இலங்கையில் தாக்குதல் நடத்தப்பட்ட செபஸ்டியன் தேவாலயம் மீண்டும் திறப்பு

இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் சேதமடைந்த நீர்கொழும்பு - கட்டுவாபிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயம் மூன்று மாதங்களுக்கு பின்னர் இன்று திறந்து வைக்கப்பட்டது.
தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் மூன்று மாதங்கள் ஆகின்ற நிலையிலேயே இந்த தேவாலயம் புனரமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது.
கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இன்று இடம்பெற்ற விசேட ஆராதனைகள் நடத்தப்பட்டு தேவாலயம் மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.
ஏப்ரல் 21ஆம் தேதி தாக்குதல் சம்பவத்தில் நீர்கொழும்பு - கட்டுவாபிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டிருந்தது.
முப்படையினரின் முழுமையான ஒத்துழைப்புடன் இந்த தேவாலயம் புனரமைக்கப்பட்டது.

தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்தியை வேண்டி இன்று விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.
இன்றைய விசேட திருப்பலி ஆராதனைகளுக்காக பெருந்திரளான பக்தர்கள் வருகைத் தந்திருந்ததுடன், பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டிருந்தன.
இலங்கையில் ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர விடுதிகளை இலக்கு வைத்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.

கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு - கட்டுவாபிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம் மற்றும் கொழும்பிலுள்ள மூன்று நட்சத்திர விடுதிகளை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 500க்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












