கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் இருந்து கசிந்ததா? அமெரிக்க கூற்றை எதிர்க்கும் சீன ஊடகம்

நடுவில் உள்ளது வுஹானில் உள்ள பி4 ஆய்வகம். உலகிலேயே மனிதர்களுக்குப் பரவக்கூடிய ஆபத்து நிறைந்த வைரஸை கையாள அனுமதி பெற்ற விரல்விட்டு எண்ணக்கூடிய ஆய்வகங்களில் இதுவும் ஒன்று.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நடுவில் உள்ளது வுஹானில் உள்ள பி4 ஆய்வகம். உலகிலேயே மனிதர்களுக்குப் பரவக்கூடிய ஆபத்து நிறைந்த வைரஸை கையாள அனுமதி பெற்ற விரல்விட்டு எண்ணக்கூடிய ஆய்வகங்களில் இதுவும் ஒன்று.

வுஹானில் உள்ள ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் வெளியானதாக சொல்வதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாக அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பேயோ கூறியதை அடுத்து அவர் பொய் சொல்கிறார் என்கிறது சீனாவின் அரசு ஊடகம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மைக் பாம்பேயோ இந்தக் குற்றச்சாட்டை வைத்தார். குளோபல் டைம்ஸ் என்ற அந்த செய்தித் தாளில் செவ்வாய்க்கிழமை வெளியான தலையங்கத்தில் பாம்பேயோ ஒரு சீரழிவு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் குற்றச்சாட்டு ஊகத்தில் சொல்லப்படுவது என்றும், இதற்கு குறிப்பான ஆதாரம் ஏதும் இல்லை என்றும் கூறியுள்ளது உலக சுகாதார நிறுவனம்.

சீன ஊடகம் என்ன சொல்கிறது?

அமெரிக்க குற்றச்சாட்டுக்கு சீனா இதுவரை அதிகாரபூர்வமாக பதில் சொல்லவில்லை. ஆனால் பாம்பேயோ அபத்தமான கோட்பாடுகளை வெளியிடுவதாகவும், உண்மைகளைத் திரிப்பதாகவும் திங்கள்கிழமை குற்றம்சாட்டியது குளோபல் டைம்ஸ். இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமையும் தொடர்கிறது.

சீன ஊடகங்களில் தலையங்கம் என்பது அரசு என்ன நினைக்கிறது என்பதை வெளிப்படுத்துவதாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

“பொய்களை உமிழ்வதன் மூலம் ஒரு கல்லில் இரண்டு பறவைகளை வீழ்த்த நினைக்கிறார் பாம்பேயோ”.

மைக் பாம்பேயோ

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, மைக் பாம்பேயோ

“நவம்பர் மாதம் நடக்கும் தேர்தலில் டிரம்பை மீண்டும் வெற்றி பெற வைப்பது அவரது ஒரு நோக்கம். இரண்டாவது, அவர் சோசியலிஸ்ட் சீனாவை அவர் வெறுக்கிறார். குறிப்பாக சீனாவின் எழுச்சியை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்று குறிப்பிடுகிறது அந்த ஊடகம்.

சீனாவில் தொற்று பரவலை சமாளிப்பதில் ஆரம்பத்தில் பிரச்சனைகள் இருந்ததாக ஒப்புக்கொள்ளும் அந்த தலையங்கம், ஒட்டுமொத்த நடவடிக்கைகள் அந்தப் பிழைகளை சரி செய்யும் அளவுக்கு சிறப்பாக இருந்ததாக கூறுகிறது. (வுஹான் தவிர்த்த) பிற இடங்களிலும் இந்த வைரஸ் மனிதர்களுக்குத் தொற்றியிருக்கலாம் என்பதை எண்ணிப்பார்க்க முடியும் என்றும் கூறுகிறது அத்தலையங்கம்.

Banner image reading 'more about coronavirus'

அமெரிக்காவையும், பாம்பேயோவையும் எதிர்க்கும் ஒரே சீன ஊடகமல்ல குளோபல் டைம்ஸ். பாம்பேயோ கூறும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்கிறது தி பீப்பிள்ஸ் டெய்லி. சிசிடிவி தளத்தில் வெளியாகியுள்ள மற்றொரு கட்டுரை அமெரிக்க அசியல்வாதிகளுக்கு மோசமான சதித்திட்டம் இருப்பதாக குற்றம்சாட்டுகிறது.

மைக் பாம்பேயோ என்ன சொன்னார்?

ஏபிசி ஊடகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில், இந்த வைரஸ் வுஹான் வைராலஜி இன்ஸ்டிடியூட்டில் இருந்து வெளியானது என்பதைக் காட்ட பெரிய ஆதாரம் இருக்கிறது என்று கூறினார் பாம்பேயோ.

“உலகில் தொற்று நோய் பரப்பிய வரலாறு சீனாவுக்கு இருக்கிறது. தரமில்லாத ஆய்வகங்களை நடத்திய வரலாறும் சீனாவுக்கு இருக்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால், இந்த வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது என்றோ, மரபணு மாற்றப்பட்டது என்றோ தாம் கருதவில்லை என்றும் கூறினார் பாம்பேயோ. இவர்அமெரிக்க மத்திய உளவு அமைப்பின் முன்னாள் இயக்குநரும்கூட.

வௌவால்களில் உள்ள கொரோனா வைரஸ் குறித்து வுஹான் ஆய்வகம் ஆராய்வதாக அறியப்படுகிறது. அந்த ஆய்வகத்தில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக ஓர் ஆய்வு உதவியாளர் மற்றும் அவரது ஆண் நண்பர் மூலமாக தவறுதலாக வெளியேறியதா என்று அதிபர் டொனால்டு டிரம்பிடம் கேட்கப்பட்டது. இந்தக் கோட்பாட்டை டிரம்ப் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், “இந்தக் கதையை மேலும் மேலும் அதிகம் கேட்பதாக” சொன்னார்.

Banner image reading 'more about coronavirus'

வுஹான் ஆய்வகத்தில் இருந்துதான் கொரானா வைரஸ் வெளியானது என்று உறுதியாக கூறுவதற்குத் தேவையான ஆதாரத்தை நீங்கள் பார்த்தீர்களா என்று கடந்த வாரம் அவரிடம் கேட்கப்பட்டபோது, “ஆம். நான் பார்த்தேன்” என்று அவர் பதில் சொன்னார். ஆனால், குறிப்பாக அது என்ன ஆதாரம் என்பது போன்ற விவரங்களுக்குள் அவர் செல்லவில்லை.

ஜனவரி 2018ல் இந்த ஆய்வகத்தை அமெரிக்க அதிகாரிகள் பார்வையிட்டதாகவும், பிறகு பாதுகாப்பு தொடர்பான தங்கள் அச்சத்தை அவர்கள் வெளியிட்டதாகவும் கடந்த மாதம் வாஷிங்டன் போஸ்ட் நாளேடு செய்தி வெளியிட்டது.

வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்?

இந்த வைரஸ் எங்கிருந்து வந்தது என்பது தொடர்பாக அமெரிக்காவிடம் இருந்து எந்த தரவுகளோ, குறிப்பான ஆதாரங்களோ வரவில்லை என்று கூறிய உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலைப் பிரிவின் இயக்குநர் மைக்கேல் ரையன், “இதுவரை எங்கள் பார்வை, இது வெறும் ஊகம் என்பதே” என்றும் குறிப்பிட்டார்.

இந்த வைரஸ் மனிதர்களால் உண்டாக்கப்பட்டதோ, மரபணு மாற்றம் செய்யப்பட்டதோ அல்ல என்று கடந்த வாரம் அமெரிக்க உளவு அமைப்பு ஒப்புக்கொண்டது. ஆனால், இந்த வைரஸ் தொற்று இருந்த விலங்குகளிடம் இருந்து பரவியதா, அல்லது வுஹான் ஆய்வகத்தில் ஏற்பட்ட விபத்தின் மூலம் வெளியானதா என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்படும் என்றும் அது கூறியது. இதனிடையே மேற்கத்திய நாடுகளின் உளவு அமைப்புகளில் இருந்து பல செய்தி நிறுவனங்களுக்குப் பேசியவர்கள், இந்த வைரஸ் ஆய்வகத்தில் இருந்து கசிந்து வெளியானதாக கூறுவதற்கு ஆதாரம் ஏதும் இல்லை என்று கூறியுள்ளனர்.

அமெரிக்க கருத்தை ஏற்காத ஆஸ்திரேலியா

சீனாவில் இந்த கொரோனா வைரஸ் தொற்று எங்கே தொடங்கியது, எப்படிப் பரவியது என்பது குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும் என்று அமெரிக்காவுடன் சேர்ந்து உரத்துக் கூறிவரும் நாடு ஆஸ்திரேலியா. ஆனால், இந்த வைரஸ் வுஹான் ஆய்வகத்தில் இருந்து வெளியாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஆஸ்திரேலிய் பிரதமர் ஸ்காட் மாரிசன் மறுத்துள்ளார்.

ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மாரிசன்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மாரிசன்

தங்கள் நாடு அமெரிக்காவுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது என்று கூறிய அவர், ஆனால், ஆய்வகத்தில் இருந்து வைரஸ் வந்தது என்ற கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவித்தார். காட்டு விலங்குகளை விற்கும் சந்தையில் இருந்து இது பரவியிருப்பதற்கே வாய்ப்பு அதிகம் என்றும் அவர் கூறினார். ஆனால், இந்த வைரஸ் பிறப்பிடம் பற்றி முறையான ஆய்வு தேவை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: