நா. புகழேந்தி: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க. வேட்பாளர் அறிவிப்பு

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர் அறிவிப்பு

பட மூலாதாரம், FACEBOOK/MK STALIN

தமிழ்நாட்டில் நடக்கும் இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தான் போட்டியிடும் விக்கிரவாண்டி தொகுதிக்கான வேட்பாளராக நா. புகழேந்தியை தி.மு.க. அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளன. நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராக இருந்த எச். வசந்தகுமார், தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகிவிட்டதால் அந்தத் தொகுதி காலியானது. விக்கிரவாண்டி தொகுதியின் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரான ராதாமணி ஜூன் மாதம் காலமானார். இதனால், அந்தத் தொகுதியும் காலியாக இருந்தது.

இந்த நிலையில், இந்த இரு தொகுதிகளுக்கும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுமென இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 23ஆம் தேதி துவங்கியது. செப்டம்பர் 30ஆம் தேதிவரை வேட்புமனுக்களைத் தாக்கல்செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஏற்கனவே இருந்தபடி நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியும் விக்கிரவாண்டியில் தி.மு.கவும் போட்டியிடுவதென முடிவுசெய்யப்பட்டது. தி.மு.கவில் வேட்பாளர்களுக்கான நேர்காணல் திங்கட்கிழமையன்று நடைபெற்றது.

இதற்குப் பிறகு, தி.மு.கவின் சார்பில் அக்கட்சியின் விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளர் நா. புகழேந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர் அறிவிப்பு

தொகுதி சீரமைப்பின் மூலம் 2007ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட விக்கிரவாண்டி தொகுதியில் 2011ஆம் ஆண்டில் சிபிஎம்மின் வேட்பாளர் ஆர். ராமமூர்த்தி வெற்றிபெற்றார். 2016ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் தி.மு.கவின் சார்பில் போட்டியிட்ட ஆர். ராதாமணி வெற்றிபெற்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :