பிரான்ஸ் கத்திக்குத்து படுகொலை- மலேசிய முன்னாள் பிரதமரின் கருத்தால் சர்ச்சை
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்!!தேசிய, சர்வதேச மற்றும் தமிழ்நாடு சார்ந்த இன்றைய பல முக்கிய செய்திகளை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.முக்கிய நிகழ்வுகளும், செய்தி முன்னேற்றங்களும் இங்கே பகிரப்படும்.

பட மூலாதாரம், Getty Images
பிரான்ஸின் நீஸ் நகரில் உள்ள தேவாலயத்தில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கத்தியால் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது வெளியிட்டுள்ள கருத்துகள் சர்ச்சையாகியுள்ளன.
வரலாற்றில் பல முஸ்லிம்களை கொன்ற நாடு பிரான்ஸ். தற்போது இஸ்லாமியர்கள் அவர்களின் கோபத்தை காட்ட உரிமை உள்ளது என்று மகாதீர் முகம்மது தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகத்தை இழிவாக சித்தரிக்கும் கேலிச்சித்திரத்தை காண்பித்த ஆசிரியரை சில தினங்களுக்கு முன்பு ஒரு பள்ளி மாணவரால் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதை தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்ட மகாதீர், வெவ்வேறு கலாசாரத்தையும் மதிக்கத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் தன்னுடைய மேற்கத்திய நடைமுறை, மதிப்புகள், வழக்கத்ததை திணிக்க முற்படக்கூடாது என்றும் பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங்கை குறிப்பிட்டு, மகாதீர் முகம்மது கடுமையாக சாடினார்.

பட மூலாதாரம், Mahathir Mohamad Twitter
அவர் பதிவிட்ட 13க்கும் அதிகமான தகவல்களில் சில விதி மீறல் பதிவு எனக்கூறி ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.
அவரது கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் நூற்றுக்கணக்கில் ட்விட்டர் பயனர்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

பட மூலாதாரம், Reuters
இந்திய பிரதமர் கண்டனம்
பிரான்ஸில் தேவாலயத்தில் நடந்த படுகொலையை கண்டிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் பயங்கரவாதத்துக்கு எதிரான பிரான்ஸின் நடவடிக்கையில் இந்தியா துணைநிற்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
பிரான்ஸில் என்ன நடந்தது?
பிரான்ஸின் நீஸ் நகரில் உள்ள தேவாலயத்தில் மிகவும் கொடூரமான முறையில் இரு பெண்கள் உள்பட மூன்று பேர் கத்தியால் தாக்கிக் கொல்லப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தில் தாக்குதலில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் பிடித்தபோது, அல்லாஹு அக்பர் என தொடர்ச்சியாக அவர் முழக்கமிட்டதாக நீஸ் நகர மேயர் தெரிவித்தார்.
தேவாலயத்துக்குள் ஒரு வயோதிக பெண், ஒரு ஆண் கழுத்தறுபட்டு கொல்லப்பட்டனர். பல முறை கத்திக்குத்து காயங்களுடன் உயிர் தப்பிய பெண் அருகே உள்ள தேநீரகத்தை அடைந்த நிலையில், அவரது உயிரும் பிரிந்தது.
உயிரிழந்தவர்களில் ஒருவர் அந்த தேவாலயத்தின் பராமரிப்பாளர். தாக்குதல் நடந்தபோது, பிரார்த்தனைக்காக வந்த பலரும் தேவாலய வளாகத்துக்குள்ளேயே இருந்துள்ளனர். அப்போது தாக்குதலை நேரில் பார்த்த ஒருவர், தேவாலய வளாகத்தில் இருந்த அபாய ஒலியை எழுப்பி எச்சரிக்கை செய்தார்.

.நடந்த சம்பவம், இஸ்லாமியவாத பயங்கரவாதம் என்று பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங் தெரிவித்தார்.
இதுபோன்ற தாக்குதல்கள் மூலம் பிரான்ஸ் நாடு கொண்டிருக்கும் கோட்பாடுகள், மதிப்புகள் ஆகியவற்றை பலவீனப்படுத்த முடியாது என்று அவர் தெரிவித்தார்.
தாக்குதல் நடந்த நீஸ் நகரத்தின் மேயர் எஸ்ட்ரோஸி, நாட்டில் இஸ்லாமியவாத ஃபாசிஸவாதத்தின் அடையாளம் காணப்படுவதாக கூறினார்.
முன்னதாக, தாக்குதல் நடந்த சில மணி நேரத்தில் அந்த பகுதியை அதிபர் எமானுவேல் மக்ரோங் பார்வையிட்டார். நாடு முழுவதும் தேவாலயங்கள், பள்ளிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.
இதேவேளை, பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் தொடர்பாக அந்நாட்டுப் பிரதமர் விளக்கம் அளிக்கும் முன்பாக நீஸ் நகர தேவாலய தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் பேசிய பிரதமர், நாட்டை உலுக்கும் இந்த கடுமையான புதிய சவாலை அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நீஸ் நகர தாக்குதல் சம்பவத்தை முஸ்லிம் மத நம்பிக்கைக்கான பிரெஞ்சு கவுன்சில் கண்டித்துள்ளது.
பிரான்ஸில் சமீபத்திய ஆண்டுகளில் நடந்த மிகக்கொடூரமான தாக்குதல்களில் ஒன்றாக நீஸ் நகர தேவாலய வளாக தாக்குதல் சம்பவம் கருதப்படுகிறது.
2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் தேதி பிரான்ஸ் தேசிய தினத்தின்போது 31 வயதான துனீசியாவைச் சேர்ந்த நபர் கொண்டாட்டத்துக்காக குழுமியிருந்த கூட்டத்தினர் மீது டிரக்கை ஏற்றினார். அந்த சம்பவத்தில் 86 பேர் கொல்லப்பட்டனர்.
அதன் சில நாட்களில் பாதிரியார் ஜாக்குவெஸ் ஹேமல், காலை திருப்பலியின்போது கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
வடமேற்கு பாரிஸில் உள்ள பள்ளி அருகே அக்டோபர் மாத தொடக்கத்தில் சாமுவேல் பாத்தி என்ற ஆசிரியை தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். பள்ளி மாணவர்களிடம் முகமது நபியின் கேலிச்சித்திரத்தை காண்பித்த சில நாட்களில் அவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுபோன்ற சம்பவங்கள், பிரான்ஸில் கடும்போக்குவாத இஸ்லாமியவாதம் தலைதூக்கி வருவதையும் அவற்றை ஒடுக்க அந்நாட்டு அரசு எடுத்து வரும் நடவடிக்கை காரணமாக அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் அங்கமாக இஸ்லாமியர்களுக்கு எதிராக பிரான்ஸில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை துருக்கி உள்ளிட்ட சில நாடுகளை கோபமூட்டியும் வருகிறது.
இதன் அடையாளமாகவே, பிரான்ஸ் சரக்குகளை புறக்கணிக்க வேண்டும் என துருக்கி அதிபர் ரிசெப் தயீப் எர்துவான் சமீபத்தில் பகிரங்கமாகவே அழைப்பு விடுத்தார்.

இலங்கை: மரண தண்டனை கைதிக்கான ஆதரவை வாபஸ் பெற்றார் மனோ

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்கும் கோரிக்கை மீது முன்பு வழங்கிய தனது ஆதரவை தமிழ் முற்போ்ககு கூட்டணியின் தலைவர் மனோ கணேஷன் திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியிடம் அளித்த கோரிக்கை மனுவில், எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேஷன் உள்ளிட்ட அந்த கூட்டணியின் உறுப்பினர்கள் சிலர் கையெழுத்திட்டிருந்த நிலையில் அது மிகப்பெரிய விவாதமாக மாறியிருந்தது.
முன்னர் அவரது பொதுமன்னிப்புக்கு ஆதரவாக விடுத்த கோரிக்கையை நியாயப்படுத்திய மனோ கணேஷன், துமிந்த சில்வா, பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர மீது துப்பாக்கி சூடு நடத்தும் சந்தர்ப்பத்தில் அவர் மது போதையில் இருந்துள்ளதாகவும், அவர் 5 வருடங்களை சிறைச்சாலையில் கழித்துள்ளதாகவும் கூறியிருந்தார்.
ஐந்து வருடங்களை, சிறையில் கழித்த துமிந்த சில்வா, அங்கே சீர்திருத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் தனது அறிக்கையில் மனோ கணேஷன் கூறியிருந்தார்.
இதனால், துமிந்த சில்வாவிற்கு சமூகத்துடன் வாழ சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என மனோ கணேஷன் வலியுறுத்தியிருந்தார்.
மேலும் அந்த அறிக்கையில் அரசியல் சார்ந்த குற்றச் செயல்களில் ஈடுபட்ட தமிழ் கைதிகளும் சிறைகளில் உள்ளார்கள் என மனோ கணேஷன் கூறிய கருத்துக்கு, சமூக வலைதளங்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் மத்தியில் கடும் விமர்சனம் காணப்பட்டது.

பட மூலாதாரம், PRASADH
தமிழ் அரசியல் கைதிகள் குற்றம் இழைத்ததாகவே மனோ கணேஷன் தனது அறிக்கையில் கூறியிருந்ததை சுட்டிக்காட்டி, அவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வந்தது.
துப்பாக்கி சூடு நடத்தப்படும் சந்தர்ப்பத்தில் துமிந்த சில்வா மது போதையில் இருந்துள்ளார் எனவும், தமிழ் அரசியல் கைதிகள் குற்றம் இழைத்தவர்கள் எனவும் மனோ கணேஷன் பொது வெளியில் கருத்து வெளியிட்டமையே அந்த விமர்சனங்களுக்கான காரணமாக அமைந்தது.
இவ்வாறாக வெளியான விமர்சனங்களை அடுத்து, கொழும்பில் வியாழக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பின்போது, மனோ கணேஷன் தமது நிலை குறித்து தெளிவூட்டினார்,.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை உறுதிப்படுத்துவதற்காகவும், அவர்களின் பிரச்சனையை தேசிய அரங்குக்கு கொண்டு செல்வதற்காகவே துமிந்த சில்வாவின் பொது மன்னிப்பு மனுவில் கையெழுத்திட்டதாகவும் அவர் கூறினார்.
ஆனால், தனது நிலைப்பாட்டை பலரும் தவறுதலாக புரிந்து கொண்டதன் காரணமாக, துமிந்த சில்வாவின் விடுதலைக்கு தெரிவித்த ஆதரவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக மனோ கணேஷன் தெரிவித்தார்.


- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா காலத்தில் பாதுகாப்பாக உடலுறவு வைத்துக்கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது கிடைக்கும்?
- கொரோனா சானிடைசர் தரமானதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?
- கொரோனா வைரஸ்: குணமடைய சிலருக்கு தாமதம் ஆவது ஏன்?

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












