8 மாதமாக பேசாமல் கோபம் கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை - பாச போராட்டம்

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி: மகளுக்காக குளத்தை சுத்தம் செய்த ஒரு கிராமத்து தந்தை: நெகிழ வைக்கும் பாச போராட்டம்
8 மாதமாக தன்னிடம் பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை தந்தை சுத்தம் செய்தார் என்கிறது தினத்தந்தி நாளிதழ்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மருதவனம் காலனி தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார். விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கு அருள்மொழி என்ற மனைவியும், பத்தாம் வகுப்பு படிக்கும் விவேகானந்தன் என்ற மகனும், ஏழாம் வகுப்பு படிக்கும் நதியா என்ற மகளும் உள்ளனர். இருவரும் மருதவனம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜ புயலில் சிவக்குமார் வீடு இடிந்தது. அதன் பிறகு சிவக்குமாருக்குசரிவர வேலையும் கிடைக்கவில்லை. இதனால் மனம் உடைந்த சிவக்குமார், தன் மனைவியிடம் அடிக்கடி சண்டை போட்டுள்ளார். சிவக்குமார் தம்பதியினர் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வதைப் பார்த்த சிறுமி நதியா மிகுந்த மனவேதனை அடைந்தாள். தனது தாயிடம், அடிக்கடி தந்தை சண்டை போட்டுக்கொள்ளும் சம்பவம் அந்த பிஞ்சு உள்ளத்தில் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. இதனால் நதியா தனது தந்தையிடம் கோபித்துக்கொண்டு பேசுவதை நிறுத்தி விட்டாள்.

பட மூலாதாரம், தினத்தந்தி
கோபத்தில் இருக்கும் மகள் கோபம் தணிந்து தன்னிடம் எப்படியும் பேசுவாள் என்று சிவக்குமார் முதலில் நினைத்தார். ஒரு நாள் இரண்டு நாள் அல்ல, ஒரு மாதம் இரண்டு மாதம் அல்ல, கடந்த 8 மாதத்திற்கு மேல் நதியா தனது தந்தையிடம் பேசவே இல்லை. தனது அன்பு மகள் தன்னிடம் பேசாததை நினைத்து மிகவும் மனம் வருந்திய சிவக்குமார், மகள் நதியாவிடம், ஏம்மா... என்னிடம் பேச மறுக்கிறாய். 'நீ என்னிடம் பேச வேண்டுமானால் நான் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டுள்ளார்.
அதற்குச் சிறுமி நதியா, 'இனிமேல் அம்மாவிடம் சண்டை போடக்கூடாது. மேலும் நான் படிக்கும் பள்ளிக்கூடம் அருகில் உள்ள கருங்குளத்தில் குப்பைகள் தேங்கிக் கிடக்கிறது. அந்த குப்பைகளை அகற்றி குளத்தைச் சுத்தம் செய்ய வேண்டும்'. அப்போதுதான் நான் உங்களிடம் பேசுவேன்' என்று கூறியுள்ளார்.
தனது மகளைப் பேச வைப்பதற்காக சிவக்குமார் உடனடியாக களத்தில் இறங்கினார். இதனையடுத்து அவர் மகள் கூறிய கருங்குளத்தில் இறங்கி சுத்தம் செய்யத்தொடங்கினார். அவருடைய மனைவி அருள்மொழியும் கணவருடன் இணைந்து கருங்குளத்தைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். தம்பதியினர் இருவரும் சேர்ந்து அந்த குளத்திலிருந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். இதன் பிறகு தந்தையிடம் சிறுமி நதியா பேசத்தொடங்கி உள்ளார். சுத்தம் செய்யும் பணியில் பெற்றோருடன் இணைந்து சிறுமி நதியாவும் ஈடுபட்டுள்ளார்.
கோபத்தில் பேசாமல் இருந்த மகளைப் பேச வைக்கக் குளத்தைத் தந்தை சுத்தம் செய்த சம்பவம் அந்த பகுதியைச் சேர்ந்த மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதற்காகக் கிராம மக்கள் அந்த தம்பதியினரையும், சிறுமி நதியாவையும் பாராட்டினர்.

இந்து தமிழ்: 'வெங்காய விலையை கட்டுப்படுத்த அமைச்சர் செல்லூர் ராஜூ சொல்லும் யோசனை'
வெங்காயம் விலை அதிகரித்து பொதுமக்களுக்குச் சிரமம் ஏற்பட்டால், அரசே கொள்முதல் செய்து குறைந்த விலையில் விற்பனை செய்யும் என்று அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ மற்றும் ஆர்.காமராஜ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
கனமழை, வரத்துக் குறைவு இவற்றின் காரணமாகத் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பெரிய வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகி றது. மொத்த சந்தையில் விற்கப் படும் விலைக்கும் சில்லறை விலைக்கும் இடையே ரூ.20-க்கும் மேல் வித்தியாசம் காணப்படுகிறது.
இந்நிலையில், வெங்காய விலை உயர்வு தொடர்பாகத் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ மற்றும் ஆர்.காமராஜ் ஆகியோர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், செயலர் தயானந்த் கட்டாரியா, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர், உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரி கள், பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.45 முதல் 46 வரையும் தனியார் கடைகளில் ரூ.55 முதல் 60 வரையும் விற்கப்படுவதாகவும் அதிகவிலைக்கு விற்கப்பட வில்லை என்றும் தெரிவித்தனர். மேலும், சமீபகாலமாக மகாராஷ்டிரா, கர்நாடகாவில் கனமழை பெய்ததால் வெங்காயத்தின் வரத்து குறைந்ததாகவும் இதனால் விலை உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதற்கிடையே, நாசிக் மற்றும் ஆந்திராவிலிருந்து அதிகளவில் வெங்காய லாரிகள் கோயம்பேடு வந்துகொண்டிருப்பதால், இன்னும் 2 அல்லது 3 நாட்களில் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்போது அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.காமராஜ் ஆகியோர் பேசும்போது,'' வெங்காய விலை தொடர்பான நிகழ்வு களை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். எங்கும் பதுக்கல் இல்லாமல், பொதுமக்களுக்கு சிரமமும் இல்லாமல் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போல் தேவைப்படும்போது, விலை கட்டுப்பாட்டு நிதியம் மூலம், அரசே வெங்காயத்தைக் கொள்முதல் செய்து பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் விற்க முதல்வரிடம் உத்தரவு பெற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

Ashok leyland ஊழியர்: Allowance குறைஞ்சிடுச்சு. செலவை சமாளிக்க இதுதான் வழி | Economy Slowdown
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு

தினமணி: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்
தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டில் சேர்ந்த சென்னை மாணவர் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
பின்வருமாறு அந்நாளிதழ் விவரிக்கிறது:
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த உதித்சூர்யா(20). "நீட்' தேர்வை ஆள்மாறாட்டம் செய்து எழுதி, தேனி அரசு அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாண்டு படிப்பில் சேர்ந்துள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து க.விலக்கு காவல் நிலையத்தில் மருத்துவக் கல்லூரி முதன்மையர் ராஜேந்திரன் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் மீது போலீஸார் வழக்குப் பதிந்து, ஆண்டிபட்டி காவல் நிலைய ஆய்வாளர் உஷா தலைமையில் தனிப் படை அமைத்து தலைமறைவாக உள்ள மாணவர் உதித்சூர்யாவை தேடி வருகின்றனர். சென்னையில், உதித் சூர்யாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் தனிப்படை காவல் சார்பு ஆய்வாளர் சுல்தான் பாட்ஷா தலைமையில் ஒரு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனியில் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையர் ராஜேந்திரனிடம் சனிக்கிழமை காவல் ஆய்வாளர் உஷா விசாரணை நடத்தினார்.
இந்நிலையில், ஆள்மாறாட்ட புகார் குறித்து ஏற்கெனவே உதித்சூர்யாவிடம் தேனி மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சார்பில் விசாரணை நடத்திய மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் எழிலரசன், பேராசிரியர்கள் ஜெயந்தி, ரெத்திகா, விஜயலட்சுமி ஆகியோரிடம் தனிப்படை காவல் ஆய்வாளர் உஷா, சார்பு ஆய்வாளர் அசோக் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினர். தொடர்ந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி அலுவலர்கள், கல்லூரி மற்றும் விடுதி மாணவர்களிடம் விசாரணை நடத்த உள்ளதாக தனிப்படை போலீஸார் கூறினர்.
மும்பை செல்கிறது தனிப்படை: மாணவர் உதித்சூர்யா ஏற்கெனவே கடந்த 2017 மற்றும் 2018ஆம் ஆண்டு சென்னையில் உள்ள தேர்வு மையத்தில் "நீட்' தேர்வு எழுதியதாகவும், இந்த ஆண்டு அவர் மும்பையில் உள்ள தனியார் "நீட்' தேர்வு பயிற்சி மையம் ஒன்றில் சேர்ந்து படித்ததும் தனிப்படை போலீஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தேர்வு மையம் ஒன்றில் உதித்சூர்யா பெயரில் ஆள்மாறாட்டம் செய்து "நீட்' தேர்வு எழுதியிருப்பது தெரிய வந்துள்ளதால், விரைவில் மும்பை சென்று விசாரணை நடத்த உள்ளதாக தனிப்படை போலீஸார் கூறினர்.
இந்த நிலையில், விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'பருவமழையை எதிர்கொள்ள நடவடிக்கை: தமிழக முதல்வர்'

பட மூலாதாரம், Getty Images
வடகிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ள தமிழகத்தின் அனைத்து துறைகளும் செயலாற்ற தொடங்கிவிட்டன.
வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக, முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் பழனிசாமி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
இதற்காக ரூ.38.52 கோடி செலவில் நவீன கருவிகளை வாங்குவதற்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
- அமெரிக்காவில் காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியது என்ன?
- "எனது கனவுகளை களவாடிவிட்டீர்கள்?": பருவநிலை மாற்றம் தொடர்பாக கிரேட்டாவின் உரை
- வெடிகுண்டு செய்வது எப்படி? - சமூக ஊடகத்தில் வகுப்பெடுத்த அமெரிக்க ராணுவ வீரர்
- நீதிமன்ற தீர்ப்பை மீறி இந்து ஆலய வளாகத்தில் பௌத்த பிக்கு உடல் தகனம் - பதற்றம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












