இலங்கையில் அமைச்சுக்களின் செயலாளர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசரச் சந்திப்பு

மைத்திரிபால சிறிசேன

பட மூலாதாரம், Getty Images

இலங்கையில் பிரதமரும், அமைச்சர்களும் தமது பதவிகளை வகிப்பதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், சகல அமைச்சுகளின் செயலாளர்களையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று செவ்வாய்கிழமை முற்பகல் அவசரமாகச் சந்திதார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

நடைமுறையிலுள்ள சட்டத்துக்கு அமைவாக, பொதுச் சேவைகளை எந்தவித தடைகளுமின்றி , தொடர்ச்சியாக நிறைவேற்றுவதற்குத் தேவையான ஆலோசனைகளையும் கட்டளைகளையும் சகல அமைச்சுகளின் செயலாளர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியதாக, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இவ்வாறான சந்தர்ப்பத்தில் அரச பாதுகாப்பினைப் போன்றே, நாட்டுக்கும் பொதுமக்களுக்குமான தமது கடமைகளையும் பொறுப்புக்களையும் குறைவின்றி நிறைவேற்றுமாறும், அனைத்து அரச சேவையாளர்கள், முப்படையினர் மற்றும் போலீசாருக்கும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும், ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிரதமரும், அமைச்சர்களும் தமது பதவிகளை வகிப்பதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் 12ஆம் தேதி வரை, இடைக்காலத் தடையுத்தரவொன்றினைப் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேல்முறையீடு

மேல்முறையீடு

பட மூலாதாரம், Twitter

முன்னதாக, மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை வகிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை நேற்று வழங்கியமையினை அடுத்து, அந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக, மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இடைக்காலத் தடை உத்தரவு தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவும், அவரின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைப்பின் தலைவர்களும் சட்ட ஆலோசனைகளைப் பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, பொதுத் தேர்தலொன்றுக்கான தங்கள் அழைப்புத் தொடரும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தனது 'ட்விட்டர்' பக்கத்திலேயே, மேலுள்ள விடயங்களை நாமல் ராஜபக்ஷ பதிவு செய்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: