கொரோனா வைரஸ் ஊரடங்கு: மதுபானத்தை ஹோம் டெலிவரி செய்ய திட்டமிடும் அதிகாரிகள்

பட மூலாதாரம், Getty Images
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - மதுபானம் ஹோம் டெலிவரி திட்டம்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமலாகியுள்ள ஊரடங்கால் மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளதால் மதுபானத்தை ஹோம் டெலிவரி செய்வது குறித்து பஞ்சாப் மாநில கலால் மற்றும் வரிவசூல் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர் என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மதுபானத்தை ஹோம் டெலிவரி செய்யும் திட்டத்துக்கான முன்மொழிவை அதிகாரிகள் அரசுக்கு அனுப்பி உள்ளதாகவும், வியாழனன்று நடைபெறும் பஞ்சாப் மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.
தினத்தந்தி - பச்சை மண்டலமே இல்லாத தமிழகம்

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் கொரோனா வைரசின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இதுவரை பாதிக்கப்படாத மாவட்டமாக இருந்த கிருஷ்ணகிரியில் நேற்று கொரோனா வைரஸ் கால் பதித்தது என்கிறது தினத்தந்தி செய்தி.
அங்கு இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 21 குழந்தைகள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்து தமிழ் திசை - 'கொரோனா காலத்தில் நீட் தேர்வு கூடாது'
கொரோனா காலத்தில் நீட் தேர்வை நடத்தாமல் மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.
இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் மே 5 அன்று வெளியிட்ட அறிக்கையில், "கொரோனா என்ற கொடூரத் தொற்றின் கோரத் தாண்டவத்தால், ஒட்டுமொத்த தேசமே அச்சத்திலும் பீதியிலும் முடங்கிக் கிடக்கும் இந்த நேரத்திலும், ஜூலை 26-ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவித்திருப்பது, மாணவ, மாணவியரைப் பற்றியோ, அவர்தம் பெற்றோர்களைப் பற்றியோ, மத்திய அரசுக்குத் துளியும் அக்கறையோ கவலையோ இல்லை என்றே தெரிகிறது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, ராஜஸ்தான், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஒடிசா, கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் நீட் தேர்வுக்கான தேதியைக் குறிக்கிறார்கள் என்றால், இது என்ன மாதிரியான மனநிலை என்பது புரியவில்லை என்று அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார் என்கிறது அச்செய்தி.
பிற செய்திகள்:
- 50 ஆண்டுகளில் அதீத வெப்பநிலை: 300 கோடி பேரை பாதிக்கும் ஆபத்து - புதிய ஆய்வு
- 'பாய்ஸ் லாக்கர் ரூம்' - இன்ஸ்டாகிராமில் சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்ய திட்டமிட்ட சிறுவர்கள்
- மக்களை வேவு பார்க்கின்றனவா இந்திய அரசின் கொரோனா வைரஸ் செயலிகள்?
- சமூக இடைவெளியும், கொரோனா வைரஸும்: 2 மீட்டர் இடைவெளிக்கு பின்னணியில் உள்ள அறிவியல் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












