இலங்கை: பெண்களின் வாழ்வில் இன்னும் தொடரும் போர்
- எழுதியவர், நளினி ரத்னராஜா
- பதவி, பெண்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்
இலங்கையில் உள்நாட்டுப் போர் ஓய்ந்திருக்கலாம். ஆனால் பெண்களின் அன்றாட வாழ்வுக்கான, தேவைக்கான போர் ஓயவில்லை. தினம்தோறும் அவர்களுடைய வாழ்வு போர்க்களமாகவே இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
அவர்களுடைய வாழ்வுக்கான, அன்றாட தேவைக்கான, வாழ்வாதாரத்துக்கான, உணவுக்கான, கௌரவமான வாழ்வுக்கான போராட்டமும், அவப்பெயருக்கு பயப்படும் போராட்டமும்,சமூகப் பாதுக்காப்புக்கான போரட்டமும் எத்தனை தலைமுறைகளுக்குத் தொடரப்போகின்றதோ என்று நினைக்கும்போது மனதில் ஒரு வகை பயம் ஒட்டிக்கொள்வதைத் தவிர்க்க முடியவில்லை.
வடக்கு - கிழக்கில் 89,000 பெண்கள் துணைவர்களை இழந்திருக்கிறார்கள். கிழக்கில் 26,000 பெண்களின் துணைவர்கள் மரணித்து விட்டார்கள் (2010இல் நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஹிஸ்புல்லவினால் சமர்பிக்கபட்ட தொகை ) இது தவிர வடக்கில் மட்டும் தங்கள் குடும்பத்துக்கு வருவாயைப் பெற்றுக் கொடுத்த 20,000 ஆண்கள் தற்போது அவர்கள் குடும்பத்துடன் இல்லை. (இந்த ஆண்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களாக இருக்கலாம், கடத்தப்பட்டு இருக்கலாம் , சிறைக்கைதியாக இருக்கலாம் அல்லது இறுதி யுத்தத்தில் அல்லது அதற்கு முன் கொல்லபட்டவர்களாகவும் இருக்கலாம் ).
இதுதவிர வட மாகாணத்தில் மட்டும் 80% குடும்பங்களில் ஆண்கள் இல்லை என 2013க்கான சனத்தொகை மதிப்பீடு சொல்கிறது . இந்த 80%-இல் உள்ள குடும்பங்களில் உள்ள பெண்கள், ஒன்று துணைவனை இழந்தவராக இருக்கலாம், திருமணம் செய்து கொள்ளாத முன்னாள் போராளியாக அல்லது சாதாரணப் பெண்ணாக (Civilian Women) இருக்கலாம்.
அப்பெண்கள் விவாகரத்து பெற்றவர்களாக அல்லது மேற்குறிப்பிட்ட காணாமல் ஆக்கப்படவரின் அல்லது கடத்தப்பட்டவரின் அல்லது கொலை செய்யப்பட்டவரின், அல்லது சிறையில் உள்ளவரின் தாயாக, துணைவியாக, தங்கையாக, அல்லது மகளாக இருக்கலாம்.

பட மூலாதாரம், Getty Images
இந்த எண்ணிக்கையானது மிகவும் துயரம் தரும் வாழ்வியலை எடுத்தியம்புகிறது. வேலை புருஷ லட்சனம் என்று சொல்லிக்கொண்டு ஒரு குடும்பத்துக்குத் தேவையான வருவாயைப் பெற்றுத்தரும் பொறுப்பை ஆண் மகனின் தலையில் சுமத்தி, அந்தக் குடும்பத்துக்கான தீர்மானம் எடுக்கும் பொறுப்பை அந்த வீட்டில் இருக்கும் ஆணின் தலையில் சுமத்தும் சமூகத்தில் இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
அதற்கே சமூகமும் பழகி விட்டது. இவ்வளவு நடந்த பின்னும் இந்த கருத்தியலில் இருந்து சமூகம் மாறவில்லை என்பது சாபக்கேடு.
பிரதானமாக வருவாயை குடும்பத்துக்கு கொண்டு வந்து அந்த குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்த ஆண் இல்லாதவிடத்து அந்த குடும்பங்கள் படும் பாடு சொல்லில் அடங்காதவை.
குடும்பத்தையும் பிள்ளைகளையும் பார்த்துகொண்டு வருவாயைத் தேட வேண்டிய முழுப்பொறுப்பும் பெண்களிடம் வலிந்து திணிக்கப்பட்டுள்ளது . இவர்கள் வீட்டை அண்மிய பகுதிகளில்தான் வேலை செய்ய விரும்புவார்கள்.
காரணம் வீட்டையும் வீட்டில் இருக்கும் இளம் பிள்ளைகளையும் வயது முதிர்ந்தவர்களையும் கண்காணிக்கவும் பராமரிக்கவும் வேண்டும். சரியான பாதுகாப்பில்லாத வீட்டிலும் இவர்கள் இன்னும் வாழ்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
அதே போல் வேறு இடங்களுக்கு வேலைக்கு செல்வதானால் போக்குவரத்துச் செலவு அதிகமாகும். இன்னும் போக்குவரத்து வசதிகளும் சரியான முறையில் நடை பெறுவதும் இல்லை.
உள்கட்டமைப்பு வசதிகள் செய்து வீதிகள் அபிவிருத்தி செய்யபட்டாததால் வெளிமாவட்டத்து வியாபாரிகளும் லீசிங் கம்பெனி காரர்களும் சிறுதொகை கடன் கொடுப்பவர்களும் நாளுக்கு நாள் சகல வீடுகளுக்கும் செல்வது வீட்டில் தனியே இருக்கும் பெண்பிள்ளைகளின் அல்லது முன் பள்ளிக்கு செல்லும் சிறுவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறது. இதையெல்லாம் கருத்தில்கொள்ளும் எந்தப் பெண்ணும் தூரத்தில் இருக்கும் இடங்களுக்கு வேலைக்குப் போவதை விரும்புவதில்லை
இதில் தன் பிள்ளைகளையெல்லாம் இழந்த அல்லது மத்திய கிழக்குக்கு சென்றவர்களின் பேரப்பிள்ளைகளை பராமரிக்கும் வயது முதிர்ந்த பாட்டிமாரின் பாடு அந்தோ பரிதாபம். இவர்கள் மூன்று நான்கு பேரப்பிள்ளைகளையும் பராமரிக்க வேண்டும். அதே நேரம் வருவாயையும் தேடிக்கொள்ள வேண்டும்.
இது மாத்திராமா? இதே பெண்கள்தான் காணியை விடுவிக்கச் சொல்லியும் காணாமல் ஆக்கபட்டவர்களை தேடியும் இன்னும் அலைகின்றனர், போராடுகின்றனர் .
இவை எல்லாவற்றையும்விட அதிக சவால்களுக்கு முகம் கொடுப்பவர்கள் முன்னாள் போராளி பெண்கள். அதிலும் தனது உடல் பாகத்தை இழந்த பெண் போராளிகள் படும் துன்பம் பன்மடங்கு. முதலாவது காரணம் அவளின் சமூகமே அவளை முழுமையாக ஏற்றுக்கொள்ளாத நிலைமை காணப்படுகின்றது.

பட மூலாதாரம், Getty Images
அவர்களை மணம் முடிக்க எந்த ஆண்மகனும் இலகுவில் முன் வராமை காணப்படுகிறது. காரணம் 'இவள் குடும்பத்துக்கு சரி வரமாட்டாள், வன்முறையில் ஊறிய பெண்' என்ற பார்வை. சரியான தொழில் இல்லாத அதுவும் கை கால் இல்லாத பெண்ணை மணம் முடிக்க பெரிய அளவில் யாரும் முன்வரமாட்டார்கள். "சாதாரண பெண்களுக்கே திருமணம் செய்வது கடினம்."
"அவர்களுக்குத் திருமணம் ஆக சீதனம், வீடு, வாசல் ஆகியவை தேவை. இந்த அழகில் என்னைப் போல் வீடு வாசல் இல்லாத தொழில் தெரியாத, ஊனமுற்ற பெண்ணை யார் திருமணம் செய்வார்," என்பதே அவர்களின் நிலை.
சிலர் வீடு திரும்பும்போது தாய் தகப்பன் இருந்த சொத்துபத்தை எஞ்சி இருந்த பிள்ளைகளுக்கு கொடுத்து விட்டார்கள். ஆகவே இவர்களுக்கு காணிகூட இல்லாத நிலையும் காணப்படுகிறது.
தொழில் வாய்ப்பு தேடிப்போனாலும் இலகுவில் இவர்களை எல்லாரும் வேலைக்கு அமர்த்த முன் வராத நிலையும் காணப்படுகிறது . அப்படி வேலைகள் கிடைத்தாலும் உடல் நிலை இயலாமை காரணமாக அவர்களுக்கு வேலை செய்யவும் முடிவதில்லை.
இன்னும் தன் உடல் பாகத்தில் செல் துண்டுகளை சுமப்பவர்களாகவே இவர்கள் வாழ்கின்றார்கள். பலருக்கு மருத்துவ வசதி தேவைபடுகிறது.

பட மூலாதாரம், Getty Images
இன்னும் சிலர் போரில் கைகால் இழந்த சக்கர நாற்காலியில் வாழும் துணைவனையும் கவனிக்க வேண்டியவர்களாக உள்ளனர். இந்த பெண்ணே அவருக்கு தேவையான மருத்துவ செலவையும் தேடிக்கொள்ள வேண்டும். இவர்கள் துணை இருந்தும் விதைவையாக வாழ்பவர்கள்.
இவ்வகையான பெண்கள் முகம் கொடுக்கும் சவால்கள் சாதாரணமான ( civilian woman) போரில் பாதிக்கபட்ட பெண் முகம் கொடுக்கும் சவால்களைவிட பன்மடங்கு அதிகமானது.
பாதுகாப்புப் படையின் கண்காணிப்பில்...
இது எல்லாவற்றுக்கும் மேலாக தாங்கள் இன்னும் பாதுக்காப்பு தரப்பினரால் கண்காணிக்கபடுகின்றோம் என்ற பயமும் உள்ளது. அதுவும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அரசாங்கம் மாறினாலும் அரச இயந்திரமும் அரச அதிகாரிகளும் மாறவில்லை என்பதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.
இவ்வாறாக அன்றாடம் அடிப்படை தேவைக்காக தங்களுடைய கௌரவமான வாழ்வுக்காக போராடும் இந்த பெண்களின் அவல நிலையைப்போக்கப் போர் முடிந்து ஏழு வருடங்கள் கடந்த நிலையிலும் எந்த அரசியல் கட்சியும் எந்த விதமான ஆக்கப்பூர்வமான செயல்திட்டத்தையும் இன்று வரை முன் வைக்கவில்லை.
குறைந்தபட்சம் இவர்களை சென்று நலம் விசாரிப்பதும் இல்லை. இந்தப் பிரச்சனைகளை பற்றி மாகாண சபையிலோ பாராளுமன்றத்திலோ தொடர்ந்து குரல் ஒலிப்பதைக் காண முடியவில்லை.
அரசின் பொறுப்பு
அரசுக்கு முழுப்பொறுப்பும் இருக்கிறது வடகிழக்கில் வாழும் மக்களின் அவலங்களை தீர்ப்பதற்கு. அதற்காக அனைத்து சிறுபான்மை கட்சிகளும் ஒருமித்து அரசுக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும். இங்கே கட்சிகள் பிரிவதும் புத்துக்கட்சிகளை உருவாக்குவதிலும்தான் நேரம் செலவாகின்றது.

பட மூலாதாரம், Getty Images
தமிழ் மக்களை பிரநிதிப்படுத்த வருகின்றோம் என்று கதிரையில் அமர்ந்தவர்கள் மக்களை மறந்துவிட்டார்கள் , தமக்குள்ளே சண்டை போடுகின்றனர், இன்னும் சிலர் குற்றம் காண்பதிலும் குறை சொல்லுவதில் மட்டுமே காலத்தைப் போக்குகின்றனர்.
பிரிவைக் கண்டு மகிழ்கிறார்களா?
புலம் பெயர் தமிழர்கள் ( எல்லோரும் அல்ல. கூடவே இங்கு வாழ்பவர்களும் அதையே செய்கின்றனர்) தமிழ் கட்சிகள் பிரிவதையும் தமிழர்களிடையே பிளவு உண்டாவதையும் விரும்புகின்றனர். இவ்வாறு பிரிவதை ஊக்கப்படுத்தி கை தட்டி சிரிக்கின்றனர்.
அன்று ஆயுதக்குழுக்களும் பிரிந்தன. ஆளாளை கொன்று குவித்தனர் கடத்தினர் காணாமல் ஆக்கப்பட்டனர். இப்போதும் இவை ஆயுதமில்லாமல் நடந்தேறுகின்றன. பிரிவதும் அதைப் பார்த்து மகிழ்வதும் தமிழருக்கு கைவந்த கலையோ என்னவோ?
முதலில் போரால் பாதிக்கபட்ட சமூகத்துக்கு இப்போது உடனடியாக தேவைப்படுவது பசி பட்டினி இல்லாத வாழ்வு, அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்தல், சரியான கல்வி வசதி, பொருளாதார வசதி உடல் மற்றும் உள்ள ஆரோக்கியம், கௌரவமான பாதுக்காப்பான வாழ்க்கை.

பட மூலாதாரம், Getty Images
இந்த தேவைகள் பூர்த்தி செய்யபட்டால்தான் மக்கள் இன்னொருவரிடம் கை ஏந்தாமல் இன்னொருவரில் தங்கி இருக்காமல் கௌரவத்துடன் வாழ்வார்கள்.
இன்றைய உடனடி அன்றாட வாழ்வுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய போரால் பாதிக்கபட்ட பெண்களுக்கு சரியான பொருளாதார வசதியும் வருவாயை பெற்றுகொடுப்பதற்கான திட்டங்களும் செயல்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் பசி பட்டினியில் வாழும் கல்வி அறிவு இல்லாத உடல் உள்ள ஆரோக்கியமில்லாத சமூகம் நாளை உருவாவதை தடுக்க முடியும்.
மேற்குறிப்பிட்ட இன்றைய தேவைகளைக் கணக்கில் கொள்ளாது, அதிகார பரவலாக்கல் ஒன்றே குறிக்கோள் என்று இன்று அரசியல்வாதிகள் நடந்து கொள்வார்களேயானால், எம்மை ஆளும் அதிகாரம் நாளை கிடைத்தாலும் அது குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போல ஆகிவிடும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












