எம்ஜிஆர் முதல் தேர்தலிலேயே வென்ற ரகசியம் தெரியுமா?

பட மூலாதாரம், MGR FAN CLUB
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
1977ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எம்.ஜி.ஆர். துவங்கிய அ.தி.மு.க, சந்தித்த முதல் தேர்தலிலேயே அபார வெற்றி பெற்றது. புதிதாக ஆரம்பித்த ஒரு கட்சி இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றது இந்தியா முழுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
1971ல் இருந்து 1977க்குள் தமிழ்நாட்டிலும் தேசிய அளவிலும் பல சம்பவங்கள் நடந்திருந்தன. அதன் விளைவுகள் மிகத் தீவிரமானதாக இருந்தன. 1977ல் எம்.ஜி.ஆரின் வெற்றிக்கான முதல் படி என்பது, 1971ல் அவருக்கு அமைச்சரவையில் இடம் மறுக்கப்பட்டதில் துவங்கியது. இதற்கடுத்தடுத்து நடந்த பல சம்பவங்களின் உச்சகட்டமாகவே வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைப் பெற்றார் எம்.ஜி.ஆர்.
1971ஆம் ஆண்டுத் தேர்தலில் தி.மு.க ஒரு மிகப் வெற்றியைப் பெற்றிருந்தது. ஆனால், மாநிலத்தின் நிதி நிலைமை மிக மோசமாக இருந்தது. இதையடுத்து தி.மு.க அரசு எடுத்த ஒரு முடிவு, அக்கட்சிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியது.
அந்தத் தருணத்தில், மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு மத்திய அரசு சிறப்பு உதவித் தொகையை வழங்க முடிவெடுத்தது. ஆனால், ஏற்கனவே மதுவிலக்கை அமல்படுத்தியிருந்த தமிழக அரசுக்கு அந்த உதவித் தொகையை வழங்க மறுத்தது. இதனால், தமிழ்நாட்டில் மதுவிலக்கை நீக்க முடிவு செய்தார் கருணாநிதி. 1971 ஆகஸ்ட் 30ஆம் தேதி மதுவிலக்கு ரத்துசெய்யப்பட்டது.
ஏற்கெனவே அதிருப்தியில் இருந்த எம்.ஜி.ஆர், மதுவிலக்குக் கொள்கை ரத்து செய்யப்பட்டதை கண்டித்துப் பேச ஆரம்பித்தார். மேலும், கட்சிப் பதவிகளில் இருப்பவர்கள், குடும்பத்திற்கு வாங்கியிருக்கும் சொத்துகள் இருந்தால் கணக்குக் காட்ட வேண்டும் என்றும் பேசினார்.
இதைடுத்து, எம்.ஜி.ஆரிடம் விளக்கம் கேட்டு பொதுச் செயலாளர் நெடுஞ்செழியன் நோட்டீஸ் அனுப்பினார். கட்சியிலிருந்து அவர் இடைநீக்கமும் செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் சமரசம் செய்துவைக்க பெரியார் முயற்சி செய்தார். ஆனால், அது நடக்கவில்லை. ராஜாஜி எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக நின்றார். காமராஜர் இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்றார்.

பட மூலாதாரம், TWITTER
முடிவில், 1972 அக்டோபர் 18ஆம் தேதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் துவங்கினார் எம்.ஜி.ஆர். தி.மு.க. அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் அடங்கிய புகாரை ஆளுநரிடமும் குடியரசுத் தலைவரிடமும் அளித்தார் எம்.ஜி.ஆர்.
திண்டுக்கல்லில் நடந்த இடைத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் மாயத்தேவர் பெரும் வெற்றிபெற, தி.மு.க.வின் வேட்பாளரான பொன். முத்துராமலிங்கம் மூன்றாவது இடத்தையே பிடித்தார்.
இந்த நிலையில்தான் 1975 ஜூன் 26ஆம் தேதி உள்நாட்டுப் பாதுகாப்பை மனதில் கொண்டு, நாடு முழுவதும் நெருக்கடி நிலையை அமல்படுத்துவதாக பிரதமர் இந்திரா காந்தி அறிவித்தார். எதிர்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பத்திரிகை தணிக்கை அமல்படுத்தப்பட்டது.
நெருக்கடி நிலையை எதிர்த்துவந்த தி.மு.க. அரசு 1976 ஜனவரி 31ஆம் தேதி கலைக்கப்பட்டது. மு.க. ஸ்டாலின், வைகோ, நீலநாராயணன், ஆற்காடு வீராசாமி, முரசொலி மாறன், வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட தி.மு.க தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், நெருக்கடி நிலையை அ.தி.மு.கவின் செயற்குழு வரவேற்றுத் தீர்மானம் நிறைவேற்றியது.
ஒன்றரை ஆண்டுகாலம் நீடித்த நெருக்கடி நிலை 1977 துவக்கத்தில் தளர்த்தப்பட்டது. நாடு முழுவதும் மார்ச் மாதம் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடத்தப்படும் என பிரதமர் இந்திரா காந்தி அறிவித்தார். கைது செய்யப்பட்டிருந்த எதிர்கட்சித் தலைவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
அறிவித்தபடி மார்ச் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் - அ.தி.மு.க. கூட்டணி மொத்தமுள்ள 40 இடங்களில் 36 இடங்களைக் கைப்பற்றியபோதே, வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலின் முடிவு என்னவாக இருக்கும் எனத் தெரிந்தது.
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது மிகத் தீவிரமாக இயங்கிய, காமராஜர், ராஜாஜி, பெரியார் ஆகிய தமிழ்நாட்டின் மூன்று மூத்த தலைவர்களுமே காலமாகியிருந்தனர்.
நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு தி.மு.கவிலிருந்து அதன் பொதுச் செயலாளர் நெடுஞ்செழியன் வெளியேறினார். மக்கள் தி.மு.க. என்ற புதிய கட்சியையும் ஆரம்பித்தார். இந்தக் கட்சியில் மாதவன், க. ராசாராம் உள்ளிட்டவர்கள் இணைந்தனர்.

பட மூலாதாரம், MGR fan club
இதற்குப் பிறகு தமிழக சட்டமன்ற தேர்தல் ஜூன் மாதம் நடக்குமென அறிவிக்கப்பட்டது. நடந்து முடிந்திருந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க., ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து போட்டியிட்டிருந்தாலும் அதில் கிடைத்த படுதோல்வியால், ஜனதாவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தி.மு.கவைவிட்டு விலகின. தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே தி.மு.கவுடன் இருந்தது. திராவிடர் கழகம் மானசீக ஆதரவை அளித்தது.
அ.தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் இணைந்தன. கடந்த முறை இந்திரா காங்கிரசுடன் கூட்டணி வைத்திருந்த எம்.ஜி.ஆர். இந்த முறை அதற்கு கதவைச் சாத்திவிட்டார். ஆகவே, இந்திரா காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்தது. ஸ்தாபன காங்கிரஸ் தேசிய அளவில் ஜனதா கட்சியோடு இணைந்துவிட்டாலும், தமிழ்நாட்டில் பல தலைவர்கள் இ. காங்கிரசில் சேர்ந்தனர். இந்திரா காங்கிரஸ் தற்போது இந்திய தேசிய காங்கிரசாகியிருந்தது. இரண்டிலும் சேராமல் இருந்த குமரி ஆனந்தன் போன்றவர்கள் தனித்துச் செயல்பட முடிவுசெய்தனர்.
இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அக்கட்சி 200 தொகுதிகளில் போட்டியிட்டது. சி.பி.எம். இருபது இடங்களில் போட்டியிட்டது.
தி.மு.க. கூட்டணியில் அக்கட்சி 230 தொகுதியிலும் மீதமுள்ள தொகுதிகளில் தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிட்டன. ஜனதா கட்சி 233 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்திரா காங்கிரஸ் 198 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 32 இடங்களிலும் போட்டியிட்டன. எம்.ஜி.ஆர். அருப்புக்கோட்டை தொகுதியிலிருந்தும் கருணாநிதி அண்ணா நகர் தொகுதியிலிருந்தும் போட்டியிட்டனர்.

பட மூலாதாரம், MGR Rasigan FB
அ.தி.மு.க. - தி.மு.க. - இ. காங்கிரஸ் - ஜனதா என நான்கு முனைப் போட்டி நிலவிய நிலையில், வாக்குப் பதிவு ஜூன் மாதம் 12, 14 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றது.
ஜூன் 15ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது ஒட்டுமொத்த இந்தியாவும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தது. முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்திருந்த அ.தி.மு.க. கூட்டணி அபார வெற்றிபெற்றிருந்தது. இந்தக் கூட்டணியில் அ.தி.மு.க. மட்டும் 130 இடங்களைப் பிடித்திருந்தது. அதன் கூட்டணிக் கட்சியான சி.பி.எம். 12 தொகுதிகளைப் பிடித்தது. தி.மு.க. 48 இடங்களையும் காங்கிரஸ் கட்சி 27 இடங்களையும் அதன் கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5 இடங்களையும் பெற்றன. ஜனதாக் கட்சிக்கு வெறும் பத்து இடங்களே கிடைத்தன. ஃபார்வர்ட் பிளாக், ஐயுஎம்எல் ஆகியவை தலா ஒரு தொகுதியைப் பெற்றன.
தி.மு.க. முதன்முதலில் ஆட்சியைப் பிடித்தபோது, பல கட்சிக் கூட்டணியை அமைத்துத்தான் பெரும் வெற்றியைப் பெற முடிந்தது. ஆனால், மிகச் சிறிய கூட்டணியின் மூலம் அதைச் சாதித்தார் எம்.ஜி.ஆர். இந்தியாவில் ஒரு திரைப்பட நடிகர் கட்சி ஆரம்பித்து, ஆட்சியைப் பிடித்தது அதுவே முதல் முறை.
"அண்ணாவின் வழியில் இருந்து மாறாது மக்களுக்கு நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவோம்" என்றார் எம்.ஜி.ஆர். "அண்ணாவின் வழியில் தி.மு.கழகம் ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியாக தன் பணியைத் தொடங்கும்" என்றார் கருணாநிதி.
தேர்தல் முடிவுகள் வெளிவந்த சமயத்தில் எம்.ஜி.ஆர். 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். அதில் இன்னும் சில காட்சிகள் பாக்கியிருந்தன. அதனை முடித்துக்கொடுத்துவிட்டு முதல்வர் பதவியேற்க முடிவுசெய்தார் எம்.ஜி.ஆர்.
அதன்படி, தேர்தல் முடிவுகள் வெளியாகி 15 நாட்களுக்குப் பிறகு, ஜூன் 30, 1977ல் முதலமைச்சராகப் பதவியேற்றார் எம்.ஜி.ஆர். அவரது அமைச்சரவையில் நாஞ்சில் மனோகரன், எட்மண்ட், பண்ருட்டி ராமச்சந்திரன், ஆர்.எம். வீரப்பன், அரங்கநாயகம், காளிமுத்து உள்ளிட்ட 13 பேர் இடம்பெற்றிருந்தனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












