இந்திய - அமெரிக்க வர்த்தகம்: இந்தியா அதிகப்படியான வரி விதிப்பதாக டிரம்ப் கூறுவது சரியா? BBC Reality Check

மோடி மற்றும் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், உண்மை சோதிக்கும் குழு
    • பதவி, பிபிசி

கூற்று: இறக்குமதி பொருட்களுக்கு உலகிலேயே அதிகளவில் இந்தியா வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உண்மை: இந்தியாவின் சராசரி வரி விதிப்பு உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களைக் காட்டிலும் அதிகமானதாகும். ஆனால், பிற நாடுகள், குறிப்பிட்ட சில பொருட்களில் அதிக வரி விதிக்கின்றன. மேலும் சீனாவுடனான வர்த்தக போரில் சீன பொருட்களுக்கு 360 பில்லியின் அமெரிக்க டாலர்களுக்கும் மேல் வரி விதித்தது அமெரிக்கா.

இந்தியப் பிரதமர் மோதியின் அமெரிக்கப் பயணத்தில் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான வர்த்தகம் முக்கிய அம்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இருநாடுகளுக்கு மத்தியில் அரசியல் மற்றும் மூலோபாய உறவுகள் வளர்ந்தாலும், வர்த்தக ரீதியாகப் பதற்றங்கள் நிலவி வருகின்றன.

இந்தியாவின் ஏற்றுமதி பொருட்களுக்கான வரிகள் "ஏற்றுக் கொள்ளமுடியாதபடி" உள்ளதாகவும், இந்தியா "வரிகளின் ராஜா" என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தியா அதிகப்படியான வரி விதிப்பதாக டிரம்ப் கூறுவது சரியா?

அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கும் விஷயத்தில் இந்தியா மோசமாக நடந்து கொள்வதாக அமெரிக்காவின் குடியரசு கட்சியைச் சேர்ந்த செனட்டர் லிண்ட்சே கிரஹாம் தெரிவித்துள்ளார்.

உலக வர்த்தக நிறுவனத்தின் பிற நாடுகளுக்கு, இந்தியா விதிக்கும் வரி எந்த ஒரு முக்கிய பொருளாதாரத்தைக் காட்டிலும் அதிகமானதாகும்.

உலக வர்த்தக நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் தங்களுக்குள் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளாதபோது விதித்துக் கொள்ளும் சராசரி வரியை அறிக்கை குறிக்கிறது.

2018ஆம் ஆண்டு இந்தியாவின் சராசரி வரி விகிதம் 17.1%. அது ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை காட்டிலும் அதிகமாகும். அந்நாடுகளின் வரி விகிதம் 3.4% லிருந்து 5.2% வரையாகும்.

முக்கிய மற்றும் வளரும் நாடுகளின் சராசரி வரி விதிப்பு

முக்கிய மற்றும் வளரும் நாடுகளின் சராசரி வரி விதிப்பு

இந்தியாவின் சராசரி வரி அளவு பிற வளரும் நாடுகளைக் காட்டிலும் அதிகமாகும். 2018ஆம் ஆண்டு தென் கொரியாவின் சராசரி வரி விகிதம் 13.7%, பிரேசிலின் வரி விகிதம் 13.4% இதன்படி டிரம்ப் சொன்னது சரிதான். இந்தியாவின் வரி விதிப்பு சர்வதேச அளவில் அதிகமான ஒன்றாகவே உள்ளது.

கடந்த வருடம் அமெரிக்கா மற்றும் சீனா இடையே நடைபெற்ற வர்த்தக போரில் இருநாடுகளும் பரஸ்பரம் வரி விதித்தன.

இருப்பினும் இது உலக வர்த்தக நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையில் பிரதிபலிக்கவில்லை. இம்மாதிரியான வரி விதித்தல் இருநாடுகளின் சராசரி வரி விதிப்பை அதிகரிக்கும்.

என்ன சொல்கிறது இந்தியா?

உலக வர்த்தக நிறுவனத்தால் ஒப்புக் கொள்ளப்பட்ட அளவிலேயே தங்களது சராசரி வரி விதிப்பு இருப்பதாக இந்தியா கூறுகிறது.

மேலும் இந்திய அதிகாரிகள் பிற வரி விகித முறைகளை சுட்டிக்காட்டுகின்றனர்.

இதில் இறக்குமதியான பொருட்களின் அளவை வைத்துக் கொண்டு, வசூலிக்கப்பட்ட வரிகளின் சராசரி கணக்கிடப்படுகிறது.

இதன்படி 2017ஆம் ஆண்டு இந்தியாவின் சராசரி வரி விதிப்பு 11.7%; பிரேசில் சராசரி வரி விதிப்பு - 10%; மற்றும் தென் கொரியாவின் சராசரி வரி விதிப்பு 8.1%.

ஆனால் இந்த முறையில், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பானின் சராசரி வரி விதிப்பு முறையே 2.3%, 3% மற்றும் 2.4% ஆக உள்ளது.

இந்தியா மட்டும் அதிக வரிகளை விதிப்பதில்லை. எடுத்துக்காட்டாக ஜப்பான், தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் குறிப்பிட்ட சில இறக்குமதி பொருட்களுக்கு அதிக வரி விதிக்கின்றன.

சில வகையான புகையிலை பொருட்களுக்கு அமெரிக்கா 350% வரி விதிக்கின்றது. மேலும் சில வகையான ஐரோப்பிய சீஸ், சாக்லெட் மற்றும் வேர்க்கடலைக்கும் 100% அல்லது அதற்கும் மேலும் வரி விதிக்கிறது.

ஆனால் அமெரிக்காவின் ஒட்டுமொத்த வரி விதிப்பு மிகவும் குறைந்த ஒன்றாகவே இருந்துள்ளது. ஒரு அறிக்கையின்படி உலகின் மிக்க் குறைந்த வரி விதிப்பு நாடாக அமெரிக்கா இருந்துள்ளது.

அமெரிக்கா மீது இந்தியா விதிக்கும் வரி என்ன?

பாதாம், வால்நட், ஆப்பிள் மற்றும் எஃகு உட்பட 28 பொருட்களுக்கு இந்தியா ஜூன் மாதம் வரி விதித்தது.

அமெரிக்க வால்நட்கள் மீதான வரி 120% வரை சென்றது. கடலை மற்றும் சில பயறு வகைகளுக்கு 70% வரை வரி விதிக்கப்பட்டது.

இந்தியா

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவுக்கான சிறப்பு வர்த்தக சலுகைகளை அமெரிக்கா திரும்பப் பெற்றுக் கொண்ட பிறகு இந்தியா இம்மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

கடந்த ஆண்டு எஃகு மற்றும் அலுமினியத்துக்கான வரிகளிலிருந்து இந்தியாவை விலக்க அமெரிக்கா மறுத்துவிட்டதிலும் இந்தியா கோபடைந்திருந்தது.

பொதுவாக, ரத்தின கற்கள், மருந்துகள், இயந்திரங்கள் மற்றும் கனிம எரிபொருட்கள் மற்றும் வாகனங்களை அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது.

விவசாய பொருட்களை தவிர்த்து, அமெரிக்கா சில விலைமதிப்புமிக்க கற்கள், கனிம எரிபொருட்கள், விமானம், இயந்திரம், கண்ணாடி மற்றும் மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்கிறது.

இந்தியாவுடனான அமெரிக்க வர்த்தகத்தில் உயர்வு

இந்தியாவுடனான அமெரிக்க வர்த்தகத்தில் உயர்வு

ஹார்லி டேவிட்சன் இருசக்கர வாகனங்களுக்கு இந்தியா 100% வரி விதிப்பதை டிரம்ப் சுட்டிக்காட்டினார் ஆனால் அது அமெரிக்காவின் புகாருக்குப் பிறகு பாதியாகக் குறைக்கப்பட்டது.

மேலும் தகவல் தொழில்நுட்ப பொருட்களுக்கு இந்தியா விதிக்கும் வரிகள் குறித்தும் அமெரிக்கா கவலைத் தெரிவித்தது.

இருப்பினும் இருநாடுகளுக்கும் இடையே உள்ள வர்த்தகம் உயர்ந்து கொண்டுதான் வருகிறது. 2018ஆம் ஆண்டு அது 142.1பில்லியன் அமெரிக்க டாலர்களை தொட்டது.

ரியாலிடி செக்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :