'இன்ஹேலரில் ஆல்கஹால்' - நடிகை காயத்ரி ரகுராம் சொல்வது உண்மையா?

இன்று முக்கிய இந்திய நாளேடுகள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
இந்து தமிழ்: 'இன்ஹேலரில் ஆல்கஹால்'
இன்ஹேலரில் ஆல்கஹால் இல்லை. வாகன சோதனையின் போது குடித்திருந்ததாக காட்டாது. எனவே, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.
"நடிகையும், பாஜக இளைஞரணி நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் கடந்த வாரம் குடிபோதையில் கார் ஓட்டி வந்ததாக அடையாறு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்தனர். இச்சம்பவம் திரையுலகிலும், அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் 'காமதேனு' வார இதழுக்கு காயத்ரி ரகுராம் அளித்த பேட்டியில், "எனக்கு இருக்கும் வீஸிங் பிரச்சனைக்காக இன்ஹேலர் அடித்திருந்தேன். இன்ஹேலரில் ஆல்கஹால் இருக்கிறது. அதனால், போக்குவரத்து போலீஸாரின் வாகன சோதனையில் நான் குடித்திருந்ததாக காட்டியிருக்கிறது. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் ரத்தப் பரிசோதனை எடுத்துப் பாருங்கன்னு நான் எவ்வளவு சொல்லியும் அவங்க கேட்கவில்லை" என்று தெரிவித்திருந்தார்.
காயத்ரி ரகுராமின் விளக்கம் இன்ஹேலர் பயன்படுத்துபவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்ஹேலரில் ஆல்கஹால் இருக்கிறதா என இதைக் கேள்விப்பட்ட மக்கள் அதிர்ச்சி அடைந் தனர். மேலும் இன்ஹேலர் எடுத்திருக்கும் நிலையில், வாகன சோதனையின்போது மது குடித் திருப்பதாக காட்டிவிடுமோ என்ற அச்சமும் பொதுமக்களிடம் பரவியது." என்கிறது அந்நாளிதழ்.
"மூச்சிறைப்பு நோய் (வீஸிங்) பிரச்சினை இருப்பவர் களுக்கு மருந்து, மாத்திரைகளை விட இன்ஹேலர் சிறந்தது. மருந்து, மாத்திரை என்பதை விட நேரடியாக நிவாரணம் அளிக்கும். இதில் ஆல்கஹால் இல்லை. இன்ஹேலர் பயன்படுத்தியவர்களை மது குடித்திருப்பதாக போலீசாரின் பரிசோதனைக் கருவி காட் டாது. ரத்தப் பரிசோதனை செய்தாலும் குடித்திருப்பதாக முடிவுகள் வராது. எனவே இன்ஹேலர் பயன்படுத்துபவர்கள் யாரும் பயப்பட வேண்டாம். நிம்மதியாக வாகனம் ஓட்டிச் செல்லலாம்" என்று மருத்துவர்கள் கூறியதாக விவரிக்கிறது இந்து தமிழ் நாளிதழ்.

தினமணி: 'காவிரி ஆணையத்தில் தமிழகம் கடும் எதிர்ப்பு'
மேக்கேதாட்டு அணையை கர்நாடக அரசு கட்டினால், தமிழக மக்களின் உரிமைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. மேலும், மத்திய நீர் ஆணையம் அளித்த அனுமதியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் தமிழகம் வலியுறுத்தியது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

பட மூலாதாரம், Getty Images
"தமிழக அரசு தெரிவித்த நியாயமான ஆட்சேபங்களை பரிசீலிக்காமலும், தமிழகம் மற்றும் இதர காவிரிப் படுகை மாநிலங்களின் ஒப்புதல் பெறாமலும் விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்கு கர்நாடக அரசுக்கு மத்திய நீர் ஆணையம் அனுமதி அளித்திருப்பது, கடந்த பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை மீறும் செயலாகும். கஜா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள காவிரி டெல்டா பாசன விவசாயிகளுக்கு இந்த அனுமதி பெரும் அதிர்ச்சியையும், தமிழக மக்களிடையே ஆழ்ந்த கவலையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட காவிரி நீரில் உரிய பங்கு கிடைக்காமல் போய்விடுமோ என்று மக்கள் கவலையில் உள்ளனர்." என்று தமிழக அரசின் சார்பாக கலந்து கொண்டவர்கள் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்த்ததாக விவரிக்கிறது அந்நாளிதழ்.


பட மூலாதாரம், இந்து தமிழ்


தினத்தந்தி: 'அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் தள்ளிவைப்பு'
"ஐகோர்ட்டு நீதிபதிகளின் யோசனையை ஏற்று, இன்று முதல் நடைபெற இருந்த காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தள்ளிவைத்து உள்ளனர். அவர்களுடைய கோரிக்கைகள் தொடர்பாக வருகிற 10-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருக்கிறது." என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
"புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும், 21 மாத நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், அரசு பள்ளிகளை மூடக்கூடாது என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தது.
இதையடுத்து அந்த அமைப்பினருடன் தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் அறிவித்தபடி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் அறிவித்தனர்.
இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று காலை ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது.
அதில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்று கூறப்பட்டிருந்தது." என்கிறது அந்நாளிதழ்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், திங்கட்கிழமை வரை அரசு ஊழியர்கள் தங்களின் போராட்டத்தை தள்ளிவைக் கலாமா?" என்று ஜாக்டோ- ஜியோ அமைப்பின் சார்பில் ஆஜரான வக்கீல் ஷாஜி செல்லனிடம் கேட்டனர் என்றும், "கோர்ட்டு கேட்டுக்கொண்டதன் பேரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைப்பதாக தெரிவித்து உள்ளனர்" என்று அந்த அமைப்பின் வழக்குரைஞர் ஷாஜி செல்லன் கூறினார் என்றும் விவரிக்கிறது தினத்தந்தி.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'ஹார்லிக்ஸ் நிறுவனத்தை வாங்கிய யுனிலிவர்'

பட மூலாதாரம், Facebook
ஹார்லிக்ஸ் நிறுவனத்தின் 20 சந்தைகளை கிளாக்ஸோ நிறுவனத்திடமிருந்து 27,750 கோடிக்கு யுனிலீவர் வாங்கியதாக கூறுகிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ். அந்நிறுவனம் வெளியிட்டுள்ளா செய்தியில், ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம் கிளாஸ்கோஸ்மித் நிறுவனத்தை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது. கிளாஸ்கோவை கைப்பற்றும் போட்டியில் நெஸ்ட்டில் மற்றுன் கோக் நிறுவனமும் போட்டியிட்டன என்று விவரிக்கிறது அந்நாளிதழ்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












