கொரோனா வைரஸ்: இலங்கையில் கர்ப்பிணி பரிசோதனை, குழந்தைகள் தடுப்பூசி பணிகளில் மாற்றம்

இலங்கையில் கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், NurPhoto/getty Images

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 10 பேர், அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

கொழும்பில் இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 133 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அனில் ஜாசிங்க
படக்குறிப்பு, அனில் ஜாசிங்க

இவ்வாறு கண்காணிக்கப்பட்டு வருபவர்களில் 9 பேர் வெளிநாட்டவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவர்கள் அனைவரும் நாட்டிலுள்ள 14 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

அதேபோன்று, நாடு முழுவதும் சுகாதார பரிசோதகர்களால் 4,405 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக டாக்டர் அனில் ஜாசிங்க கூறுகிறார்.

அவர்களில் 2769 பேர் இலங்கையர்கள் எனவும், 1120 பேர் சீன நாட்டு பிரஜைகள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் இதுவரை 10 கொரோனா தொற்று நோய் ஆய்வு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 1700 பேர் வரை தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

இவர்களில் 8 வெளிநாட்டவர்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

கர்ப்பிணிதாய்மாருக்கான பரிசோதனைகள் இடைநிறுத்தம்?

கர்ப்பிணிதாய்மாருக்கான பரிசோதனைகள்

பட மூலாதாரம், Carl Court/getty Images

கர்ப்பிணித் தாய்மாருக்கான மாதாந்த பரிசோதனை நடவடிக்கைகளுக்கு வரையரை விதிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

8 மாதங்கள் பூர்த்தியான கர்ப்பிணித் தாய்மார்கள் மாத்திரம் பரிசோதனைகளுக்காக வருகை தருமாறும், ஏனையோர் தேவை ஏற்படும் பட்சத்தில் மாத்திரம் வருகை தருமாறும் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவிக்கிறார்.

குறிப்பாக 8 மாதங்கள் பூர்த்தியாகாத கர்ப்பிணி தாய்மார்களின் வீடுகளுக்கு சென்று சுகாதார அதிகாரிகள் பரிசோதனைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு சிசுக்களுக்கு ஏற்றப்படும் ஊசியை ஏற்றாதிருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Banner image reading 'more about coronavirus'
Banner

அது எந்தவிதத்திலும் சிசுகளுக்கு பிரச்சினையாக அமையாது எனக் கூறிய அவர், இரண்டு வாரங்களின் பின்னர் குறித்த ஊசியை ஏற்றிக் கொள்ள முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

குறித்த இடங்களுக்கு அதிக அளவிலான மக்கள் ஒன்று திரளுவதை தவிர்க்கும் நோக்கத்திலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், மார்ச் மாதம் 10ஆம் தேதிக்கு முன்னர் இத்தாலியிலிருந்து வருகைத்தந்து, பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படாதவர்களை, பரிசோதனைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக டொக்டர் அனில் ஜாசிங்க கூறுகிறார்.

இலங்கையில் மதவழிபாடுகளுக்கு கட்டுப்பாடு

இலங்கையில் மஸ்ஜித்களில் ஜுமுஆ, ஐவேளை ஜமாஅத்தொழுகைகள் உட்பட அனைத்து விதமான ஒன்று கூடல்களையும் தவிர்த்துக்கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இன்று (15) வெளியிட்டுள்ள அறிக்கையொன்றின் ஊடாகவே இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

Banner image reading 'more about coronavirus'

இந்த கோரிக்கையானது மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை அமலில் இருக்கும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்குடனேயே இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கூறுகிறது.

இதேவேளை, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு உள்நாட்டு யாத்திரைகள் மற்றும் சுற்றுலா பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு புத்தசாசன, கலாசார மற்றும் மத விவகார அமைச்சு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் ஞாயிறு ஆராதனைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

இன்று முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு ஆராதனைகளை இரத்து செய்யுமாறு கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

தவக்கால விசேட ஆராதனை நிகழ்வுகளை இடைநிறுத்துவதன் ஊடாக கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரமுடியும் என ரஞ்ஜித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.

போலி தகவல்களை வெளியிட்ட 23 பேர் தொடர்பில் விசாரணை

சமூக வலைத்தளங்கள் ஊடாக கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் போலியான தகவல்களை வெளியிட்ட 23 பேர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

அஜித் ரோஹண

பட மூலாதாரம், ISHARA S.KODIKARA/getty Images

போலீஸ் தலைமையகத்தில் இன்று (15) இடம்பெற்ற அவசர ஊடக சந்திப்பிலேயே இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறு போலி தகவல்களை பரப்பும் நபர்கள் கைதுசெய்யப்பட்டு, சட்டத்திற்கு முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

நீதிமன்றத்தில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், அவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கப்படும் என அஜித் ரோஹண குறிப்பிடுகின்றார்.

இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒருவர் வெளிநாட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு பிரஜை பூரண குணமடைந்து நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், 10 இலங்கையர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: