தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: சசிகலாவின் இலக்கு மார்ச் மாதம்.... இல்லாவிட்டால் அடுத்தகட்ட நகர்வுகள் என்ன?

சசிகலா

பட மூலாதாரம், SASIKALA NATRAJAN

    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கர்நாடகாவில் இருந்து தமிழகம் திரும்பிய சசிகலா, 16 நாள்களாகக் காட்டி வந்த மௌனத்தை ஜெயலலிதாவின் பிறந்தநாளில் கலைத்திருக்கிறார். `அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்திப்போம்' என சசிகலா கூறியிருப்பது சாத்தியமா?

சசிகலா மெசேஜ்!

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் தேதி விடுதலையான சசிகலா, கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாக தொடர் சிகிச்சையில் இருந்தார். கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி கார் மூலமாக சென்னை திரும்பிய அவருக்கு, வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். `இப்படியொரு வரவேற்பு தனக்குக் கிடைக்கும்' என சசிகலாவும் எதிர்பார்க்கவில்லை. இதன்பிறகு தியாகராய நகரில் உள்ள வீட்டில் தங்கியிருந்தபடியே அரசியல் நிகழ்வுகளைக் கவனித்து வந்தார். அவரைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டவர்களிடம், ` கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சற்று தனிமையில் இருக்கிறேன். விரைவில் உங்களைச் சந்திக்கிறேன்' என்று மட்டும் தெரிவித்திருந்தார்.

அதேநேரம், அ.தி.மு.கவில் நடக்கும் தேர்தல் பணிகள், பிரசாரக் கூட்டங்களையும் தொடர்ந்து கவனித்து வந்துள்ளார். `தன்னுடைய மௌனத்தை ஜெயலலிதா பிறந்தநாளில் கலைப்பார்' எனவும் அ.ம.மு.கவினர் பேசி வந்தனர். அதற்கேற்ப இன்று தி.நகர் வீட்டில் ஜெயலலிதாவின் படத்துக்கு மரியாதை செலுத்திய பின்னர் பேசிய சசிகலா, `கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நான், கழக உடன்பிறப்புகளின் வேண்டுதலால் நலம் பெற்று தமிழகம் வந்தேன். தமிழகத்தில் நூறாண்டுகளுக்கு மேலாகவும் நம் ஆட்சி இருக்க வேண்டும் என ஜெயலலிதா கூறிச் சென்றுள்ளார். புரட்சித் தலைவியின் உண்மையான உடன் பிறப்புகள் அனைவரும் ஒன்றிணைந்து நம் ஆட்சியை அமைக்க வேண்டும். அதைச் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நிச்சயம் நீங்கள் இதைச் செய்வீர்கள். நானும் உங்களுக்கு உடனிருப்பேன்' என்றார்.

அம்மாவின் ஆன்மா!

சசிகலா

பட மூலாதாரம், SASIKALA

சசிகலா பேசவிருப்பதை முன்கூட்டியே அறிந்த அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், ` ஜெயலலிதா இம்மண்ணுலகை விட்டு பிரிந்திருந்தாலும் அவர் உழைப்பாலும் தியாகத்தாலும் ஊட்டி வளர்த்த இந்த இயக்கத்திற்கு நன்மை செய்வோரை அன்போடு ஆசிர்வதித்தும் தீங்கு செய்ய நினைப்போரை அறத்தின் வழி நின்று அழித்தும் ஒழித்தும் அம்மாவின் ஆன்மா இந்த இயக்கத்தைக் காத்து வரும் என்பது நமது நம்பிக்கை. இன்னும் இரண்டே மாதங்களில் நாம் பலப்பரீட்சையை சந்திக்க உள்ளோம். இதில் நல்லாட்சி பெற்ற மக்களும் நண்பர்கள் பலரும் நம்பக்கம் இருந்தாலும் எப்படியாவது நமது படையை வீழ்த்த வேண்டும் என்ற தீய எண்ணத்தோடு துரோகிகள் செயல்படத் தொடங்கியிருக்கிறார்கள்' எனக் குறிப்பிட்டிருந்தனர்.

`சசிகலாவின் பேச்சு அ.தி.மு.கவுக்குள் சலசலப்பை ஏற்படுத்துமா?' என அ.தி.மு.கவின் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். தென்மாவட்டத்தைச் சேர்ந்த இவர், ஒருகாலத்தில் சசிகலாவின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். அவர் பேசுகையில், `` அ.தி.மு.கவுக்கு உரிமை கொண்டாடி சசிகலா தொடர்ந்துள்ள சிவில் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு மார்ச் 15 ஆம் தேதியன்று விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கில், தனக்கு சாதகமாக ஏதேனும் உத்தரவு வரும் எனவும் அவர் நம்புகிறார். ஆனால், சிவில் வழக்கு அவ்வளவு எளிதாக முடிவுக்கு வரும் என நாங்கள் நம்பவில்லை.

தென் மண்டலங்களில் பாதிப்பு?

சசிகலா

பட மூலாதாரம், SASIKALA

சிறையில் இருந்த வெளிவந்த நாளில் இருந்து அவரைச் சந்திக்க அ.தி.மு.க நிர்வாகிகள் யாரும் செல்லவில்லை. அவரும் யாரையும் சந்திக்க ஆர்வம் காட்டவில்லை. அ.தி.மு.கவில் இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா, சிறை சென்ற பிறகு துணைப் பொதுச் செயலாளர் தினகரனிடம் அதிகாரத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றார். இதன்பிறகு அமைச்சர்களுக்கும் தினகரனுக்கும் ஏற்பட்ட மோதலால், 2017 ஆகஸ்ட் மாதம் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டார். இவ்வளவுக்கும் தினகரனின் செயல்பாடுகள்தான் காரணமாக அமைந்தன. இன்று அதே தினகரன், சசிகலா பக்கம் நின்று கொண்டிருப்பதை அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர் விரும்பவில்லை" என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், `` முதலமைச்சராக நான்காண்டுகளாக அதிகாரத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, எந்த இடத்திலும் சசிகலாவைப் பற்றிப் பேசியதில்லை. அவர் டெல்லியில் பிரதமரை சந்தித்த பிறகே, `சசிகலாவை சேர்க்க 100 சதவிகிதம் வாய்ப்பில்லை என்றார். முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஒருவர், தென் மண்டலத்தில் உள்ள 13 மாவட்டங்களில் கணிசமான வாக்குகளை வைத்திருக்கக் கூடிய சசிகலாவின் சமூகத்தைப் புறக்கணிப்பாரா எனவும் நாங்கள் விவாதித்தோம். முதல்வர் உள்பட அமைச்சர்கள் பலருக்கும் தினகரன் மீதுதான் கோபம். சசிகலா சிறை சென்ற பிறகு முதல்வர் குறித்து தினகரன் பேசிய சில வார்த்தைகளும் இடைவெளியை அதிகப்படுத்தின. பிப்ரவரி 8 ஆம் தேதி தமிழகம் திரும்பிய சசிகலா, தனியாகத் தங்கியிருந்தால் அவரைச் சந்திப்பதில் சிக்கல்கள் எதுவும் இருந்திருக்காது. அவருடன் எப்போதும் தினகரன் இருக்கிறார். இதுவும் சிலரின் தயக்கங்களுக்கு காரணமாக அமைந்தது" என்கிறார்.

சசிகலா செல்லும் பாதை சரியா?

சசிகலா

பட மூலாதாரம், SASIKALA

மேலும், `` இன்றளவும் அ.ம.மு.க என்ற கட்சியின் அடையாளமாக சசிகலாவைத்தான் முன்னிறுத்துகின்றனர். அ.தி.மு.கவுக்கு உரிமை கொண்டாடக் கூடிய ஒருவரின் படம், இன்னொரு கட்சியின் அடையாளமாகக் காட்டப்படுகிறது. இது அ.தி.மு.கவின் உள்கட்சி விதிகளுக்கு முரணானது. இதன்படி பார்த்தால் அவரது உறுப்பினர் அங்கீகாரமே செல்லாததாகிவிடும். `என்னுடைய படத்தைப் பயன்படுத்தக் கூடாது' என அ.ம.மு.கவுக்கு அவர் லீகல் நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும். அப்படிச் செய்தாரா எனவும் தெரியவில்லை. ஆனால் சசிகலாவின் சகோதரர் திவாகரன் துவக்கிய அண்ணா திராவிடர் கழகத்துக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என சசிகலா அவருக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பினார்.

அந்தக் கோபத்தில் இன்று வரையில் சசிகலாவை சந்திக்க திவாகரன் செல்லவில்லை. சசிகலாவைச் சுற்றியுள்ளவர்களை நினைத்தும் தனது கவலையை திவாகரன் வெளிப்படுத்தியுள்ளார்.

தனது ஆதரவாளர்களிடம் அவர் பேசும்போது, `மறுபடியும் தவறான வழியில் செல்கிறார்கள். நான் அங்கே போய் நிற்பது சரியல்ல' என்றார். பத்தாண்டுகளாக தினகரனைக் கட்சியில் இருந்து அம்மா ஒதுக்கி வைத்திருந்தார். மீண்டும் கட்சிக்குள் வந்த பிறகு மென்மையான போக்குடன் செயல்பட்டிருந்தால் இவ்வளவு இழப்புகளைச் சந்திக்க வேண்டிய நிலை சசிகலாவுக்கு வந்திருக்காது" என்றார்.

களங்கம் ஏற்பட்டுவிடும்!

இதையடுத்து, சசிகலாவின் தற்போதைய மனநிலை குறித்து பிபிசி தமிழிடம் பெயர் குறிப்பிட விரும்பாமல் பேசிய அவரது ஆதரவாளர் ஒருவர், `` சசிகலாவை சந்திக்க அ.தி.மு.கவில் உள்ள பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். அவர் இப்போது நினைத்தாலும் சில அமைச்சர்களை தன்பக்கம் வரவழைத்து ஓரிரு நாள்களில் கட்சியைப் பிளவுபடுத்திக் காட்ட முடியும். `அப்படிச் செய்வதன் மூலம் அம்மாவின் பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுவிடும். நிதானமாகவே செயல்படுவோம்' என்ற மனநிலையில் இருக்கிறார். தனக்கு ஆதரவாக டெல்லியில் இருந்து தகவல் வரும் எனவும் நம்புகிறார். மார்ச் மாதத்தில் இணைப்பு நடக்காவிட்டால், தேர்தல் வரையில் சசிகலா அ.தி.மு.கவுக்கு உரிமை கொண்டாட வாய்ப்பில்லை. சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவருக்கான வாய்ப்புகள் வரலாம். அதற்குள் எடப்பாடி பழனிசாமி பலம் பெற்றுவிட்டால் அதற்கான வாய்ப்புகளும் குறைவு" என்கிறார்.

சசிகலா படத்தை அ.ம.மு.க பயன்படுத்துவது குறித்து, அ.ம.மு.க செய்தித் தொடர்பாளர் காசிநாத பாரதியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` இதில் எந்தத் தவறும் இல்லை. அம்பேத்கர், பெரியார் படங்களை அனைவருமே பயன்படுத்துகின்றனர். சின்னம்மாவின் தியாகத்தை ஏற்றுக் கொண்டு அ.தி.மு.கவில் இருந்து பிரிந்து வெளியே வந்தோம். தற்போது வரையில் அ.ம.மு.கவை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. நாங்கள் கட்சியைத் தொடங்கும்போதே, `அ.தி.மு.கவை மீட்கும் ஜனநாயகக் கருவியாக அ.ம.மு.க இருக்கும்' என்றோம். அதனால் சின்னம்மாவின் படத்தைப் பயன்படுத்த எங்களுக்கு உரிமை உள்ளது" என்கிறார்.

டி.டி.வியை ஏன் எதிர்க்கின்றனர்?

டிடிவி பேரவை

பட மூலாதாரம், TTV PERAVAI

தொடர்ந்து பேசியவர், `` சின்னம்மாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதற்கான காரணத்தையே அவர்கள் சொல்லவில்லை. கட்சி விரோத நடவடிக்கைகள் எதையாவது சின்னம்மா செய்தாரா.. ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்கு எதிராக வாக்களித்தார். அவரை அமைச்சர் பதவியில் அமர வைத்திருக்கிறார்கள். தினகரன் தகுதியுள்ளவராக இருப்பதால்தான், அவரைத் தள்ளிவைக்க வேண்டும் எனச் சிலர் பேசி வருகின்றனர். பெங்களூருவில் இருந்து சின்னம்மா வந்தபோது, 20 லட்சம் தொண்டர்கள் விடிய விடிய காத்திருந்தார்கள். அப்படிப்பட்ட ஒரு கட்டமைப்பை அவரால் ஏற்படுத்த முடியும். அரசியலில் மிகச் சிறந்த ஆளுமையாகவும் டி.டி.வி இருக்கிறார் என்பதால்தான் அவரை எதிர்க்கின்றனர்" என்கிறார்.

`ஒன்றிணைந்து தேர்தலைச் சந்திப்போம் என சசிகலா சொல்வது சாத்தியமா?' என அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை மகேஸ்வரியிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம். ``முதல்வரும் துணை முதல்வரும் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார்களோ, அதுதான் தொண்டர்களின் நிலைப்பாடு. சசிகலாவுக்கு 100 சதவிகிதம் இடமில்லை எனக் கூறிவிட்டார்கள். அம்மா உருவாக்கிக் கொடுத்த ராணுவக் கட்டுப்பாடு உள்ள இயக்கம் இது. தலைமை என்ன சொல்கிறதோ, அதனை அப்படியே பின்பற்றக் கூடிய தொண்டர்கள் இங்கு உள்ளனர். இந்த இயக்கத்துக்கு அப்பாற்பட்டு வெளியில் உள்ளவர்கள் கூறக்கூடிய தகவல்களுக்கு செவிமடுப்பவர்கள் இங்கு இல்லை" என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், `` அம்மாவின் நிர்வாகத் திறன், ஆளுமை, எதிரிகளுக்கு அஞ்சாத தீரம் போன்றவற்றை முதல்வரும் துணை முதல்வரும் பின்பற்றுவதை தொண்டர்கள் வரவேற்கின்றனர். மத்திய அரசுக்கு அடிமை என்றெல்லாம் பேசுகிறார்கள். ஆனால், எந்த இடத்திலும் நமது கொள்கைளையும் உரிமைகளையும் இந்த அரசு விட்டுக் கொடுக்கவில்லை. சொல்லப் போனால் தி.மு.க ஆட்சிக்காலத்தில் பலிகொடுக்கப்பட்ட உரிமைகளையெல்லாம் மீட்டெடுத்திருக்கிறோம். அம்மாவின் லட்சியங்களை ஈடேற்றும் அரசாக உள்ளது.

மலையைப் பெயர்க்கும் சிறிய உளியா?

இந்த ஆட்சியைக் குழப்புவதற்காக யார் யாரோ பேசுகிறார்கள். இன்று பேசுகிற சசிகலா, தினகரனை புதிதாகக் கட்சி தொடங்கவே அனுமதித்திருக்கக் கூடாது. அ.ம.மு.கவை பதிவு செய்யும் காலம் வரையில் அந்தக் கட்சியில் சசிகலா பொதுச் செயலாளராக இருந்தார். இன்றும், `அ.ம.மு.கவைத் தொடங்கியதே அ.தி.மு.கவை மீட்டெடுக்கத்தான்' என்கிறார். இது சிறிய உளியின் மூலம் மலையைப் பெயர்த்தெடுப்பது போல உள்ளது. அ.தி.மு.க என்பது இமயம். இதனைக் கைப்பற்றுவேன் எனக் கூறுவதை நகைச்சுவையாகத்தான் பார்க்கிறோம். இதற்கு எங்கள் தொண்டர்கள் செவிசாய்க்க மாட்டார்கள்" என்றார்.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அ.தி.மு.கவின் முதல்வர் வேட்பாளருக்கு ஆதரவு கொடுப்பாரா.. அ.ம.மு.க என்ற கட்சிக்கு ஆதரவு கொடுப்பாரா என்பது சசிகலாவுக்கு முக்கிய சவாலாக இருக்கும்.

காணொளிக் குறிப்பு, அதிமுகவுடன் அனுசரித்துப் போகிறாரா சசிகலா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: