இலங்கை இராவணா செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது

பட மூலாதாரம், BIRDS 3 Satellite Project
இலங்கையை சேர்ந்த இருவரால் வடிவமைக்கப்பட்ட செயற்கைக்கோளான 'இராவணா 1", சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை நேரப்படி இன்று மாலை 3.45 அளவில் இராவணா 1 வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து 400 கிலோமீட்டர் தூரத்தில் 'இராவணா 1" செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இலங்கையை சேர்ந்த இருவரின் முயற்சியில் நிர்மாணிக்கப்பட்ட 'இராவணா 1" செயற்க்கைக்கோள் கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டிருந்தது.
தரிந்து தயாரத்ன மற்றும் துரனி ஷாமிகா ஆகிய இரண்டு இலங்கையர்களால் தயாரிக்கப்பட்ட 'இராவணா 1" செய்ற்கைக்கோள் கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இவ்வாறு கையளிக்கப்பட்ட 'இராணவா 1" செயற்கைக்கோளுடனான ராக்கெட், அமெரிக்காவின் விர்ஜினியாவிலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி அதிகாலை, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சிக்னுஸ் (Cygnus) என்றழைக்கப்படும் பொட்களுடனான ராக்கெட் மூலம் இந்த 'இராவணா 1" செய்றகைக்கோள் நாசாவினால் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
பார்ட்ஸ் 3 திட்டம் என்ற பெயரில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இலங்கை, ஜப்பான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் இணைந்து மூன்று சிறியரக செயற்கைக்கோள்களை இன்று விண்ணுக்கு ஏவியிருந்தன.
சிறிய ரகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோளுக்கு, மிகவும் குறைந்தளவிலான நிதியே செலவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், BIRDS 3 Satellite Project
1000 சென்டி மீட்டர் அளவை கொண்டமைந்துள்ள இந்த செயற்கைக்கோள், 1.05 கிலோகிராம் எடையை கொண்டமைந்துள்ளது.
இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் ஒன்றரை வருடம் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், ஐந்து வருடங்கள் அதன் பயன்பாட்டை பெற்றுக் கொள் முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இராவணா 1 செயற்கைக்கோளின் பயன்பாடு
இலங்கை மற்றும் அதனை அண்மித்துள்ள நாடுகளின் புகைப்படங்களை பதிவு செய்தல் உள்ளிட்ட பல பயன்பாட்டு திட்டங்களை பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது.

பட மூலாதாரம், Getty Images
ஆர்த்தர் சீ கிளார்க் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சனத் பனாவென்னவின் யோசனைக்கு அமைய இந்த செயற்கைக்கோள் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, அதற்கு 'இராவணா 1" என பெயர் சூட்டிப்பட்டிருந்தது.
இராமயணத்தில் வரும் இராவணனின் விண்வெளி தொழில்நுட்பத்தை உலகிற்கு வெளிப்படுத்தும் நோக்குடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக இலங்கை விண்வெளி மையம் அறிவித்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












