தமிழகத்தில் மதுக் கடைகளைத் திறப்பதை எதிர்த்து தி.மு.க. கூட்டணி போராட்டம்

ஸ்டாலின்

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் மே 7ஆம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படவிருக்கும் நிலையில், தி.மு.க. கூட்டணி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. நாளை இது தொடர்பாக போராட்டம் நடத்தப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவ ஆரம்பித்ததிலிருந்து மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், சென்னை தவிர்த்த பிற பகுதிகளில் நாளை முதல் மதுக் கடைகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பிலிரும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டுவந்தன. பொது நல வழக்கு ஒன்றும் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக நாளை போரட்டம் நடத்தப்போவதாக தி.மு.க. கூட்டணி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில், மதுக் கடைகளை திறப்பதை எதிர்த்து, கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் அவரவர் வீட்டு வாசலில் ஐந்து பேருக்கு மிகாமல் கூடி நின்று, "கொரோனாவை ஒழிப்பதில் தோல்வி அடைந்துவிட்ட அ.தி.மு.க. அரசைக் கண்டிக்கிறோம்" என பதினைந்து நிமிஷங்களுக்கு கோஷமிடப் போவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

Banner image reading 'more about coronavirus'

மேலும் நாளை அதாவது மே 7ஆம் தேதி கருப்புச் சின்னம் அணியப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோயை எதிர்கொள்வதில் அ.தி.மு.க. சரியாகச் செயல்படவில்லை என்றும் கொரோனாவை எதிர்கொள்ளத் தேவைப்படும் மருத்துவக் கட்டமைப்பை உருவாக்கிட ஆரம்பத்தில் கிடைத்த வாய்ப்பை அரசு தவறவிட்டுவிட்டதாகவும் அறிவியல் பூர்வமான ஒருங்கிணைப்பு இல்லையென்றும் தி.மு.க. குற்றம்சாட்டியுள்ளது.

எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் என பல தரப்பிலிருந்தும் வரும் ஆலோசனைகளை பரிசீலனை செய்யும் மனநிலை அ.தி.மு.க. அரசுக்கு இல்லையென்றும் ஊரடங்கை படிப்படியாக ரத்துசெய்து, அதன் வலிமையைக் குறைப்பது பொதுமக்களை நட்டாற்றில் விடுவதற்கு ஒப்பாகும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

மே 7ஆம் தேதி மதுக் கடைகளைத் திறப்பது என்ற முடிவால், நோய்த் தொற்று அதிகமாகும் என்பதால் அதனைக் கண்டிப்பதாகவும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஐயாயிரம் ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்க வேண்டுமென்றும் எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: