டி.டி.வி. தினகரனை நம்பிப் போனால் நடு ரோட்டில்தான் நிற்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், Edappadi Palanisamy

டி.டி.வி. தினகரனை நம்பிப்போன 18 பேரையும் நடுரோட்டில் விட்டார்; அவரை நம்பிப்போனால் நடு ரோட்டில்தான் நிற்க வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி விமர்சித்திருக்கிறார். ஜெயலலிதாவால் டி.டி.வி. தினகரன் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டவர் என்றும் முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டிருக்கிறார்.

முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம், காட்பாடி, அண்ணா கலையரங்கம் ஆகிய இடங்களில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார். இந்தத் தேர்தல் பிரசாரத்தின்போது தங்கள் ஆட்சியில் செய்த சாதனைகளை விளக்கிய அவர், தி.மு.க. மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அதேபோல டிடிவி தினகரன் மீது தாக்குதல் தொடுத்தார்.

உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களிக்க CLICK HERE

"ஒன்றரை வருடத்திற்கு முன்பாக ரத்துசெய்யப்பட்ட டெண்டரில் ஊழல் நடந்ததாக மு.க. ஸ்டாலின் மனு அளித்திருக்கிறார். ரத்து செய்யப்பட்ட டெண்டரில் எப்படி ஊழல் நடந்திருக்க முடியும்? இ - டெண்டரில் ஊழல் நடக்க வாய்ப்பே இல்லை. தி.மு.க. ஆட்சிக் காலத்தில் யாருக்கு டெண்டர் கொடுக்க வேண்டுமோ அவர்களுக்கு மட்டும் கொடுப்பார்கள். தி.மு.க. ஒரு கட்சி கிடையாது. அது ஒரு கார்ப்பரேட் கம்பனி" என்றார் எடப்பாடி பழனிச்சாமி.

தி.மு.க. வாரிசு அரசியலை முன்னிறுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். "என்னுடைய சொந்த உழைப்பில் வந்திருக்கிறேன். அடுத்தவன் உழைப்பில் வந்த உனக்கே இவ்வளவு கெத்து இருக்கிறது என்றால் சொந்த உழைப்பில் வந்த எனக்கு எவ்வளவு கெத்து இருக்கும்" என கேள்வி எழுப்பினார் முதல்வர்.

இதற்குப் பிறகு டிடிவி தினகரன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் முதல்வர்.

"அ.தி.மு.கவைப் பின்னடையச் செய்ய பலர் முயற்சி செய்துவருகிறார்கள். தற்போது டிடிவி தினகரன். அவர் 10 ஆண்டு காலம் கட்சியிலேயே கிடையாது. ஜெயலலிதா அவரை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே கூட நீக்கம் செய்துவைத்திருந்தார். அவர் மறைவுக்குப் பிறகு, கட்சியில் இணைந்து கொண்டதாக அவரே அறிவித்துக் கொண்டார். அவர் வந்து இணைந்த பிறகு கட்சியைக் கைப்பற்ற எவ்வளவு முயற்சி செய்தார்? எங்கள் எம்.எல்.ஏக்கள் 18 பேரை பிடித்து வைத்துக்கொண்டார். 18 பேரையும் நடு ரோட்டில் விட்டுவிட்டார். அவரை நம்பினால் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டும்" என்றார் முதலமைச்சர்.

இந்த பிரசாரப் பேச்சின்போது, ஆன்மீகப் பேச்சாளர் கிருபானந்த வாரியாரின் பிறந்த நாளான ஆகஸ்ட் 25ஆம் தேதியை அரசு விழாவாகக் கொண்டாடப்போவதாகவும் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

BBC Indian sports woman of the year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: