தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: தினகரனை முதலமைச்சராக்க அ.ம.மு.க. தீர்மானம்; சசிகலாவின் நிலைப்பாடு என்ன?

பட மூலாதாரம், Getty Images
டி.டி.வி. தினகரனை முதலமைச்சராக்க வேண்டும் என அ.ம.மு.க. பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து நம் ஆட்சியை அமைக்க வேண்டுமென நேற்று வி.கே. சசிகலா கூறியிருந்த நிலையில், இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
டி.டி.வி. தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. நேரிலும் 10 இடங்களில் இருந்து காணொளிக் காட்சிகள் வாயிலாகவும் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மொத்தமாக 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அதில் ஒரு தீர்மானமாக, "தவறான நபர்களின் சுயநலத்தால் சிக்குண்டு இருக்கும் அ.இ.அ.தி.மு.கவை மீட்பதற்காகவும் மக்கள் நலக் கொள்கைகளை வாழ வைத்திடவும் சின்னம்மா அவர்களின் நல்வாழ்த்துக்களோடு செயல்படும் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களை தமிழக முதலமைச்சர் அரியணையில் அமரவைக்க அயராது உழைக்க சூளுரை ஏற்கிறது," எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், டி.டி.வி. தினகரனின் தலைமையில் தொடர்ந்து செயல்படவும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி உள்ளிட்ட விவகாரங்களில் முடிவெடுக்க தினகரனுக்கு அதிகாரமளித்தும் இந்தப் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், ANI TWITTER PAGE
பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அவற்றை ஜிஎஸ்டிக்குக் கீழ் கொண்டுவர வேண்டுமென்றும் இந்தப் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் பிறந்த நாளான நேற்று பேசிய சசிகலா, நாம் அனைவரும் ஒன்றிணைந்து நம் ஆட்சியை அமைக்க வேண்டுமென கூறியிருந்தார். மேலும் அவர் வெளியிடும் அறிக்கைகள் அனைத்திலும் அ.இ.அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் என்றே குறிப்பிடப்படுகிறது. அ.தி.மு.கவின் கொடியும் அந்த அறிக்கைகளில் பின்னணியாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், அ.ம.மு.கவின் சார்பில் டி.டி.வி. தினகரனை முதலமைச்சர் ஆக்குவோம் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இந்த முடிவின் காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
வி.கே. சசிகலா அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக தன்னை இன்னும் கூறிவரும் நிலையில், அ.ம.மு.கவின் நிலைப்பாடு முரண்பாடாக இல்லையா என மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணனிடம் கேட்டபோது, "இதில் எந்த முரண்பாடும் இல்லை. சசிகலா அ.தி.மு.க. தன்னுடையது என உரிமைகோருகிறார். வழக்கு மார்ச் 15ஆம் தேதிதான் விசாரணைக்கு வருகிறது. ஆனால், தேர்தல் நெருங்கிவிட்டது. இந்த நேரத்தில் எந்தக் கட்சியும் சும்மா இருக்க முடியாது. ஆகவே, அ.ம.மு.க. இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. இது சட்ட ரீதியில் மிகவும் சரி. ஒரு வேளை அ.ம.மு.க. வாக்குகளால் அ.தி.மு.க. தோல்வியடைந்தால், அப்போது இரு பிரிவும் சேரலாம். தினகரனும் மக்களைச் சந்தித்து அ.தி.மு.கவை மீட்பதற்காகத்தான் முதலமைச்சராவேன் என்கிறார். இதில் எந்த முரண்பாடும் இல்லை" என்றார்.
மேலும், சசிகலா அ.ம.மு.கவுக்காக பிரசாரம் செய்தாலும் சட்ட ரீதியாக பிரச்னை இல்லை என்கிறார் அவர். "ஏனென்றால் தோழமை கட்சிக்காக யார் வேண்டுமானாலும் பிரசாரம் செய்யலாம்" என்கிறார் லட்சுமணன்.
சசிகலா ஒன்றிணைந்து நம் ஆட்சியை அமைப்போம் என்று சொல்வதில் எந்தப் பிரச்னையும் இல்லை; இந்தத் தருணத்தில் தொண்டர்களிடமும் பொது மக்களிடமும் அவர் இவ்வாறுதான் சொல்ல முடியும். அதே நேரம், அ.தி.மு.கவை மீட்கும் நடவடிக்கையை அவர் தொடர்ந்து மேற்கொள்வார் என்கிறார் அவர்.
ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரையில், ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை மாநிலங்களின் வரிவிதிப்பு அதிகாரத்தை பறிப்பதாகக் கூறி அதனை எதிர்த்துவந்த நிலையில், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்களையும் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவர வேண்டுமென அ.ம.மு.க. தீர்மானம் நிறைவேற்றியிருப்பதும் பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது.

பிற செய்திகள்:
- "மீறப்படும் மனித உரிமை மீறல்கள்" - ஜெனீவா மாநாட்டில் இலங்கை மீது ஐ.நா உயர் ஆணையர் குற்றச்சாட்டு
- வீட்டு வேலை செய்த மனைவிக்கு இழப்பீடு கொடுக்க உத்தரவிட்ட சீன நீதிமன்றம்
- பாகிஸ்தான் பிரதமரை தனியாக சந்தித்த இலங்கை முஸ்லிம் எம்.பி.க்கள் - என்ன நடந்தது?
- சித்ரவதை செய்து பணிப்பெண் கொலை: சிங்கப்பூரில் அதிர்ச்சி சம்பவம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












