இந்த வழக்கில் என்ன விசாரிக்கப்பட்டது என்பது குறித்து குற்றப்பத்திரிகையில் எந்த பகுப்பாய்வும் இல்லை.

டிரம்பின் இந்திய சுற்றுப்பயணம்

டிரம்பின் இந்திய சுற்றுப்பயணம்

பட மூலாதாரம், Getty Images

ஜூன் மாதம் அளிக்கப்பட்ட 'காலவரிசை'யில் டெல்லி காவல்துறையினரின் கூற்றுப்படி, "அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்திருந்தபோது இந்த கலவரங்கள் நடந்தன. இது தற்செயல் நிகழ்வு அல்ல. ஆனால் நாட்டின் தோற்றத்தை சர்வதேச அளவில் கெடுக்கும் வகையில் நன்கு சிந்தித்து தீட்டப்பட்ட சதித்திட்டம் இது. 'யுனைடெட் அகெயின்ஸ்ட் ஹேட் அமைப்பின் ' ஒரு பகுதியாக இருக்கும் காலித் சைஃபியுடன் தாஹிர் உசேன் தொடர்பு கொண்டதாகவும், உமர் காலித் அதன் நிறுவக உறுப்பினர் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஜனவரி 8 அன்று தாஹிர் உசேன் மற்றும் சைஃபியின் சந்திப்பு ஷாஹின் பாகில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில், மத்திய அரசை அதிர்ச்சியடையச் செய்வதற்கும், உலக அளவில் நாட்டின் பிம்பத்தை சேதப்படுத்துவதற்கும் CAA-NRC இல் 'பெரும்வெடிப்புகளுக்கு' ஏற்பாடுகள் செய்யப்பட்டன ".

"நிதியைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று உமர் காலித் ,தாஹிர் உசேனுக்கு உறுதியளித்தார். இந்த கலவரத்திற்கான நிதி மற்றும் அத்தியாவசியங்களை, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இண்டியா ஏற்பாடு செய்யும். கலவரத்தின் நேரம் டொனால்ட் டிரம்பின் இந்தியா வருகையின் போது அல்லது அதற்கு முன்னால் என்றும் முடிவு செய்யப்பட்டது." என்று குற்றப்பத்திரிகை கூறுகிறது.

டிரம்பின் இந்திய சுற்றுப்பயணம்

பட மூலாதாரம், Getty Images

ஆனால் செப்டம்பர் மாதம் சமர்பிக்கப்பட்ட சிறப்பு ப்பிரிவின் குற்றப்பத்திரிகையின்படி, அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வருகைக்கு முன்னர் 2020 ஜனவரி 8 ஆம் தேதி கலவரத்தைத் திட்டமிட ஒரு கூட்டம் நடந்தது.

எஃப்.ஐ.ஆர் 65/2020 இல், இந்த சந்திப்பு பற்றிய தகவல்கள், நிகழ்வுகளின் காலவரிசையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

டொனால்ட் ட்ரம்பின் வருகை குறித்த முதல் செய்தியை ஜனவரி 14 அன்று 'தி இந்துவின்' பத்திரிகையாளர் சுஹாசினி ஹைதர் வழங்கியதாக பிபிசி தனது விசாரணையில் கண்டறிந்தது.

முன்னதாக டிரம்ப்பின் வருகை குறித்து ஊடகங்களில் எந்த செய்தியும் வரவில்லை. டெல்லி காவல்துறையினரின் கூற்றுப்படி, "உமர் காலித்-தாஹிர் உசேன்-காலித் சைஃபி ஜனவரி 8 ஆம் தேதியே டிரம்ப்பின் இந்தியா பயணத்தின் போது கலவரங்களைத் தூண்டவும்,பெரிய வெடிப்புகளை நிகழ்த்தவும் திட்டம் தீட்டினர்."

ட்ரம்பின் வருகை குறித்த முதல் செய்தி ஜனவரி 14, அதாவது 6 நாட்களுக்குப் பிறகுதான் வெளிவந்தநிலையில் , இந்த சுற்றுப்பயணத்தைப் பற்றி அவர்கள் ஏற்கனவே அறிந்திருப்பது எப்படி சாத்தியமாகும். பிப்ரவரி 11 அன்று, இந்திய அரசும், அமெரிக்க அஹீபர் மாளிகையும் இந்தப்பயணம் குறித்த முதல் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டன.

வழக்கறிஞர் பிந்த்ராவின் 'சதித்திட்டம்'

தலைமை கான்ஸ்டபிள் ரத்தன்லால் கொலை செய்யப்பட்ட வழக்கில் எஃப்.ஐ.ஆர் -60 இல் 17 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில், ஷாஹின் பாக், சந்த் பாக், சி.ஏ.ஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு உணவு விநியோகம் செய்த வழக்கறிஞர் டி.எஸ். பிந்த்ராவை கலவரத்தின் முக்கிய சதிகாரர் என்று போலீசார் விவரித்தனர்.

சமூக சேவகர் மற்றும் ஸ்வராஜ் இந்தியாவின் தலைவர் யோகேந்திர யாதவ், டெல்லி பல்கலைக்கழக மாணவர் தலைவர் கன்வல்பிரீத் கவுர், ஜாமியா ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் சஃபுரா சர்கர், பிஞ்ச்ரா தோட் உறுப்பினர் தேவாங்கனா கலிதா மற்றும் நதாஷா நர்வால், ஜாமியா மாணவர் மீரன் ஹைதர் ஆகியோரை காவல்துறையினர் குற்றப்பத்திரிகையில் சேர்த்துள்ளனர்.

இவர்கள் மீது இதுவரை குற்றம் சாட்டப்படவில்லை. அவர்களின் பெயர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த வழக்கில் "மேலதிக விசாரணைக்குப் பிறகு", காவல்துறை ஒரு துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும்.

உண்மையில், பிப்ரவரி 24 அன்று, 42 வயதான ரத்தன்லால் , வன்முறை வெடித்த சந்த் பாக் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தார். கலகக்காரர்கள் அவரைத் தாக்கினர். அவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். இந்த வன்முறையில் டி.சி.பி அமித் குமார் ஷர்மா, ஏ.சி.பி அனுஜ்குமார் ஆகியோரும் பலத்த காயமடைந்தனர். டெல்லி கலவரத்தில் இறந்த முதல் நபர்களில் கான்ஸ்டபிள் ரத்தன்லால் ஒருவர்.

குற்றப்பத்திரிகை 60 - சாட்சிகளின் அறிக்கைகள்

சி.ஆர்.பி.சி.யின் 164 வது பிரிவின் கீழ் மூன்று நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள் குற்றப்பத்திரிகையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. நஜாம் அல் ஹசன், தெளகீர் மற்றும் குட்டு எனப்படும் சல்மான். இந்த மூன்று அறிக்கைகளையும் படித்தபோது, அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான விஷயங்களைச் சொன்னார்கள் என்பது தெரிகிறது. உதாரணமாக-

நஜாம்: "என்.ஆர்.சி மற்றும் சி.ஏ.ஏ க்கு எதிராக நீங்கள் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என்று பிந்த்ரா பேசத் தொடங்கினார். நான் உணவு மற்றும் மருத்துவ முகாமை ஏற்பாடு செய்வேன். முழு சீக்கிய சமூகமும் உங்களுடன் உள்ளது. நீங்கள் இப்போது எழுந்திருக்கவில்லை என்றால், 1984 இல் எங்கள் நிலைமை இருந்தது போல உங்கள் நிலைமை ஆகிவிடும். ஆர்ப்பாட்டங்கள் தொடங்கின. வெளியிலிருந்து மக்கள் அழைத்துவரப்பட்டனர். வக்கீல்கள் பானு பிரதாப், வழக்கறிஞர் பிந்த்ரா, யோகேந்திர யாதவ் மற்றும் ஜே.என்.யூ, ஜாமியா மற்றும் டி.யு மாணவர்கள் இருந்தனர். அவர்கள் அரசு மற்றும் என்.ஆர்.சிக்கு எதிராக பேசினார்கள்."

தெளகீர்: 2020 ஜனவரியில், சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி ஆகியவற்றின் எதிர்ப்பு , சந்த் பாக் சர்வீஸ் சாலையில் பிந்த்ராவின் லங்கரில்(உணவு விநியோகம்) தொடங்கியது. அங்கு நடைபெற்ற உரைகளில், டி.எஸ்.பிந்த்ரா 1984 கலவரத்தை அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டிருந்தார். இந்த அரசு CAA-NRC ஐ நடைமுறைப்படுத்துவதன் மூலம் சீக்கியர்கள் போல தலித் மற்றும் முஸ்லிம்களையும் ஒடுக்க விரும்புகிறது என்று கூறினார். ஜாமியா, ஜே.என்.யூ மற்றும் டி.யு மாணவர்கள், உரை நிகழ்த்தி ஆர்பாட்டத்தில் ஈடுபடுவது பற்றி பேசினார்கள்."

குட்டு எனப்படும் சல்மான்: சி.ஏ.ஏ-என்.ஆர்.சி முஸ்லிம் சமூகத்திற்கு எதிரானது என்று பிந்த்ரா கூறியிருந்தார். 1984 ல் சீக்கியர்களுக்கு நடந்தது போலவே உங்களுக்கும் நடக்கும். ஜாமியா-ஜே.என்.யுவில் இருந்து மாணவர்கள் மேடைக்கு வந்து உரை நிகழ்த்துவார்கள். ஆர்பாட்டம் இப்படியே நடந்துகொண்டிருந்தது.

மூன்று வெவ்வேறு நபர்களின் அறிக்கைகளில் இந்த விஷயங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக கூறப்பட்டுள்ளன.

இந்த அறிக்கைகளை 'பகுப்பாய்வு' செய்து டெல்லி காவல்துறை இவ்வாறு கூறுகிறது, "சலீம் கான், சலீம் முன்னா, டி.எஸ். பிந்த்ரா, சல்மான் சித்திக்கி, டாக்டர் ரிஸ்வான், அதஹர், ஷதாப், ரவீஷ், உபாசனா ,தபஸும் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தின் அமைப்பாளர்களாக இருந்தனர். மேலும் மக்களை கலவரம் செய்ய தூண்டியவர்களில் இவர்களும் அடங்குவார்கள். ஆனால் டெல்லி காவல்துறை இதுபோன்ற 'அழற்சி உரைகள்' பற்றிய எந்த மின்னணு ஆதாரங்களையும் முன்வைக்கவில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக, கான்ஸ்டபிள் ரத்தன்லாலைக் கொன்றது யார்?

கான்ஸ்டபிள் ரத்தன்லாலைக் கொன்றது யார்?

பட மூலாதாரம், DHEERAJ BARI

ரத்தன்லால் கொலை வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 17 பேர் சி.சி.டி.வி வீடியோ காட்சிகளின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அவர்கள் கையில் கம்புகள், இரும்பு தடிகள் மற்றும் கற்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தலைமை கான்ஸ்டபிள் ரத்தன்லாலின் பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, அவரது உடலில் 21 காயங்கள் இருந்தன. அதிகப்படியான ரத்தப்போக்கு காரணமாக அவர் இறந்தார் மற்றும் அவரது நுரையீரலில் 'துப்பாக்கியால் சுடப்பட்ட 'காயம் இருந்தது. ஆனால் காவல்துறையினரின் சி.சி.டி.வி காட்சிகளின்படி, அவர்கள் யாருடைய கையிலும் துப்பாக்கி-ரிவால்வர்கள் போன்ற துப்பாக்கிகள் இல்லை. மேலும், இந்த 17 பேரில் யார், எப்படி கான்ஸ்டபிள் ரத்தன்லாலை கொன்றார்கள் என்பது குறித்து முழு குற்றப்பத்திரிகையிலும் காவல்துறை எங்கும் சொல்லவில்லை.

அங்கித் ஷர்மாவின் கொலை

அங்கித் ஷர்மாவின் கொலை

பட மூலாதாரம், Getty Images

தாஹிர் உசேன் மீது டெல்லி கலவரம் தொடர்பான மொத்தம் 11 வழக்குகள் உள்ளன. எஃப்.ஐ.ஆர் 65 - அங்கித் சர்மா கொலை, எஃப்.ஐ.ஆர் 101 - சந்த் பாக் வன்முறையில் முக்கிய பங்கு, எஃப்.ஐ.ஆர் 59 - டெல்லி கலவரங்களுக்குப் பின்னால் ஆழ்ந்த சூழ்ச்சி. இவை மூன்று மிக முக்கியமான வழக்குகள். எஃப்.ஐ.ஆர் 101 மற்றும் 65 இரண்டும் ஏறக்குறைய ஒரே போல உள்ளன.

பிப்ரவரி 25 ம் தேதி மாலை 5 மணியளவில், அங்கித் பொருட்கள் வாங்க வீட்டிற்கு வெளியே சென்றார். ஆனால் அவர் நீண்ட நேரம் வரை திரும்பி வராதபோது, அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரைத் தேடத் தொடங்கினர். அவர் அருகில் வசிக்கும் காலுவுடன் வெளியே சென்றுள்ளார் என்று தெரிந்தது. அங்கித்தின் குடும்பத்தினர் அவரிடம் கேட்டபோது, சந்த் பாக் மசூதியில் இருந்து ஒரு இளைஞனைக்கொன்று உடல் வடிகாலில் வீசப்பட்டதாக காலு தெரிவித்தார். ரவீந்தர் குமார் தயால்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தபோது, முக்குளிப்போர் உதவியுடன் ஒரு சடலம் வெளியே எடுக்கப்பட்டது. அது அங்கித் என அடையாளம் காணப்பட்டது.

38 வது பத்தியில், சில சாட்சிகளை விசாரித்ததன் அடிப்படையில் போலீசார் கூறுகின்றனர், "பிப்ரவரி 25 அன்று, இந்துக்களின் ஒரு கும்பல் தாஹிர் உசேன் வீடான இ -7, கஜூரி காஸிலிருந்து சிறிது தொலைவில் நின்றது. 20-25 கலகக்காரர்கள் அங்கு இருந்தனர். அவர்கள் கைகளில் கம்புகள், கத்தி மற்றும் ஆயுதங்கள் இருந்தன. இரு தரப்பிலிருந்தும் மக்களை சமாதானப்படுத்தும் நோக்கத்துடன் அங்கித் கூட்டத்திலிருந்து வெளியே வந்தார். ஆனால் தாஹிர் உசேனின் ஆத்திரமூட்டல் காரணமாக கூட்டம் அங்கித்தை பிடித்தது. சந்த் பாக் பாலத்திற்கு அருகே பேக்கர் ஷாப்புக்கு கொண்டுசென்றது. அவர் அங்கு கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார் மற்றும் சடலம் வடிகாலில் வீசப்பட்டது."

அங்கித் ஷர்மாவின் கொலை

பட மூலாதாரம், Getty Images

ஏழு நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில், இந்த சம்பவம் குறித்த விவரங்களை காவல்துறை முன்வைத்துள்ளது. அங்கித்தின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் காலு என்ற நபரின் அறிக்கையும் அதில் உள்ளது. சம்பவத்திற்கு சற்று முன் வரை அவர் அங்கித்துடன் இருந்தார்.

இருப்பினும், அங்கித்தின் தந்தை ரவீந்தர் குமார் போலீசாருக்கு அளித்த புகாரில், அவரைக் கொன்ற பின்னர் சந்த் பாக் மசூதியில் இருந்து சடலம் தூக்கி எறியப்பட்டதாக கும்பல் தெரிவித்தது என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால் மசூதியில் அவர் கொல்லப்பட்டார் என்ற அங்கித்தின் தந்தையின் கூற்று விசாரிக்கப்பட்டதா என்று போலீஸ் அறிக்கையில் கூறப்படவில்லை.

ஆம் எனில், காவல்துறை அங்கு என்ன கண்டுபிடித்தது? வழக்கமாக காவல்துறை முதலில் புகார்தாரரின் கூற்றுக்களை விசாரிக்க்கும்.

இந்த பகுதியின் சி.சி.டி.வி கேமராக்கள் வேலை செய்யவில்லை அல்லது வன்முறையின் போது அவை உடைந்தன என்றும் காவல்துறை தனது விசாரணையில் கூறியுள்ளது.

இந்த வழக்கில் ஹசின் என்ற 20 வயது இளைஞரை 2020 மார்ச் 12 அன்று போலீசார் கைது செய்தனர். தொலைபேசி உரையாடலின் போது, அவர் ஒருவரைக் கொன்று வடிகாலில் வீசியதை ஒப்புக்கொண்டதை போலீஸ் தனது விசாரணையில் கண்டறிந்தது. அறிக்கையின் 48 வது பத்தியின் படி, தான் தனியாக இந்தக் கொலையை செய்ததாக விசாரணையின் போது அவர் ஒப்புக்கொண்டார்.

ஆனால் இந்த வழக்கில் மற்றொரு சாட்சி போலீசாருக்கு அளித்த அறிக்கையில், அங்கித் ஷர்மா கொலை செய்யப்பட்ட நேரத்தில் அப்பகுதியின் கவுன்சிலர் தாஹிர் உசேன் அங்கு வந்து மக்களை கொலைக்கு தூண்டினார் என்றும் அதன் பிறகு ஹனீஸுடன் சேர்ந்து அனஸ், ஜாவேத், ஷோயிப், ஆலம், கல்பாம் மற்றும் ஃபிரோஸ் அங்கித் ஷர்மாவை கொன்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

தாஹிர் உசேன் ,கலவரம் மற்றும் அங்கித் ஷர்மாவின் கொலையில் சம்மந்தப்பட்டுள்ளது தொடர்பாக இரண்டு முக்கிய விஷயங்களை போலீஸார் சொல்கிறார்கள்-

1. கல்-செங்கல் துண்டுகள், உடைந்த பாட்டில்கள், பாட்டில்களில் அமிலம் மற்றும் பெட்ரோல் குண்டுகளை , இ -7, கஜூரி காஸ், பிரதான கரவால் நகரில் உள்ள தாஹிர் உசேனின் வீட்டிலிருந்து தடயவியல் குழு கண்டெடுத்தது. கலகக்காரர்கள் தாஹிர் உசேன் வீட்டின் கூரையில் இருந்து ஆசிட் பாட்டில்கள், பெட்ரோல் குண்டுகள் மற்றும் கற்களை வீசினர். இந்த வீட்டின் முதல் தளத்தில் அவருக்கு ஒரு அலுவலகம் உள்ளது. இந்த வீட்டின் கூரை ஒரு ஏவுதளமாக பயன்படுத்தப்பட்டது. மேலும் தாஹிர் உசேனின் வீட்டிற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.

2. ஜனவரி 7 ஆம் தேதி அன்று தாஹிர் உசேன் தனது உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியை கஜூரி காஸ் காவல் நிலையத்தில் டெபாசிட் செய்திருந்தார். பின்னர் வன்முறை தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பு, அவர் கஜூரி காஸ் காவல் நிலையத்திலிருந்து தனது துப்பாக்கியை பெற்றுக்கொண்டார். அவர் ஏன் துப்பாக்கியை திரும்ப பெற்றார் என்பதற்கு தாஹிரிடமிருந்து திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை. இந்த கைத்துப்பாக்கியின் 100 தோட்டாக்களில், 22 பயன்படுத்தப்பட்டன. 14 தோட்டாக்களை காணவில்லை.

