காஞ்சிபுரம் அத்திவரதர்: பெருமாளை காண குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்: காரணம் என்ன?

அத்திவரதரைக் காண இத்தனை ஆவல் ஏன்?
    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை காட்சியளிக்கும் அத்தி மரத்தாலான வரதராஜப் பெருமாளின் திருவுருவத்தைக் காண தினமும் லட்சக் கணக்கான மக்கள் திரள்கிறார்கள். இந்தக் கடவுளை தரிசிக்க பெரும் எண்ணிக்கையில் மக்கள் குவிவது ஏன்? என்ன நடக்கிறது காஞ்சிபுரத்தில்?

"செவ்வாயும் புதனும் கூட்டமே இல்லை சார். சந்திரகிரகணமாம். இன்னைக்குப் பாருங்க, காலையிலேயே ஒரு லட்சம் பேர் வந்துட்டாங்க. இங்க இருக்கும் போலீஸ்காரங்க கொஞ்ச பேர்தான். இப்படி இவ்வளவு பேரைக் கட்டுப்படுத்த முடியும்? எதுக்காக இவ்வளவு பேர் திரண்டு வர்றாங்கன்னே புரியலை" என்கிறார் வரதராஜப் பெருமாள் கோவிலின் மேற்கு வாயிலில் நிற்கும் ஒரு காவலர்.

காஞ்சிபுரத்தில் காவலுக்கு நிற்கும் எந்தக் காவலரிடம் காதைக் கொடுத்தாலும் இது போன்ற ஒரு புலம்பலைக் கேட்க முடியும். ஜூலை 18ஆம் தேதி வியாழக்கிழமை, அத்திவரதரைப் பார்க்க நின்ற வரிசையில் ஏற்பட்ட நெரிசலில் நூற்றுக்கணக்கானவர்கள் மயங்கி விழுந்தனர். இவர்களில் பல காவலர்களும் இருந்தனர். இப்படி மயங்கி விழுந்த பொதுமக்களில் நான்கு பேர் வியாழக்கிழமையன்றே உயிரிழந்தனர்.

இப்படி உயிரைப் பணையம் வைத்து, இந்தக் கடவுளை தரிசிக்க மக்கள் ஏன் திரள்கிறார்கள் என்பது பலருக்கும் புரியாத புதிராக இருக்கிறது.

அத்திவரதர்

இந்தப் பரபரப்பின் ஊற்றுக்கண், ஜூன் மாத மத்தியில் வெளியாக ஆரம்பித்த ஊடகச் செய்திகள்தான். அப்போதுதான், நாற்பதாண்டுகளுக்கு ஒரு முறை தரிசனம் தரும் அத்திவரதரின் திருவுருவம், விரைவில் அனந்தசரஸ் குளத்திலிருந்து வெளியில் எடுக்கப்படவிருப்பதாகவும், பொதுமக்களின் பார்வைக்காக 48 நாட்கள் வைக்கப்படவிருப்பதாகவும் செய்திகள் வெளியாக ஆரம்பித்தன. ஜூன் மாத கடைசி வாரத்தில், இந்தச் செய்தி இடம்பெறாத நாளிதழ்கள் இல்லை எனுமளவுக்கு இந்த வைபவம் குறித்து ஆர்வமும் பரபரப்பும் தொற்ற ஆரம்பித்தது.

27ஆம் தேதி இரவு - 28ஆம் தேதி அதிகாலையில் வரதராஜ பெருமாள் கோவிலில் நூறு கால் மண்டபத்திற்குப் பின்னால் உள்ள அனந்தசரஸ் குளத்திலிருந்து அத்திவரதரின் சிலை வெளியில் எடுக்கப்பட்டது. இதற்காக குளத்தில் இருந்த நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு, அருகில் இருந்த மற்றொரு குளத்தில் நிரப்பப்பட்டது.

அத்திவரதரைக் காண்பதற்காக பக்தர்கள் ஆவலுடன் இருந்த நிலையில், ஒன்றாம் தேதியிலிருந்துதான் அவரை தரிசிக்க முடியுமென அறிவிக்கப்பட்டது. ஜூலை ஒன்றாம் தேதியிலிருந்து அத்திவரதர் வரதராஜப் பெருமாள் கோவிலின் வசந்த மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டார். ஜூலை 1 முதல் ஜூலை 19ஆம் தேதிவரை சுமார் 13 லட்சம் பேர் அத்திவரதரைக் காண வந்திருக்கலாம் என உத்தேசமான கணக்குகள் தெரிவிக்கின்றன.

அத்திவரதரின் சிலை அனந்த சரஸ் குளத்திற்குள் சென்றது எப்படி?

அத்திவரதரின் சிலை அனந்தசரஸ் குளத்திற்குள் வைக்கப்பட்டது குறித்து பல கதைகள் உலவுகின்றன.

ஒவ்வொரு கோவிலிலும் பிரதான தெய்வத்திற்கு மூலவர், உற்சவர், ஸ்னானபேரர், பலிபேரர், சயனபேரர் என ஐந்து திருவுருவங்கள் உண்டு. இந்த அத்திவரதரின் திருவுருவம் துவக்கத்தில் மூலவராக பிரதிஷ்டை செய்யப்பட்டு வணங்கப்பட்டது என்பதை பொதுவாக அனைவரும் ஏற்கின்றனர்.

அத்திவரதரைக் காண இத்தனை ஆவல் ஏன்?

தங்கள் நம்பிக்கையின் அடிப்படையில், இந்த அத்திவரதர் திருவுருவம் குறித்து கோவிலின் அர்ச்சகர்கள் ஒரு கதையைச் சொல்கிறார்கள். "இந்த மூர்த்தியை ஒரு யாக வேள்வியில் தோன்றச் செய்த பிரம்மா, வரதராஜ பெருமாள் கோவிலில் தன் கையாலேயே பிரதிஷ்டை செய்தார். தன் காலத்திற்குப் பிறகு அவரை இந்த அனந்தசரஸ் குளத்தில் எழுந்தருளச் செய்துவிட்டுச் சென்றுவிட்டார். 400 வருடங்களுக்கு முன்பாக அர்ச்சகர் ஒருவர் கனவில் தோன்றிய அத்திகிரி வரதர், தன்னை வெளியில் எடுத்து 48 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிக்கச் செய்யும்படி கூறினார். அதன்படியே இப்போது செய்யப்பட்டு வருகிறது" என்கிறார் இந்தக் கோவிலின் பட்டரான கே. லட்சுமி நரசிம்ம பட்டர்.

ஆனால், வரலாற்று ரீதியாக இந்த சிலை குறித்தும் இந்த வைபவம் குறித்தும் உள்ள குறிப்புகள் மிகக் குறைவு.

இருந்தபோதும் பூதத்தாழ்வார் பாடிய இரண்டாம் திருவந்தாதியில் "என் நெஞ்சம் மேயான் என் சென்னியான் தானவனை/ வல் நெஞ்சம் கீண்ட மணி வண்ணன் முன்னம் சேய் / ஊழியான் ஊழி பெயர்த்தான் உலகு ஏத்தும்/ ஆழியான் அத்தியூரான் " என்ற பாசுரமும் "அத்தியூரான் புள்ளை ஊர்வான் அணி மணியின்/ துத்தி சேர் நாகத்தின்மேல் துயில்வான் முத்தீ/ மறை ஆவான் மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும்/ இறை ஆவான் எங்கள் பிரான்" என்ற பாசுரமும் இந்த அத்திவரதரையே குறிப்பதாக ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருதத் துறையின் துணைப் பேராசிரியர் ஜி. சங்கரநாராயணன் கூறுகிறார்.

"விஜய நகர மன்னனான நரசிங்கராயருக்குக் கீழே கங்காதரன் என்பவருடைய மகனான விரூபாக்ஷதனாயகன் என்ற உள்ளூர் அதிகாரி, பணியாற்றி வந்தார். அவர் இங்கிருக்கும் பேரருளாளனையும் பெருந்தேவித் தாயாரையும் மறு பிரதிஷ்டை செய்தார். இந்த விவரம் தாயார் சன்னதியில் உள்ள ஒரு கல்வெட்டில் இருக்கிறது. இந்தக் கட்டத்தில்தான் கோவிலில் இருந்த அத்திமரத்தாலான திருமேனி கல்லாலான திருமேனியாக மாற்றப்பட்டிருக்கலாம்" என்கிறார் சங்கரநாராயணன்.

அத்திவரதரைக் காண இத்தனை ஆவல் ஏன்?

இந்த காலகட்டத்திற்கு முன்பு வாழ்ந்த புகழ்பெற்ற வைணவ ஆச்சார்யா்களில் ஒருவரான வேதாந்த தேசிகன், தான் எழுதிய தேவராஜபஞ்சாக்ஷரத்தில் எவ்விதமான பூச்சுகளும் இல்லாத, கவசங்களும் இல்லாத திருமேனியைப் பற்றிக் குறிப்பிடுகிறார். ஆகவே, அவருடைய காலத்தில் அத்தி மரத்தாலான திருமேனிதான் இருந்திருக்க வேண்டும் என்கிறார் இவர்.

வரலாற்று நூல்களில் சற்று மாறுபட்ட தகவல்கள் கிடைக்கின்றன. தற்போதுள்ள வரதராஜப் பெருமாள் கோவிலின் பெரும் பகுதி, சோழ மன்னர்களால் பதினொன்றாம் நூற்றாண்டில் கட்டி முடிக்கப்பட்டது. ஆகவே இந்தத் திருவுருவம் அதற்குப் பிறகுதான் வடிக்கப்பட்டிருக்க வேண்டும். முதலாம் குலோத்துங்கச் சோழன் ஆட்சிக் காலத்திலிருந்தே வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு காஞ்சியை ஆண்ட மன்னர்கள் பல திருப்பணிகளைச் செய்திருக்கிறார்கள்.

வரதராஜப் பெருமாள் கோவிலுக்குள் மன்னர்கள் அளித்த கொடைகள், திருப்பணிகள் குறித்து மட்டும் 362க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் இருப்பதாக அ.பா. திருஞானசம்பந்தர் எழுதிய "காஞ்சிபுரம் மாவட்ட வரலாறு" என்ற நூல் தெரிவிக்கிறது. இதில் காலத்தால் முந்தைய கல்வெட்டு 1015ஆம் ஆண்டைச் சேர்ந்தது. இந்த நூலில்தான், 1304ல் வீரசோழன் மகன் சம்பா என்ற சம்புவராயன் புதிய புஷ்ப ரதம் செய்வித்ததோடு, மூலவர் அத்திவரதர் அனந்த சரஸ் புஷ்பகிரியில் கிடத்தப்பட்டு, அத்தியூராழ்வார் கற்சிற்பம் மூலவராக வடிக்கப்பட்டது என்ற குறிப்பும் காணக்கிடைக்கிறது.

அத்திவரதரைக் காண இத்தனை ஆவல் ஏன்?

18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த தெலுங்குக் கல்வெட்டில்தான் அத்திவரதர் வைபம் குறித்த தகவல் முதல் முறையாகக் காணப்படுகிறது என்கிறார் சங்கரநாராயணன். "1781 ஜூலை 30ஆம் தேதியிட்ட தெலுங்கு கல்வெட்டில் பிலவ வருடத்தில் அனந்தசரஸ் மண்டபத்தில் இருந்த நீர் முழுவதும் இறைக்கப்பட்டு, அத்திவரதர் வெளியில் கொண்டுவரப்பட்ட தகவல் இருக்கிறது. இந்தக் கல்வெட்டு, கோவிலின் உதயபானு மண்டபத்தில் இப்போதும் இருக்கிறது. இதுதான் அத்திவரதரைப் பற்றிக் காணப்படும் முதல் கல்வெட்டு.

ஆனால், நாற்பதாண்டுகளுக்கு ஒரு முறை ஏன் இவர் வெளியில் எடுக்கப்படுகிறார் என்பதற்கு புராண ரீதியான, ஆன்மீக ரீதியான காரணங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. அர்ச்சகர் ஒருவரின் கனவில் சொன்னார் என்பது மட்டுமே காரணமாகச் சொல்லப்படுகிறது" என்கிறார் இவர்.

ஆனால், ஒவ்வொரு நாற்பதாண்டு இடைவெளியிலும் சரியாக இந்த வைபவம் நடைபெற்றதாகச் சொல்ல முடியாது. "1854ல் இருந்து எப்போதெல்லாம் இந்த வைபம் நடந்ததென்ற குறிப்புகள் இருக்கின்றன. அதன்படி 1854, 1892, 1937, 1979 ஆகிய ஆண்டுகளில் இந்த வைபம் நடந்திருக்கிறது. 1937க்குப் பிறகு 1977ல் நடந்திருக்க வேண்டும். ஆனால், 1977-78ல் ராஜகோபுர பணிகள் நடந்ததால் இரண்டாண்டுகள் தாமதமாகிவிட்டது. இந்த முறை சரியாக 40 ஆண்டுகளில் வைபவம் நடக்கிறது" என்கிறார் லட்சுமி நரசிம்ம பட்டர்.

Presentational grey line
YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

Presentational grey line

1937, 1979 ஆகிய ஆண்டுகளில் இந்த அத்திவரதர் வைபவம் நடந்ததற்கான பத்திரிகைச் செய்திகள் இருக்கின்றன. தினமணி நாளிதழில் வெளிவந்த குறிப்புகளில் 1979ஆம் ஆண்டில் ஜூலை 2 முதல் ஆகஸ்ட் 20வரை அத்திவரதர் வைபவம் நடைபெற்றதாகவும் அப்போதைய ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரி அத்திவரதரை தரிசித்ததாகவும் காணப்படுகிறது. ஆனால், 24 நாட்களுக்குப் பதிலாக கடைசி பத்து நாட்களில் மட்டுமே நின்ற கோலத்தில் அத்திவரதர் காட்சியளித்திருக்கிறார். 1937ல் ஜூன் மாதம் 12ஆம் தேதி அத்திவரதர் வைபம் துவங்கியிருக்கிறது.

தற்போது, இந்த அத்திவரதர் திருவுருவம் சயன கோலத்தில் காட்சியளித்து வருகிறது. மொத்தமுள்ள 48 நாட்களில் 24 நாட்கள் சயன கோலத்திலும் 24 நாட்கள் நின்ற திருக்கோலத்திலும் பெருமாள் காட்சியளிப்பார் எனப் பொதுவாகச் சொல்லப்படுகிறது. இந்த அத்திவரதர் திருவுருவம் உண்மையில் வரதராஜப் பெருமாளின் நின்ற திருக்கோலம்தான். ஆனால், பல ஆண்டுகள் நீரிலேயே மூழ்கியிருக்கிறது என்பதால், அனந்தசரஸ் குளத்தைவிட்டு வெளியில் எடுக்கப்பட்டவுடன் சயனகோலத்திலேயே பக்தர்களின் காட்சிக்கு வைக்கப்படுகிறது.

இந்த ஆண்டிலும்கூட சரியாக 24 நாட்களில் அத்திவரதர் நின்ற திருக்கோலத்திற்கு மாறுவார் என உறுதியாகச் சொல்ல முடியாது என்கிறார்கள் கோவிலைச் சேர்ந்தவர்கள். முக்கியக் காரணம், பக்தர்களின் கூட்டம். நின்ற கோலத்திற்கு மாறிய பிறகு, ஏற்கனவே தரிசித்த பக்தர்கள் மீண்டும் வரக்கூடும் என்பதால், இறுதியாக சில நாட்கள் மட்டும் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கச் செய்துவிட்டு அனந்தசரஸ் குளத்திற்குள் அத்திவரதர் வைக்கப்படலாம்.

அத்திவரதர் பெருமாளா, புத்தரா?

அத்திவரதர் வைபம் துவங்கிய சில நாட்களில், இந்தத் திருவுருவம் உண்மையில் திருமாலுடையதா அல்லது புத்தருடையதா என சமூக வலைதளங்களில் சிலர் விவாதித்தனர்.

அத்திவரதர் திருவுருவத்தின் ஒரு கையில் சக்கரமும் மற்றொரு கையில் சங்கும் மூன்றாவது கரம் அபய ஹஸ்த முத்திரையுடனும் நான்காவது கரம் கதையுடனும் காட்சியளிக்கிறது. இவை திருமாலின் திருவுருவங்களுக்கே உரிய முத்திரைகள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

"இதில் விவாதத்திற்கே இடமில்லை. காரணம், இந்தத் திருவுருவம் குறித்து 5-6ஆம் நூற்றாண்டுகளிலேயே பூதத்தாழ்வார் பாடிச்சென்றிருக்கிறார். அப்படியிருக்கும்போது அதற்குப் பிறகான இந்தத் திருவுருவம் எப்படி புத்தருடையதாக இருக்கும்? தற்போது வழிபாடு செய்யப்படும் இந்தத் திருவுருவம் மிகவும் பிற்காலத்தைச் சேர்ந்தது. பெருமாளின் கையிலிருக்கும் சக்கரத்தைப் பார்த்தாலே அதைப் புரிந்துகொள்ள முடியும்" என்கிறார் சங்கரநாராயணன்.

இறைவனின் திருமேனிகள் அத்திமரத்தில் இருப்பது என்பது தமிழகத்தில் அரிதானதல்ல. கோழிகுத்தி, திருக்கோவிலூர், கருங்குளம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள மூலவர் திருமேனிகள் அத்திமரத்தாலான திருமேனிகளாகவே இருக்கின்றன.

அத்திவரதரைத் தரிசிக்க தினமும் லட்சக்கணக்கானவர்கள் வந்து குவிவதால் காஞ்சி நகரம் திணறி வருகிறது. இங்குள்ள உணவகங்கள் அனைத்தும் எல்லா நேரத்திலும் நிரம்பி வழிகின்றன. பேருந்துகள், ஆட்டோக்கள் எப்பொழுதும் ஆட்களுடன் பறந்து கொண்டிருக்கின்றன.

ஆனால், அத்திவரதரைத் தரிசிப்பதற்கான ஏற்பாடுகள் மிக மோசமாக இருப்பதாக பக்தர்கள் கருதுகிறார்கள். "இத்தனை லட்சம் பேர் வரும் என எதிர்பார்த்து சரியான முறையில் ஏற்பாடு செய்திருக்க வேண்டமா? எங்கேயுமே ஒரு ஒழுங்கு என்பது இல்லை. வரிசைகள் ஒழுங்காக இல்லை. வரிசைகளுக்கு அருகில் குடிநீர் கிடையாது. கிட்டத்தட்ட 6- 7 மணி நேரம் காத்திருந்தாலும் அத்திவரதரை தரிசிப்போமா என்ற உத்தரவாதமில்லை" என பிபிசியிடம் தெரிவித்தார் பெங்களூரைச் சேர்ந்த ஒரு பக்தர்.

அத்திவரதரைக் காண இத்தனை ஆவல் ஏன்?

2000க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவந்தாலும் அது போதுமானதாக இல்லை.

மேலும், இந்த முறை ஏற்பாடுகளை அறநிலையத் துறைக்குப் பதிலாக மாவட்ட நிர்வாகமே மேற்கொண்டிருக்கிறது. வைபவம் தொடர்பான முடிவுகள் மாவட்ட நிர்வாகத்தால் மட்டுமே எடுக்கப்படுகின்றன என்ற குறை அறநிலையத் துறை அதிகாரிகளிடம் காணப்படுகிறது.

இந்த வைபவத்திற்குப் பின்னால், எவ்வித புராணக் கதைகளோ, சம்பிரதாயங்களோ இல்லாத நிலையில், அத்திவரதர் காட்சியளிக்கும் தினங்களை இன்னும் சில நாட்கள் ஏன் அதிகரிக்கக்கூடாது என்றும், அத்திவரதரை மிகச் சிறிய வசந்த மண்டபத்தில் வைத்திருப்பதற்குப் பதிலாக வேறு விசாலமான மண்டபங்களில் வைக்கலாமே என்றும் ஆலோசனைகள் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால், அப்படிச் செய்ய முடியாது என்கிறார் லக்ஷ்மி நரசிம்மபட்டர். "48 நாட்கள் என்பதை மாற்ற முடியாது. தவிர, அத்திவரதர் முன்பு மூலவராக இருந்தவர். ஆகவேதான், வசந்த மண்டபத்தில் எழுந்தருளச் செய்திருக்கிறோம். மூலவரை எல்லா இடங்களிலும் எழுந்தருளச் செய்ய முடியாது." என்கிறார் அவர்.

18ஆம் தேதியன்று நிகழ்ந்த துரதிர்ஷ்டவசமான மரணங்களுக்குப் பிறகு, தரிசன நேரத்தில் சில மாறுதல்களை செய்திருக்கிறது நிர்வாகம். இந்த மாறுதல்கள் எந்த அளவுக்குப் பலனளிக்கும் என்புத போகப்போகத்தான் தெரியவரும்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :