கொரோனா முஸ்லிம் சடல அடக்கத்துக்கு அனுமதி தந்த இலங்கை பிரதமர்

பட மூலாதாரம், Getty Images
இலங்கையில் சுமார் 11 மாத கால போராட்டத்துக்குப் பிறகு, கோவிட்-19 தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், நாடாளுமன்றத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நோக்கி புதன்கிழமை (பிப்ரவரி 10) இந்த விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பியினார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முஸ்லிம் அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.
முன்னதாக, நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார எழுப்பிய கேள்விக்கு, நீரின் ஊடாக கோவிட் வைரஸ் பரவாது என ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே பதிலளித்திருந்தார்.
அவரது பதிலை புதன்கிழமை மேற்கோள்காட்டியே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், முஸ்லிம் சடலஙகள் இறுதி மரியாதை தொடர்பான கேள்வியை எழுப்பினார்.
அப்போது அவர், ''நேற்றைய தினம் இந்த சபையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே பதிலொன்றை வழங்கியிருந்தார். நீரில் கோவிட் பரவாது என அவர் பதில் வழங்கியிருந்தார். அப்படியென்றால், தற்போது பிரதமரிடம் நாம் ஒரு விடயத்தை கேட்க விரும்புகிறோம். கோவிட்-19 தொற்றால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்ய இப்போதாவது அனுமதி தாருங்கள் என கேட்க விரும்புகிறேன்" என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த பிரதமர், ''நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்காரினால் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில், அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும்" என்று கூறினார்.
இலங்கையில் கோவிட் - 19 தொற்று 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பரவத்தொடங்கியது.
அதன் பின்னர், இலங்கையில் கொரோனா முதலாவது உயிரிழப்பு, 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ம் தேதி பதிவானது. சிலாபம் - மாரவில பகுதியைச் சேர்ந்த 60 வயதான நபர், கொரோனா தொற்றினால் முதலாவதாக இலங்கையில் உயிரிழந்தார்.
இவ்வாறான நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் முதலாவது முஸ்லிம் பிரஜையொருவர் நீர்கொழும்பு பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உயிரிழந்ததாக பதிவானது.
அன்றைய தினம் எந்தவித அறிவித்தலுமின்றி, குறித்த முஸ்லிம் பிரஜையின் ஜனாஸா தகனம் செய்யப்பட்ட நிலையில், முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்வதற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாகின.

பட மூலாதாரம், TWITTER
சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் பதில்
இதற்கிடையே, கோவிட் - 19 தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் வெளியிட்ட கருத்தை வைத்து, அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் துணைத் தலைவர் ரஸ்மின், "பிரதமர் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் வெளியிட்ட கருத்தை வர்த்தமானி ஊடாக அறிவிக்கும் வரை, அதை நம்பப் போவதில்லை என கூறினார்.
இதேவேளை, கோவிட் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் துணைத் தலைவர் கூறினார்.
ஜனாஸாக்களை அடக்கம் செய்து, தம்மை தாமே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ள தமது அமைப்பிலுள்ள தொண்டர்கள் தயாராகவுள்ளார்கள் எனவும் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் துணைத் தலைவர் ரஸ்மின் தெரிவிக்கின்றார்.
கோவிட் தொற்றில் உயிரிழந்த முஸ்லிம்கள்

பட மூலாதாரம், Getty Images
இலங்கையில் கோவிட் தொற்று காரணமாக இதுவரை 370 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப் பிரிவு கூறுகிறது.
இதில் கோவிட் தொற்று காரணமாக சுமார் 160க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் உயிரிழந்துள்ளதாக சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