அங்கித் ஷர்மாவின் உடலில் 51 காயங்கள் இருந்தன. அவை கத்திகள், கம்புகள் அல்லது கூர்மையான ஆயுதங்களால் ஏற்பட்டவை. என்று அவரது பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது. அங்கித்தின் உடலில் துப்பாக்கி குண்டு காயம் எதுவும் காணப்படவில்லை.

இதே விசாரணையின் 54 வது பத்தியில், பிப்ரவரி 24 முதல் பிப்ரவரி 25 வரை தில்லி காவல்துறையின் பி.சி.ஆர் வேனை பல முறை அவர் அழைத்ததாக தாஹிர் உசேனின் அழைப்பு தரவுகளின் அடிப்படையில் காவல்துறை கூறுகிறது. பிப்ரவரி 24 அன்று, பிற்பகல் 2.50 மணி முதல் மாலை 6 மணி வரை பி.சி.ஆர், 6 முறை அழைக்கப்பட்டது. பிப்ரவரி 25 அன்று 3.50 மணி முதல் 4.35 மணி வரை தாஹிர் உசேனின் எண்ணிலிருந்து 6 முறை பி.சி.ஆர் அழைக்கப்பட்டது.

பிப்ரவரி 24 அன்று செய்யப்பட்ட ஆறு அழைப்புகளில், பி.சி.ஆருக்கு நான்கு அழைப்புகள் மட்டுமே சென்றன. அதில் மூன்று அழைப்புகள் தயால்பூர் காவல் நிலையத்துடன் இணைக்கப்பட்டன.

அவசர அதிகாரி கூறுகையில், சம்பவ இடத்தில் ஒரு பெரிய கூட்டம் இருந்தது, காவல்துறை எண்ணிக்கை குறைவாக இருந்தது. எனவே அவர்கள் தாஹிர் உசேனின் அவசர அழைப்பை ஏற்று அங்கு வர முடியவில்லை. காவல்துறையினர் இரவு தாமதமாக தாஹிர் உசேன் வீட்டை அடைந்தபோது, அருகிலுள்ள கடைகள் தீப்பற்றி எரிவதையும் , அவரது வீடு பாதுகாப்பாக இருப்பதையும் கண்டனர் என்று நெருக்கடி கால அதிகாரி தெரிவித்தார்.

தாஹிர் உசேன் அவரது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார். காணப்பட்டார். "இதைப் பார்த்தால், தாஹிர் உசேன் கலவரக்காரர்களுடன் இருந்ததாகத் தெரிகிறது, மேலும் அவர் சட்டத்திலிருந்து தப்பிக்க வேண்டுமென்றே பி.சி.ஆரை அழைத்தார் என்றும் தோன்றுகிறது,"என்று காவல்துறையினர் மேலும் கூறுகின்றனர்.

கைது செய்யப்படுவதற்கு முன்னர், தாஹிர் உசேன் ஒரு வீடியோ அறிக்கையை வெளியிட்டார். எந்த வீட்டின் கூரையிலிருந்து பாட்டில்கள் மற்றும் கற்கள் மீட்கப்பட்டனவோ அந்த வீட்டில் தான் வசிக்கவில்லை என்று அதில் அவர் கூறியிருந்தார். மேலும் கலவரத்தைத் தடுக்க பல முறை போலீஸை அழைக்க முயற்சித்ததாகவும், ஆனால் போலீஸ் வரவில்லை என்றும் தெரிவித்தார். தான் நிரபராதி என்று அவர் சொல்கிறார். திட்டமிட்டு இந்த வழக்கில் தான் சிக்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

BBC Indian Sports Woman of the Year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: