இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: தகவல்களை மறைக்க ஆவணங்கள் தயாரிக்கப்படுவதாக சந்தேகம்

இலங்கை ஈஸ்டர் தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தகவல்களை மறைப்பதற்கான முயற்சிகளை சில அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இந்த சந்தேகத்தை வெளியிட்டுள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை முதற்தடவையாக சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தி போதே இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

ஆணைக்குழுவின் தலைவர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜானக்க டி சில்வா தலைமையிலான குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர்.

ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னர் அது தொடர்பில் முன்கூட்டியே தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், உரிய அதிகாரிகள் அது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என அவர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ஷ ( கோப்புப்படம்)

இந்நிலையில், கடமை தவறிய அதிகாரிகள் அதனை மறைப்பதற்காக பொய்யான ஆவணங்களை தயாரித்துள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதென ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கூறியுள்ளனர்.

தாக்குதலுக்கான காரணங்களை உரிய முறையில் இனங்கண்டு, அதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, அதிகாரிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தவறிழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையின் நிலைப்பாடு எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

தான் பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய சந்தர்ப்பத்தில் தேசிய பாதுகாப்பு சபை நாளாந்தம் ஒன்று கூடியதாக கூறிய ஜனாதிபதி, அந்த கலந்துரையாடல்களில் தினமும் நாட்டின் பாதுகாப்பு குறித்து புனலாய்வுத்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியதாகவும் நினைவூட்டியிருந்தார்.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தான் தாமதமின்றி தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாகவும், அடிப்படைவாத கருத்துக்களை பிரசாரம் செய்த 160 வெளிநாட்டு விரிவுரையாளர்களை நாடு கடத்தியதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டிருந்தார்.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

கடந்த ஆட்சியாளர்கள் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாரதூரமான வகையில் சிந்திக்காது செயற்படாமையினாலேயே புலனாய்வுத்துறை வீழ்ச்சி அடைந்திருந்ததாகவும் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இதன்காரணமாகவே இஸ்லாமிய அடிப்படைவாதம் பிரசாரம் செய்யப்படுவதை தடை செய்ய முடியாதுள்ளதென ஜனாதிபதி கூறியுள்ளார்.

இவ்வாறான தாக்குதல்கள் மீண்டுமொரு முறை நடத்தப்படாதிருப்பதற்காக செய்ய வேண்டிய விடயங்கள் தொடர்பிலான பரிந்துரைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரிகளிடம் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இலங்கையின் பாதுகாப்பு பொறிமுறை வீழ்ச்சியடைந்துள்ளமைக்காக பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஆணைக்குழுவிற்கு ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி இதன்போது உறுதியளித்துள்ளார்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் 260ற்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்ததுடன், 500க்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: