பருவநிலை மாற்றம்: 50 ஆண்டுகளில் அதீத வெப்பநிலை: 300 கோடி பேரை பாதிக்கும் ஆபத்து மற்றும் பிற செய்திகள்

வெப்பநிலம்

பட மூலாதாரம், Getty Images

முன்னூறு கோடிக்கும் அதிகமானோர் 2070ஆம் ஆண்டில் "தாங்கிக் கொள்ள முடியாத" வெப்பநிலையில் வாழ்வதற்கான சூழல் ஏற்படும் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

பசுங்குடில் வாயுக்களின் வெளியேற்றம் குறையாவிட்டால் பலர் சராசரியாக 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வாழ நேரிடும் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

6000 ஆண்டுகாலமாக மனிதர்களுக்கு பழகிவந்த ஒரு பருவநிலை சூழல் அடியோடு மாறும் என்பதையே இது காட்டுகிறது.

இந்தியா, ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, மத்திய கிழக்கின் சில பகுதிகள், ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதி ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும் என இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஏழை நாடுகளில் இந்த வெப்பநிலையை சமாளிக்க பலரால் முடியாத சூழல் ஏற்படும் என இந்த ஆய்வு கவலை தெரிவிக்கிறது.

பருவநிலை மாற்றத்தை அதிகரிக்கும் சூழல்களை கட்டுப்படுத்துவதே இம்மாதிரியான அதிக வெப்பநிலை ஏற்படாமல் தடுப்பதற்கான வழி என இந்த ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.

பருவநிலை நிபுணரான லெண்டன் என்பவர் சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலுள்ள விஞ்ஞானிகளுடன் சேர்ந்த நடத்திய ஆய்வு இது.

கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் இருந்து கசிந்ததா?

நடுவில் உள்ளது வுஹானில் உள்ள பி4 ஆய்வகம். உலகிலேயே மனிதர்களுக்குப் பரவக்கூடிய ஆபத்து நிறைந்த வைரஸை கையாள அனுமதி பெற்ற விரல்விட்டு எண்ணக்கூடிய ஆய்வகங்களில் இதுவும் ஒன்று.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நடுவில் உள்ளது வுஹானில் உள்ள பி4 ஆய்வகம். உலகிலேயே மனிதர்களுக்குப் பரவக்கூடிய ஆபத்து நிறைந்த வைரஸை கையாள அனுமதி பெற்ற விரல்விட்டு எண்ணக்கூடிய ஆய்வகங்களில் இதுவும் ஒன்று.

வுஹானில் உள்ள ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் வெளியானதாக சொல்வதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாக அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பேயோ கூறியதை அடுத்து அவர் பொய் சொல்கிறார் என்கிறது சீனாவின் அரசு ஊடகம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மைக் பாம்பேயோ இந்தக் குற்றச்சாட்டை வைத்தார். குளோபல் டைம்ஸ் என்ற அந்த செய்தித் தாளில் செவ்வாய்க்கிழமை வெளியான தலையங்கத்தில் பாம்பேயோ ஒரு சீரழிவு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் குற்றச்சாட்டு ஊகத்தில் சொல்லப்படுவது என்றும், இதற்கு குறிப்பான ஆதாரம் ஏதும் இல்லை என்றும் கூறியுள்ளது உலக சுகாதார நிறுவனம்.

சென்னையில் கோவிட்-19 தொற்று அதிகம் பரவுவது ஏன்?

எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், Getty Images

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அரசின் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று (மே 5) மாலை 6 மணிக்கு தொலைக்காட்சி மூலம் தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.

சென்னையில் அதிக மக்கள் தொகை வசிக்கும் குறுகலான தெருக்கள் இருப்பதோடு, பொது கழிவறை பயன்பாடு அதிகம் இருப்பதால் நோய் தொற்று அதிகமாக பரவுவதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

சென்னை நகரத்தில் நோய் பரவலை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, மருத்துவர்கள் அடங்கிய பத்து குழுக்கள் மூலமாக பணிகள் செம்மையாக நடைபெற்று வருகின்றது என்று குறிப்பிட்ட முதல்வர், சென்னையில் மண்டல வாரியாக கொரோனா தடுப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது என்றார்.

நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மூன்று வேளையும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது என்றார்.

Boys Locker Room - இன்ஸ்டாகிராமில் சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்ய திட்டமிட்ட சிறுவர்கள்

சித்தரிப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

கடந்த இரண்டு நாட்களாக இந்தியாவில் சமூக ஊடகங்களில் பிரபலமாகி வருகிறது #BoysLockerRoom.

புகைப்பட பகிர்வு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் உள்ள இந்த குழுவில், சிறுமிகளின் புகைப்படங்களை சிறுவர்கள் பதிவிடுகிறார்கள், அநாகரீகமான கருத்துகளைக் கூறுகிறார்கள், பாலியல் வல்லுறவு செய்வது பற்றி பேசுகிறார்கள்.

இன்ஸ்டாகிராம் நெட்வொர்க் மற்றும் டெல்லி போலீசாருக்கு ட்வீட்டர் மூலம் நோட்டீஸ் அனுப்பிய டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவால், சம்பந்தப்பட்ட சிறுவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் 'பாய்ஸ் லாக்கர் ரூம்' என்ற குழுவை சில சிறுவர்கள் உருவாக்கியுள்ளனர், அதில் அவர்கள் சிறுமிகளின் ஆட்சேபத்திற்குரிய புகைப்படங்களை பகிர்ந்துகொள்கிறார்கள். அதுமட்டுமல்ல, சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்வதற்கான திட்டங்களைப் பற்றியும் இங்கு விவாதிக்கிறார்கள்.

சில பெண்கள் இந்த குழுவில் பகிர்ந்துக் கொள்ளப்பட்ட தகவல் பரிமாற்றங்களின் சில ஸ்கிரீன் ஷாட்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர், அதன் பிறகுதான் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

2 மீட்டர் இடைவெளிக்கு பின்னணியில் உள்ள அறிவியல் என்ன?

சமூக இடைவெளி சித்தரிப்பு

பட மூலாதாரம், Getty Images

பணியிடங்களில் ஊழியர்கள் இரண்டு மீட்டர் இடைவெளியை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட வேண்டுமா என்பது குறித்து உலகில் பல நாடுகளில் விவாதிக்கப்படுகிறது. சமூக இடைவெளியை அலுவலகங்களில் பின்பற்றுவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என பலர் நம்புகின்றனர்.

அதே நேரம், மற்றவர்களிடம் இருந்து விலகி இருப்பது எப்போதும் சாத்தியமில்லை என்பதால், முடக்கநிலைக்குப் பிறகு பணியிடங்களுக்கு திரும்பி செல்லும்போது சமூக இடைவெளியை பின்பற்றவேண்டியது அவசியமில்லை என அலுவலகங்கள் முடிவுசெய்தால் தினசரி வாழ்க்கை எளிதாக இருக்கும் என்றும் சிலர் கருதுகின்றனர்.

விரைவில் இது தொடர்பாக அறிவியலாளர்களின் சமீபத்திய ஆய்வுகள் வெளிவர உள்ளன. இந்த ஆய்வறிக்கை வைரஸ் பரவுவது குறித்து இது வரை நாம் தெரிந்துகொள்ளத பல அபாயகங்களை சுட்டிக்காட்டும். இது பலருக்கு வைரஸ் குறித்த பயத்தை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: