கொரோனா வைரஸ்: தமிழகத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் என்னென்ன?

பட மூலாதாரம், Getty Images
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகம் முழுவதும் மழலையர் பள்ளிகள் மற்றும் துவக்கப் பள்ளிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா தாக்குதலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வண்ணம் இந்த 15 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள திரையரங்குகள், வணிக வளாகங்கள் மார்ச் 31ம் தேதி வரை மூடப்படவேண்டும் வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு இல்லையென்ற போதும், இந்த நோய் அண்டை மாநிலங்களிலிருந்து பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார். தடுப்பு நடவடிக்கைகளுக்கான நிதி உடனடியாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

''தற்பொழுது தமிழ்நாட்டில் உள்ள சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகிய நான்கு விமான நிலையங்களிலும் வெளிநாட்டிலிருந்து பயணிகள் வருகின்றனர். மத்திய அரசு சில வெளிநாட்டுப் பயணிகள் வருகையை தடை செய்துள்ளது. இருந்தபோதும், வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இங்கு திரும்பும் சூழ்நிலை ஏற்பட்டால், தேவைக்கேற்ப அவர்களை உலக சுகாதார நிறுவனத்தின் வழிமுறைகளின் படி, 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க தேவையான வசதிகளை இயன்றவரை அந்தந்த விமான நிலையங்களின் அருகிலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது,'' என தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Stringer/getty images
எல்லையோர மாவட்டங்களில் உள்ள கண்காணிப்பு சோதனை சாவடிகளில், நோய் கண்காணிப்புப் பணிகள் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வருவாய்த்துறை, காவல்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, மாநில பேரிடர் நிதியிலிருந்து சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறைக்கு ரூ.30 கோடி, போக்குவரத்துத் துறைக்கு ரூ.5 கோடி, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு ரூ.4 கோடி, நகராட்சி நிர்வாகத்திற்கு ரூ.6 கோடி, ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.5 கோடி, பேரூராட்சி இயக்குநரகத்துக்கு ரூ.2 கோடி, இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.3 கோடி, பள்ளிக் கல்வி மற்றும் உயர்க்கல்வித்துறைக்கு ரூ.2 கோடி, அங்கன்வாடி மையங்களுக்கு ரூ.0.5 கோடி மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு ரூ.2.5 கோடி ஆக மொத்தம் ரூ.60 கோடி உடனடியாக வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
பொது இடங்களில் குறிப்பாக, கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களுக்கு வரும் மக்களுக்கு நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு எற்படுத்தவும், சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்களைக் கண்டறியவேண்டும் என இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்ற மாநிலங்களுக்குப் பயணிப்பதையும், பொது இடங்களில் அதிக அளவில் மக்கள் கூடுவதையும் அடுத்த 15 நாட்களுக்குத் தவிர்க்கவும், கூட்டம் நிறைந்த பொது இடங்களுக்கு வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்த நபர்கள் பயணம் செய்வதைத் தவிர்க்கவும்.
அதே செய்திக்குறிப்பில், பொது மக்கள் சுகாதரமாக இருக்கவேண்டிய அவசியத்தையும் குறிப்பிட்டுள்ளார். பொது மக்கள் அடிக்கடி கைகளை கழுவி சுகாதாரமாக இருக்கவேண்டும் என்றும், குழந்தைகளின் சுகாதாரத்தை உறுதிப்படுத்தவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். நோய்க்கான அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுகவும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மோதி பற்றி அழகிரி என்ன சொன்னார்?
இதனிடையே, பிரதமர் நரேந்திர மோதி குறித்தும், கொரோனா வைரஸ் குறித்தும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இப்படி சொல்லியுள்ளார்:
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
"நான் கொரோனா வைரசை வைத்து அரசியல் செய்யவில்லை. இது மோசமான பிரச்சனைதான். ஆனால், கொரோனா வைரஸ் பிரச்சனையை, குடியுரிமைத் திருத்தச் சட்டப் போராட்டங்களுக்கு எதிராக மோதி அரசாங்கம் பயன்படுத்தும் என நினைக்கிறேன். கொரோனா வைரஸ், மோதி இரண்டையும் நாம் கவனிக்கவேண்டும்" என்று அவர் கூறியுள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
- விஜய்: “உம்முன்னு இருப்பாரா இல்லை ஜம்முன்னு இருப்பாரா?” - மாஸ்டர் பாடல் வெளியீடு
- Finally யுடியூப் சேனல்: வெகுளித்தனமான கதாபாத்திரம் வெற்றி பெற்றது எப்படி?
- ஸ்பெயின் பிரதமரின் மனைவிக்கு கொரோனா : சர்வதேச அளவில் இப்போது நடப்பது என்ன?
- உங்கள் செல்போனில் இவை எல்லாம் சேமித்து வைத்திருந்தாலே குற்றம் - டி.ஜி.பி. எம்.ரவி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












