இலங்கையில் சர்ச்சைக்குரிய டிக்கிரி யானை இறந்தது

அண்மையில் அதிகமாக பேசப்பட்ட, சர்ச்சைக்கு உள்ளாகியிருந்த டிக்கிரி யானை இறந்துள்ளது.
இந்த யானை இன்று செவ்வாய்க்கிழமை மாலை இறந்ததாக யானையின் உரிமையாளர் பி.பி.சி தமிழிடம் உறுதிப்படுத்தினார்.
உடல் பலவீனம் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, டிக்கிரி யானை இறந்துள்ளது.
வயது முதிர்ந்த நிலையில், குறித்த யானை பௌத்த உற்சவத்தில் பங்கேற்றதால் கடந்த காலங்களில் சர்வதேச ரீதியில் பாரிய சர்ச்சை தோன்றியிருந்தது.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடக்கும் பெரஹரா என்ற பௌத்த உற்சவம் இலங்கையில் மிக முக்கியமான உற்சவமாக கருதப்படுகிறது.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் இந்த நிகழ்வு ஒவ்வொரு வருடமும் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
குறிப்பாக புத்த பெருமானின் புனித சின்னங்கள் வீதி ஊர்வலமாக கொண்டு செல்லப்படுவது இந்த உற்சவத்தின் பிரதான நிகழ்வாகும்.
இந்த உற்சவத்தை அலங்கரிக்கும் வகையில் சிங்கள பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், அலங்கரிக்கப்பட்ட யானைகள் என பல்வேறு அம்சங்கள் இடம்பெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு உற்சவத்தில் கலந்துக்கொண்ட 'டிக்கிரி" என்ற பெயரை கொண்ட யானை குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பேசப்பட்டது.
டிக்கிரி என்றழைக்கப்படும் இந்த பெண் யானைக்கு சுமார் 79 வயது என கூறப்படுகிறது.
மிகவும் வயதான நிலையில் காணப்படும் இந்த யானை தொடர்பில் தாய்லாந்தைத் தலமாகக் கொண்டு இயங்கும் விலங்கு உரிமை செயற்பாட்டாளர்கள் கடந்த மாதம் சில படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தனர்.
அத்துடன், உற்சவத்தின்போது பயன்படுத்தப்படும் அதிக சத்தத்துடனான ஒலிபெருக்கிகள், தீப்பந்தங்கள் மற்றும் புகை ஆகியவற்றுடன் இந்த யானை பல கிலோமீட்டர் தூரம் நடப்பது மிகவும் சிரமமான ஒன்று என தாய்லாந்து விலங்கு உரிமை செயற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
குறித்த யானையின் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிய நாள் முதல், இந்த யானை குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.
வயதான நிலையில், சுகவீனமுற்ற இந்த யானை தொடர்பில் கவனம் செலுத்தி, அதனை எதிர்வரும் உற்சவங்களில் பங்கேற்பதை நிறுத்துமாறும் விலங்குரிமை செயற்பட்டாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
டிக்கிரி என்ற இந்த யானை சுமார் 50 வருடங்கள் கண்டி ஸ்ரீ தலதா மாளிகை உற்சவத்தில் கலந்துக்கொண்டிருந்ததாக யானை உரிமையாளர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், 2018ஆம் ஆண்டு உற்சவத்தின் பின்னர் டிக்கிரி யானை சுகவீனமுற்றதாகவும், அதனை குணப்படுத்தும் வகையில் விஷ்ணுவுக்கு நேர்த்திக் கடன் வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
இந்த நேர்த்தி கடனை செலுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த யானை உற்சவத்தில் பங்கேற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
டிக்கிரி யானை சுமார் 2 கிலோமீட்டர் வரை பயணிக்க எந்தவொரு பிரச்சினையும் கிடையாது என வைத்தியர்கள் பரிந்துரை செய்தமையை அடுத்தே இந்த யானை உற்சவத்தில் கலந்துக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் டிக்கிரி யானை இன்று மாலை இறந்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












