மஹிந்த ராஜபக்ஷவுடன் 9 ஆண்டுகளுக்கு பின்னர் கலந்துரையாடிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு - விரிவான தகவல்கள்

பட மூலாதாரம், SRI LANKA PM MEDIA UNIT
- எழுதியவர், ரஞ்ஜன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் தமிழர் பிரச்சினை தொடர்பில் சுமார் 9 வருடங்களுக்குப் பின்னர் உத்தியோகப்பூர்வ பேச்சுவார்த்தையொன்றை நடத்தியுள்ளது.
அலரி மாளிகையில் கடந்த 4ஆம் தேதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பொன்றை பிரதமர் நடத்தினார். இலங்கையிலுள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த சந்திப்பை புறக்கணித்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம் அந்த சந்திப்பில் கலந்துகொண்டது.
அந்த கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தமிழர் பிரச்சினைகள் அடங்கிய ஆவணமொன்றை கையளித்திருந்தனர்.
அத்துடன் தம்முடனான சந்திப்பொன்றை ஏற்படுத்தி தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரியது. இதையடுத்து, அன்று மாலையே தமது இல்லத்துக்கு வருகைத் தருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இதையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடல் நடத்தியது.

இந்த சந்திப்பு தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவை தொடர்புக் கொண்டு பிபிசி தமிழ் வினவியது.
இலங்கை கொரோனா வைரஸ் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள இந்த சந்தர்ப்பத்தில், மக்கள் எதிர்நோக்கியுள்ள வைரஸ் பிரச்சினைகள் மாத்திரமன்றி, தமிழர்களின் வாழ்வுரிமை மற்றும் இனப் பிரச்சினைகள் குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடல்களை நடத்தியதாக அவர் கூறினார்.
குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களின் வாழ்க்கை பிரச்சினைகள், தமிழர் பிரச்சினைகளை தீர்க்கும் வகையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்குதல், கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுதல், கொரோனா பிரச்சினைகள் நிறைவடையும் வரை தேர்தல் நடத்துவதற்கு அவசரப்படாதிருத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடல்களை நடத்தியதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் இனப் பிரச்சனைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையிலான புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும் என தாம் வலியுறுத்தியதாக மாவை சேனாதிராஜா தெரிவிக்கின்றார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிற போதிலும், அந்த அரசியலமைப்பின் ஊடாக தமிழர்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என நம்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இனப் பிரச்சினை தொடர்பில் இந்த அரசாங்கம் இதுவரை எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். ஐக்கிய தேசியக் கட்சி முழுமையாக பிளவுபட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், அவர்கள் ஒன்றிணைந்து தமிழர்களுக்கான பிரச்சினைக்கு தீர்வை தருவார்கள் என நம்ப முடியாதுள்ளதாகவும் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
இந்த நிலையில் கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் அரசாங்கத்துடன் நல்லெண்ணத்தை உருவாக்கி, இனப் பிரச்சினை உட்பட ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வை காண ஒத்துழைப்பு வழங்குமாறு அரசாங்கத்திடம் தாம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் தமது கோரிக்கைகளை ஏற்பதன் அடிப்படையிலேயே அதன் முன்னேற்றத்தை அணுக முடியும் எனவும் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். அத்துடன், பல தசாப்தங்களாக சிறைகளில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்வது தொடர்பிலும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பௌத்தர்களின் விசேட தினமான வெசாக் பௌர்ணமி தினத்தில் கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கைகளை முன்வைக்கின்ற நிலையில், தமிழ் அரசியல் கைதிகளையும் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், SRI LANKA PM MEDIA UNIT
சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விவரங்களைத் திரட்டி தன்னிடம் தருமாறும், அவர்களை விடுதலை செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் ஆராய்வதாகவும் பிரதமர் உறுதியளித்ததாக மாவை சேனாதிராஜா கூறினார்.
9 வருடங்களின் பின்னரான இந்த சந்திப்பு திருப்தியளித்ததா என அவரிடம் வினவினோம். அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளை அவதானித்தே அது தொடர்பில் கருத்துரைக்க முடியும் என அவர் குறிப்பிட்டார். மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடல்களை நடத்திய தமது அணுகு முறையை தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளமை தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழர்களின் இனப் பிரச்சினைக்கு அப்பால் தற்போது நாட்டிலுள்ள கொரோனா பிரச்சினையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன. தமிழர்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள போதிலும், அவற்றில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் அனுமதி வழங்காத நிலையில், அதற்கான அனுமதியை வழங்கி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவுமாறும் கோரிக்கை விடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பானது தமிழர்களின் வாழ்வுக்கு புதியதொரு ஆரம்பமாக இருக்கும் என நம்புவதாக மாவை சேனாதிராஜா கூறுகிறார். கொரோனா பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைமையில் தற்போது நாடு இருந்தாலும், இனப் பிரச்சினைக்கான தீர்வை விட்டு விட முடியாது என மாவை சேனாதிராஜா தெரிவிக்கின்றார்.
முந்தைய பேச்சுவார்த்தை
இலங்கையில் தமிழர்களின் உரிமைக்கான ஆயுதப் போராட்டம் 2009ஆம் ஆண்டு மே மாதத்துடன் முடிந்திருந்தது. அதனைத் தொடர்ந்து, தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வு காணும் நோக்குடன் தமிழர் தரப்புக்கும், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கும் இடையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டிருந்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதான பங்கை வகித்து, இந்த பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தது.
எனினும், அப்போதைய ஆளும் தரப்பினர் 2011ஆம் ஆண்டு இறுதி காலப் பகுதியில் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பிற்கு வருகை தராத நிலையில், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடனான உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை நிறுத்திக் கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

தாம் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியுடன் 2011ஆம் ஆண்டு இறுதிக் காலப் பகுதியிலேயே உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை நடத்தியிருந்ததாக மாவை சேனாதிராஜா தெரிவிக்கிறார்.
அதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துடன் தமிழர் இனப் பிரச்சனைக்கான தீர்வு விவகாரம் தொடர்பில் உத்தியோகப்பூர்வ சந்திப்புகளை நடத்தவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான பின்னணியிலேயே சுமார் 9 வருடங்களின் பின்னர் தமிழர் பிரச்சினை தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவின் தரப்பினருடன் கடந்த 4ஆம் தேதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கூட்டாக சென்று கலந்துரையாடல்களை நடத்தியதாக மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.












