குழந்தைகள் ஆபாச படம் பார்த்தது தொடர்பாக 2000 பேர் பட்டியல்: டி.ஜி.பி. எம்.ரவி - விரிவான தகவல்கள்

உங்கள் செல்போனில் இவை எல்லாம் சேமித்து வைத்திருந்தாலே குற்றம் - டி.ஜி.பி. எம்.ரவி

பட மூலாதாரம், Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: உங்கள் செல்போனில் இவை இருந்தாலே குற்றம்

'போக்சோ' சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளதாகவும், செல்போனில் குழந்தைகளின் ஆபாச படம் வைத்திருந்தாலே குற்றம் என்றும் கூடுதல் டி.ஜி.பி. எம்.ரவி எச்சரித்துள்ளார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

உலக மகளிர் தினத்தையொட்டி பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் நேற்று காலை நடைபெற்றது. இந்த பேரணியை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. எம்.ரவி தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

இந்தியாவிலே தமிழ்நாட்டில் தான் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

உங்கள் செல்போனில் இவை எல்லாம் சேமித்து வைத்திருந்தாலே குற்றம் - டி.ஜி.பி. எம்.ரவி

பட மூலாதாரம், Getty Images

ஒவ்வொரு போலீஸ்நிலையத்திலும் எப்படி ரவுடி பட்டியல் தயார் செய்யப்படுகிறதோ?, அதே போன்று பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பட்டியலும் தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பாலியல் குற்றவாளிகள் பட்டியலும் தயார் செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் கூடுதல் டி.ஜி.பி. எம்.ரவி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான ஆபாச படம் பார்த்தது தொடர்பாக இதுவரையில் 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். தற்போது குழந்தைகளுக்கு எதிரான 'போக்சோ' சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி செல்போனில் குழந்தைகளின் ஆபாச படம் வைத்திருந்தாலே குற்றம் ஆகும். வேறு ஒரு செல்போனில் இருந்து படம் வந்திருந்து, அதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்றாலும் குற்றச்செயல் ஆகும். எனவே செல்போனில் குழந்தைகள் ஆபாச படம் வந்தால் அதுபற்றி போலீசில் புகார் அளிக்க வேண்டும். குழந்தைகள் ஆபாச படம் பார்த்தது தொடர்பாக சென்னையில் 200 பேர் பட்டியல் அனுப்பி இருக்கிறோம். அதன்பேரில் மாநகர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் பேர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் மூலம் தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் களையப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Presentational grey line
Banner image reading 'more about coronavirus'
Banner

தினமணி: யெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் எப்போது நீக்கப்படும்?

யெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் எப்போது நீக்கப்படும்?

பட மூலாதாரம், Getty Images

யெஸ் வங்கியின் செயல்பாட்டில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மாா்ச் 18-ஆம் தேதிக்குள் நீக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

யெஸ் வங்கி புனரமைப்பு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது. யெஸ் வங்கியில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) 49 சதவீதப் பங்குகளைப் பெற ஏற்கெனவே முடிவெடுக்கப்பட்டுள்ளது. தற்போது அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள திட்டத்தின் கீழ் அடுத்த 3 ஆண்டுகளில் இந்த முதலீட்டு அளவை 26 சதவீதம் வரை மட்டுமே குறைத்துக் கொள்ள முடியும்.

ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி போன்ற புதிய முதலீட்டாளா்கள் தங்களது முதலீட்டு அளவில் 75 சதவீத அளவுக்கும் கீழ் மூன்றாண்டுகளுக்கு குறைத்துக் கொள்ளக் கூடாது. நூறு பங்குகளுக்கும் குறைவாக வைத்துள்ள சிறு முதலீட்டாளா்களுக்கு இதுபோன்ற கட்டுப்பாடுகள் பொருந்தாது.

வரும் 18-ஆம் தேதியுடன் யெஸ் வங்கி மீதான கட்டுபாடுகள் நீக்கப்படும். நிா்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பிரசாந்த் குமாா் தலைமையில் இம்மாத இறுதியில் யெஸ் வங்கி முழுவீச்சில் செயல்படத் தொடங்கும்.

யெஸ் வங்கியின் புதிய நிா்வாகக் குழுவில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் கெளரவத் தலைவா் சுனில் மேத்தா இடம் பெறுவாா். கெளரவ இயக்குநா்களாக மகேஷ் கிருஷ்ணமூா்த்தி, அதுல் பேடா ஆகியோரும் இடம்பெறுவா்.

மாா்ச் 13-ஆம் தேதி முதல் யெஸ் வங்கி புனரமைப்புத் திட்டம் அமலுக்கு வந்தது என்று மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி நெருக்கடியில் சிக்கிய யெஸ் வங்கியின் நிா்வாகத்தை ரிசா்வ் வங்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கடந்த 5-ஆம் தேதி கொண்டு வந்தது. வாடிக்கையாளா்கள் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை ரூ.50,000 மட்டுமே எடுக்க முடியும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை ரிசா்வ் வங்கி விதித்தது.

யெஸ் வங்கியின் புதிய நிா்வாகக் குழுவுக்கு இரு இயக்குநா்களை பாரத ஸ்டேட் வங்கி பரிந்துரைக்கும். அதேபோன்று ரிசா்வ் வங்கியும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இயக்குநா்களை நியமிக்க வாய்ப்புள்ளது. பாரத ஸ்டேட் வங்கியைத் தவிர வேறு பெரும் முதலீட்டாளா் யெஸ் வங்கி வாரியத்துக்கு இயக்குநா் ஒருவரை நியமிக்க முடியும்.

ஐசிஐசிஐ, ஆக்ஸிஸ், கோடக் மகேந்திரா, பந்தன், ஹெச்டிஎஃப்சி ஆகிய வங்கிகள் யெஸ் வங்கியில் முதலீடு செய்யவுள்ளன.

இதில் ஐசிஐசிஐ வங்கி 100 கோடி பங்குகளை ரூ.1,000 கோடி முதலீட்டில் பெறவுள்ளது. ஆக்ஸிஸ் வங்கி ரூ.600 கோடி முதலீட்டில் 60 கோடி பங்குகளையும், கோடக் மகேந்திரா வங்கி ரூ.500 கோடி முதலீட்டில் 50 கோடி பங்குகளையும் பெறவுள்ளன. பந்தன் வங்கியும் பெடரல் வங்கியும் தலா 30 கோடி பங்குகளை தலா ரூ.300 கோடி முதலீட்டில் பெறவுள்ளதாக அறிவித்துள்ளன.

Presentational grey line

இந்து தமிழ் திசை: நடிகர் ரஜினிகாந்துக்கு பதில் தர தேவை இல்லை

நடிகர் ரஜினிகாந்துக்கு பதில் தர தேவை இல்லை

நடிகர் ரஜினி கட்சியே ஆரம்பிக்காத நிலையில், கற்பனையான எந்த பதிலும் கூறத் தேவை இல்லை என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார் என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.

இதுகுறித்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எல்கேஜி முதல் 5-ம் வகுப்பு வரை 15 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இது குறித்த உத்தரவு நிறுத்தி வைக்கப்படவில்லை. விடுமுறை குறித்த அறிவிப்பு நாளை (இன்று) வெளியிடப்படும். குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிகை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக இல்லை.

நடிகர் ரஜினி கட்சியே ஆரம்பிக்காத நிலையில், கற்பனையான எந்த பதிலும் கூறத் தேவை இல்லை. நடிகர் கமல்ஹாசனின் சக்தியை கடந்த தேர்தலில் பார்த்துவிட்டோம். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். மக்களை சந்திக்கலாம்.

தொண்டர்கள் எங்கள் பக்கம் வருவார்கள் என 3 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னதைத்தான் தற்போதும் தினகரன் தெரிவித்து வருகிறார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அமமுக இருக்குமா, இருக்காதா என்பதை மக்கள்தான் முடிவு செய்வர். சிறுபான்மை மக்களின் அச்சத்தைப் போக்கும் விதமாக சட்டப்பேரவையில் நானும், வருவாய்த் துறை அமைச்சரும் நேற்று தெளிவாக விளக்கம் அளித்துவிட்டோம்," என்று கூறினார்.

Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: