சசிகலா வருகை: `எதுவும் பேச கூடாது!' - அ.தி.மு.க தலைமையின் திடீர் உத்தரவு

சசிகலா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

`வி.கே.சசிகலா தொடர்பாக ஊடக விவாதங்களில் பங்கேற்க வேண்டாம்' என அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் இருந்து செய்தித் தொடர்பாளர்களுக்குத் தகவல் சென்றுள்ளது. என்ன காரணம்? என்பதை பார்க்கலாம்.

பெங்களூரு தாவனஹள்ளியில் இருந்து திங்கள்கிழமை காலையில் கிளம்பிய சசிகலா, மறுநாள் காலை 5 மணியளவில்தான் சென்னையை நெருங்கினார். அந்தளவுக்கு வழிநெடுகிலும் தொண்டர்களின் உற்சாக வரவேற்பில் மூழ்கிப் போனார். சுமார் 23 மணிநேரப் பயணத்தை நிறைவு செய்துவிட்டு தியாகராய நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா வீட்டில் சசிகலா ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். அவரது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் முதல்வரும் அமைச்சர்களும் உற்றுக் கவனித்து வருகின்றனர்.

`அ.தி.மு.க தலைமை மீது அதிருப்தியில் உள்ள சிலர், சசிகலாவை சந்திக்கலாம்' என்ற தகவலும் வெளியாகியுள்ளது. `அவ்வாறு சந்தித்தால் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும்' எனவும் அ.தி.மு.க தலைமை எச்சரித்துள்ளது. `சசிகலா வருகையால் ஏன் இவ்வளவு பதற்றம்?' என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, `சசிகலா வருகையால் எங்களுக்கு எந்தப் பதற்றமும் இல்லை. தினகரனுக்குத்தான் சசிகலா வருகையால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த இடைத்தேர்தலுக்கு முன்பே ஸ்டாலினை தினகரன் சந்தித்துப் பேசியிருக்கிறார். ஸ்டாலினின் பி டீம்தான் தினகரன். தமிழக இடைத்தேர்தலில் அ.தி.மு.க கொடிக்கும் சின்னத்துக்கும் எதிராக அ.ம.மு.க போட்டியிட்டது. எனவே அ.தி.மு.க-வுக்கு எப்படி உரிமை கோர முடியும்? என்றார்.

உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களிக்க CLICK HERE

தொடர்ந்து அவர் பேசுகையில், `எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அ.தி.மு.க எழுச்சியுடன் உள்ளது. தற்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் கட்சி சிறப்பாகச் செயல்படுகிறது. அனைவரும் ஒற்றுமையாகவே உள்ளனர். இங்கு எந்த ஸ்லீப்பர் செல்களும் இல்லை' என்றார்.

சசிகலா

பட மூலாதாரம், Getty Images

சசிகலா குறித்து அமைச்சர் ஜெயக்குமார் மட்டுமே தொடர்ந்து பேசி வருகிறார். `இந்த விவகாரத்தில் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர்கள் எந்தக் கருத்தையும் தெரிவிக்கக் கூடாது' என தலைமைக் கழகத்தில் இருந்து தகவல் சென்றுள்ளது. இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசிய அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் ஒருவர், ``சசிகலா வருகை குறித்த தகவல்களே நேற்று ஊடக விவாதங்களில் பிரதான இடத்தைப் பிடித்தன. இதனையொட்டி முதல்நாளே சில ஊடகங்கள், அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர்களிடம் முன் அனுமதியை வாங்கிவிட்டன. அவர்களும், `நிச்சயமாக வருகிறோம்' எனக் கூறிவிட்டனர். இதுதொடர்பான புரோமோக்களும் வெளியாயின.

இந்நிலையில், நேற்று தனியார் ஊடகம் ஒன்றில் பங்கேற்கச் சென்றுள்ளார் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் ஒருவர். அப்போது அவருக்குத் தலைமைக் கழகத்தில் இருந்து செல்போன் அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதையடுத்து ஊடக விவாதத்தில் பங்கேற்காமலேயே அவர் திரும்பிச் சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து குறளார் கோபிநாதன், மருது அழகுராஜ், புகழேந்தி, அன்வர்ராஜா, கோவை மகேஸ்வரி உள்ளிட்ட பலருக்கும் தலைமைக் கழகத்தில் இருந்து தகவல் சென்றுள்ளது. இதையடுத்து அவர்களும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கவில்லை. இதனால் அ.தி.மு.க சார்பாக கருத்து தெரிவிக்க யாரும் இல்லாத சூழல் ஏற்பட்டது. சசிகலா குறித்துப் பேச வேண்டாம் எனத் தலைமை கூறியதற்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை. இவ்வளவு பதற்றம் தேவையா என்பதுதான் எங்களின் கேள்வி" என்றார் விரிவாக.

``தலைமைக் கழகத்தில் இருந்து உத்தரவு வந்தது உண்மையா?" என அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தியிடம் பிபிசி தமிழுக்காகக் கேட்டோம். `` ஆமாம். தலைமையில் இருந்து தகவல் வந்ததால் என்னால் ஊடக விவாதத்தில் பங்கேற்க முடியவில்லை. சசிகலா, தினகரன் ஆகியோர் தொடர்பாக என்ன கேள்வியைக் கேட்டாலும் என்னால் பதில் அளிக்க முடியும். அவர்களைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. தலைமையின்கீழ் செயல்படுவதால் அவர்களது உத்தரவை மீறி ஊடக விவாதங்களில் பங்கேற்பது சரியானதாக இருக்காது. இதற்கு மேல் நான் சொல்வதற்கு எதுவும் இல்லை" என்றார்.

"அண்ணன் - தம்பி பிரச்னை"

இந்த நிலையில், கோவை பல்லடம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, "நம் எதிரி திமுக. நமக்குள் இருப்பது அண்ணன் தம்பி பிரச்னை. நாம் ஒற்றுமையுடன் வேலை செய்ய வேண்டும். எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டனர். அதற்காக நாம் பணியாற்ற வேண்டும்," என்று கூறினார்.

BBC Indian sports woman of the year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: