அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை - ஓரிரு நாட்களில் முடிவு Corona Updates

பட மூலாதாரம், @realdonaldtrump
தனக்கு கொரோனா வைரஸ் இருக்கிறதா என்ற பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் அதன் முடிவுகள் தெரியவரும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படும் என்று ஏஎஃப்பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிபர் டிரம்ப், கொரோனா வைரஸ் நிவாரண மசோதா குறித்து பேசினார். தேவைப்படும் அனைத்து அமெரிக்கர்களுக்கும் இலவசமாக கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இதுவரை அமெரிக்காவில் கொரோனா தொற்று காரணமாக 50 பேர் உயிரிழந்துள்ளதாக கூறிய டிரம்ப், மேலும் உயிரிழப்புகள் ஏற்படக்கூடாது என்று நினைக்கிறோம் என்றார். இது சீனாவில் இருந்து தொடங்கினாலும், இதற்காக யாரையும் குற்றம் சொல்ல முடியாது என்று அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் பிரிட்டனில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதோடு அங்கு பலியாோரின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. 1,140 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் முதல் கொரோனா மரணம் பதிவாகியுள்ளது. 82 வயது மூதாட்டி ஒருவர் சனிக்கிழமை அன்று உயிரிழந்தார்.

How to wash your hands properly? | கொரோனா | Covid-19 | Corona

ஆப்பிரிக்காவில் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் தொடர்ந்து கொரோனா வைரஸால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவின் மும்பையில் இருந்து ருவாண்டா சென்ற இந்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், ISSOUF SANOGO / Getty
ருவாண்டாவின் அரசு விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதோடு, பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதே போல ஆப்பிரிக்க நாடான நமிபியாவிலும் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.


ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஸ்பெயின் - புதிதாக 1500 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஸ்பெயின் நாட்டில் வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து மேலும் 1500 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், JAVIER SORIANO / getty
இதை சேர்த்தால் தற்போது வரை ஸ்பெயினில் மொத்தம் 5,753 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 136 பேர் பலியாகியுள்ளனர். ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில்தான் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அந்நாட்டில் அவசர நிலை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஈஸ்டர் ஊர்வலங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இரானில் ஒரே நாளில் 97 பேர் பலி
சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இரானில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இரானில் இதுவரை மொத்தம் 611 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
12,729 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இரான் சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த புதன் கிழமையன்று செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில் இரான் அரசு இறுதி சடங்கு செய்ய குழிகளை தோண்டுவது போன்ற காட்சிகள் வெளியாகின.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












