இலங்கையில் கட்டாய திருமணத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சிறுமிகள்

இலங்கையில் சட்டபூர்வ திருமண வயது 18. ஆனால், பல தசாப்த காலமாகத் தொடரும் இந்தச் சட்டத்தின் கீழ் முஸ்லிம் சிறுமிகள் முன்னதாகவே திருமணம் செய்யலாம். இந்தச் சட்டத்தை நீக்குமாறு கோரிக்கைகள் வலுத்துவரும் நிலையில், தனது விருப்பத்துக்கு மாறாக கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட ஒரு சிறுமியை பிபிசி சிங்கள சேவையின் சரோஜ் பத்திரன சந்தித்தார்.
15 வயதாக இருக்கும் போது சாஃபாவுக்கு கட்டாய திருமணம் நடந்தது. ''பரீட்சைக்கு படிக்கும் போது ஒரு பையனுடன் எனக்கு காதல் வந்தது.'' என்று கண்ணீர் வழிய சாஃபா கூறினார்.
'' எனது பெற்றோருக்கு அது பிடிக்கவில்லை. எனது மாமாவின் இடத்துக்கு என்னை அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அங்கு நான் படித்துக்கொண்டிருக்கும் போது, அங்கு வழமையாக வந்து போகும் ஒருவர் என்னை திருமணம் செய்ய விரும்புவதாக எனது மாமா, மாமியிடம் கூறினார்.''
இலங்கையின் பின் தங்கிய கிராமம் ஒன்றைச் சேர்ந்த முஸ்லிமான சாஃபா அதற்கு மறுத்தார்.

பட மூலாதாரம், Getty Images
தனது இடைநிலைக் கல்வியை முடித்த பிறகு தான் காதலித்த பையனையே திருமணம் செய்ய அவர் விரும்பினார்.
ஆனால், அவர் மறுத்த போதிலும் தமது நண்பருக்கு அவரை மாமாவும் மாமியும் திருமணம் செய்து வைத்தனர்.
திருமணத்துக்கு மறுத்த போது சாஃபா தாக்கப்பட்டார். தமது சொல்லை கேட்காவிட்டால் தாம் தற்கொலை செய்யப்போவதாகவும் மாமாவும் மாமியும் மிரட்டியுள்ளனர்.
''வேறு வழியில்லாததால் நான் எனது கைகளை வெட்டிக்கொண்டேன்,'' என்றார் சாஃபா. தனது சட்டைக் கையை உயர்த்தி தழும்பை காண்பித்தார். ''மாமாவின் இடத்தில் இருந்து கொஞ்சம் மாத்திரைகளையும் எடுத்து சாப்பிட்டுவிட்டேன்.''
''நான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போது டாக்டருக்கு லஞ்சம் கொடுத்து என்னை சேலைன் பாட்டிலுடன் வெளியே கொண்டுவந்து, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு போனார்கள். சில நாட்களின் பின்னர் அந்த ஆளை திருமணம் செய்யுமாறு கட்டாயப்படுத்தினார்கள்.''
குழந்தையை இழந்த குழந்தை சாஃபா
தப்ப வழி ஏதும் இல்லாததால், தனது இளம் கணவனுடன் இருக்க சாஃபா முடிவு செய்தார்.
ஆனால், சாஃபா தனது ஆண் நண்பருடன் தொடர்பை நீடிப்பதாக அவர் சந்தேகித்தார்.
''அவர் தினமும் என்னை அடிப்பார்'' என்றார் சாஃபா. ''நான் கருவுற்றிருப்பதாக சொன்னபோது என்னை தூக்கி நிலத்தில் அடித்தார்.''
''தனக்கு ஒரு நாளைக்கு மாத்திரமே நான் தேவை என்றும், அது நடந்துவிட்டதால், இனி நான் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.''
வன்முறையால் தான் தனது குழந்தையை இழந்துவிட்டதை மருத்துவமனையிலேயே தான் அறிந்துகொண்டதாக சாஃபா கூறுகிறார்.
சாஃபா போலிஸ் நிலையத்துக்கு போனபோது அவர்கள் இவரது முறைப்பாட்டை பெரிதாக எடுக்கவில்லை.
ஒரு நாள் கிராம மசூதியில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அங்கு அவரது கணவர் திருமணத்தை தொடர ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், சாஃபா மறுத்துவிட்டார்.
சில நாட்களின் பின்னர் தம்மோடு படுக்க எவ்வளவு பணம் வசூலிக்கிறாய் என்று கேட்டு அடையாளம் தெரியாத ஆட்களிடம் இருந்து தொலைபேசி அழைப்புக்களும் குறுஞ்செய்திகளும் வரத்தொடங்கின.
தனது கணவர் தனது படத்தையும், தொலைபேசி இலக்கத்தையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்த்து சாஃபாவுக்கு தெரியவந்தது. கெட்ட வார்த்தைகளில் மிரட்டிய ஆட்கள், `உன்னுடைய தொலைபேசி எண்ணை உனது கணவனிடம் இருந்து பெற்றோம்` என்று கூறியுள்ளனர்.
''இந்த அழைப்புக்கள் அனைத்தையும் நான் பதிவு செய்து வைத்துள்ளேன். அனைத்து குறுஞ்செய்திகளும் என்னிடம் இருக்கின்றன.'' என்று சொன்ன சாஃபாவால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனாலும் முழுக் கதையையும் சொல்வது என்று திடமாக இருந்தார்.

ஒரே ஆண்டில் 14% இருந்து 22% மாக அதிகரித்த குழந்தை திருமணங்கள்
என்ன நடந்தது என்பதில் தலையிட சாஃபாவின் தந்தை விரும்பவில்லை.
இந்த கொடுமையான திருமண அனுபவத்தில் இருந்து மீள தேவையான உளநல மற்றும் சட்ட உதவியை பெற சாஃபாவின் தாயார் இப்போது அவரை சமூக நல நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்.
உளநல சிகிச்சையை பெறுவதற்கு இலங்கையில் இருக்கும் மனத்தடை காரணமாக அவர்கள் ரகசியமாகவே அந்த நிலையத்துக்கு வந்தார்கள்.
கிராமத்தில் தொழிலாளியாக பணியாற்றி சாஃபாவின் தாய் தனது ஐந்து பிள்ளைகளை காப்பாற்றுகிறார்.
1990இல் தனது சொந்த ஊரில் இருந்து இவர் விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்டார்.
'' ஒரு சம்பவத்தால்தான் நான் எனது மகளை எனது சகோதரனின் இடத்துக்கு அனுப்பினேன். அவளுக்கு இப்படி நடக்கும் என்று நான் நினைத்ததே இல்லை.'' என்றார் அவர்.
தனது மகளை கட்டாயமாக திருமணம் செய்து வைப்பதை தான் எதிர்த்ததாகவும், ஆனால், தனது சகோதரன் அதனை பொருட்படுத்தவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
''இது ஒரு கட்டாயக் கல்யாணம்'' என்கிறார் அவர். ''அவளது பாதுகாப்பு மற்றும் இப்போது கல்விக்காக அச்சத்தில் இருக்கிறேன்( அவரைப் பற்றி அவரது கணவர் பரப்பும் பொய்கள் காரணமாக). அவள் வகுப்புகளுக்கு போகமுடியாது. பேருந்தில்கூட அவள் போகமுடியாது. அவள் எதிர்காலமே ஸ்திரமில்லாமல் இருக்கிறது.''
ஒவ்வொரு வருடமும், இலங்கையின் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த சாஃபா போன்ற நூற்றுக்கணக்கான சிறுமிகள் அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களால் கட்டாயமாக திருமணம் செய்துவைக்கப்படுகிறார்கள்.
முஸ்லிம் சிறார் திருமணம் கிழக்கு மாகாணத்தில், ஒரு வருடத்துக்குள் 14% இருந்து 22% மாக அதிகரித்துள்ளதாக மனித உரிமைகள் சட்டத்தரணி எர்மிஸா திகல் கூறுகிறார். பழமைவாதம் காரணமாகவே இந்த அதிகரிப்பு.
சஃபாவுக்கு 15 வயது. ஆனால், 12 வயதான சிறுமிகள்கூட கட்டாய திருமணத்துக்கு உட்படுத்தப்பட்டதாக முஸ்லிம் குழுக்கள் ஆவணப்படுத்தியுள்ளன.

இலங்கையின் பொதுச்சட்டம் சிறுவயது திருமணங்களை அனுமதிப்பதில்லை. சட்டபூர்வ திருமண வயது 18. ஆனால், ஒரு தசாப்தகால சமூகச் சட்டமான ''முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம்'', பெரும்பாலும் ஆண்களை உள்ளடக்கிய முஸ்லிம் சமூக தலைவர்களே திருமண வயதை நிர்ணயிக்க அனுமதிக்கிறது.
12 வயதுக்கு குறைவான ஒரு சிறுமி திருமணம் செய்துகொள்ள இஸ்லாமிய மஜிஸ்ட்ரேட்டின் சிறப்பு அனுமதி தேவை என்ற போதிலும், குறைந்த வயதெல்லை கிடையாது.
சிறுமிகளும் அவர்களது தாய்மார்களும் மௌனத்தில் துன்பப்படுகிறார்கள். ஆனால், முல்லாக்கள் மற்றும் பழைமைவாத சமூகத்தலைவர்களின் கடுமையான அச்சுறுத்தல் இருக்கின்ற போதிலும், முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தை திருத்த வேண்டும் என்று முஸ்லிம் பெண் செயற்பாட்டாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.
சிறார் திருமணம்: உண்மைகள்
•வளரும் நாடுகளை சேர்ந்த மூன்றில் ஒரு பெண் 18 வயதை எட்டு முன் திருமணம் செய்கிறார்கள்.
•சிறார் திருமணத்தை அதிக வீதத்தில் கொண்ட நாடுகள்- நைஜர்(76%), மத்திய ஆப்பிரிக்க குடியரசு(68%), சாட் (68%).
•பிராந்தியமென்ற வகையில் தெற்காசியா அதிக சிறார் திருமண வீதத்தை கொண்டது.- 17 வீதமான பெண்கள் 15 வயதில் திருமணம் செய்கிறார்கள். 45 வீதமான பெண்கள் 18 வயதில் திருமணம் செய்கிறார்கள்.
•பிராந்தியத்தில் வங்கதேசம் அதிக சிறார் திருமண வீதத்தை கொண்டது(52%), அடுத்து இந்தியா(47%), நேபாளம்(37%), ஆப்கான்(33%).
•இலங்கையில் 2 வீதத்தினர் 15 வயதிலும், 12 வீதத்தினர் 18 வயதிலும் திருமணம் செய்கிறார்கள்.
•உலகமட்டத்தில் 6 நாடுகள் தவிர்ந்த ஏனையவை குறைந்தபட்ச திருமண வயதுக்கான எல்லையை கொண்டிருக்கின்றன. ஆனால், பல நாடுகள் மத மற்றும் ஏனைய சில அடிப்படைகளில் விதி விலக்குகளை வைத்திருக்கின்றன. சில நாடுகளில் சட்டங்கள் பொருட்படுத்தப்படுவதில்லை.
ஆதாரம்: கேர்ள்ஸ், நாட் பிரைட்ஸ்; ப்யூஆய்வு மையம்

முஸ்லிம் பெண் செயற்பாட்டாளர்கள் மிரட்டப்படுகிறார்கள்?
இலங்கை தனது அரசியலமைப்பை திருத்த திட்டமிட்டுள்ளது. ஆகவே தாம் செயற்பட இதுவே தருணம் என்று செயற்பாட்டாளர்கள் கருதுகிறார்கள்.
முஸ்லிம் திருமணச் சட்டம் மற்றும் ஏனைய பாரபட்சமான சட்டங்களை திருத்துமாறு ஐநாவும், ஐரோப்பிய ஒன்றியமும் கூட அண்மையில் இலங்கை அரசை கேட்டிருந்தன.
ஆனால், எதிர்பார்ப்பு பெரிதாக இல்லை. ஏனென்றால் பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக முஸ்லிம் திருமண மற்ரும் விவாகரத்து சட்டத்தை ஆராய நியமிக்கப்பட்ட குழு இதுவரை ஆக்கபூர்வமாக பரிந்துரைகளை செய்யவில்லை.
மாற்றத்துக்கான கோரிக்கைகளை முஸ்லிம் குழுக்களான ஜமயத்துல் உலமா மற்றும் தவ்ஹீத் ஜமாத் ஆகியவை நீண்டகாலமாக எதிர்த்துவருகின்றன.
பரிந்துரைகள் சமூகத்துக்குள் இருந்து வரும் பட்சத்தில் முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் திருத்தம் செய்ய தமது அமைப்பு தயார் என்று கூறும் தவ்ஹீத் ஜமாத்தின் தலைவரான பி.எம்.அர்சாத், ஆனால், திருமணத்துக்கான குறைந்த வயதை நிர்ணயிக்க தாம் தயாரில்லை என்றும் குறிப்பிடுகிறார்.
இஸ்லாமோ தவ்ஹீத் ஜமாத்தோ சிறார் திருமணத்தை ஆதரிக்கவில்லை என்று கூறும் அவர் ஆனால், திருமணத்துக்கு குறைந்த வயதை நிர்ணயிப்பதை தமது அமைப்பு ஏற்காது என்கிறார்.
பெண்ணுக்கு திருமணம் தேவையா என்பதுதான் திருமணத்துக்கான நிர்ணயமாக இருக்க வேண்டும் என்று கூறும் அவர், சில பெண்கள் 18 வயதுக்கு பிறகும் திருமணம் செய்ய விரும்பமாட்டார்கள் என்றும், ஒருவர் எப்போது திருமணம் செய்ய விரும்புகிறார் என்பதை அவரே முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்.
முஸ்லிம் பெண் செயற்பாட்டாளர்களை தமது அமைப்பு மிரட்டுவதாக கூறப்படுவதையும் அவர் மறுக்கிறார்.

சாஃபாவும் அவரது தாயும் போன அந்த நிலையம், கடந்த 3 ஆண்டுகளில் 3000 முஸ்லிம் பெண்களின் பல்வேறு விவகாரங்களை கையாண்டுள்ளது. அதில் 250 திருமண பிணக்குகளும் அடங்கும்.
'ஆண்களின் மிரட்டல்களால் தான் வீட்டில் இருந்து விலகி இருக்க வேண்டியுள்ளதாக அங்குள்ள சமூகப் பணியாளர் கூறுகிறார்.
''எனது பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப பயம்'', என்றார் அவர்.
''எனது அலுவலகத்திலேயே நான் தங்கவேண்டியுள்ளது. ஒரு ஆட்டோவில் போகவும் பயம்.'' என்கிறார் அவர்.
தனது முக அடையாளத்தை வெளிக்காட்ட பயப்படாத சில முஸ்லிம் செயற்பாட்டாளர்களில் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பின் ஷரீன் அப்துல் சரூர் ஒருவர்.
சிறார் திருமணத்தை ஒரு சட்டரீதியான பாலியல் பலாத்காரம் என்று கூறும் அவர், இன, மத, தேச வேறுபாடின்றி அனைவருக்கும் 18 வயதே சட்டபூர்வ திருமண வயதாக இருக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

உறுதியுடன் இருக்கும்சாஃபா
இன்னுமொரு குழந்தையை பெற்றெடுக்க ஒரு சிறுமி உடல் ரீதியாக பக்குவத்தை பெற்றிருக்கமாட்டாள் என்றும், அதனால், அவளது கல்வியும் பாதிக்கப்படும் என்றும் அவர் கூறுகிறார்.
இந்த சிறுமிகள் திருமணம் செய்வது அனைத்து சமூகத்தையும் பாதிக்கிறது என்றும் மொத்த சமூகமே இதனால் பின் தங்குகிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
இந்த சிறார்களின் குழந்தை பிராயத்தை நிர்மூலம் செய்யாதீர்கள் என்பதுதான், முஸ்லிம் சமூகத்துக்கும், மத தலைவர்களுக்குமான எனது செய்தி என்கிறார் ஷரீன் சரூர்.
தான் சந்தித்த இந்தச் சோகமான அனுபவத்துக்கு மத்தியிலும் சாஃபா ஒரு சிறந்த மாணவி. கல்வியை மீண்டும் தொடங்க அவர் விடாப்பிடியாக இருக்கிறார்.
அவருக்கு நல்ல வேலை கிடைக்கும் என்று அவரது குடும்பம் எதிர்பார்க்கிறது. ஆனாலும், அவருக்கு இன்னமும் நிறைய சவால்கள் இருக்கின்றன.
''நான் டியூசன் வகுப்புக்கு போகும்போது வரும் பையன்கள் என்னிடம் வந்து விரசமான நகைச்சுவைகளை கூறுகிறார்கள். இது மோசமான சித்ரவதை. என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை'' என்கிறார் அவர்.
ஆனால், இதற்கெல்லாம் மசிந்துபோக அவர் தயாரில்லை. தான் ஒரு சட்டத்தரணியாக வரவேண்டும் என்கிறார்.
உன்னைப்போல் பாதிக்கப்பட்ட ஏனையவர்களுக்கு உதவ விரும்புகிறாயா என்று கேட்டதற்கு ''ஆம்'' என்கிறார்.
அவரது சிரித்த முகத்தில் அவரது உறுதி தெரிகிறது.
(*சாஃபா பெயர் மாற்றப்பட்டுள்ளது).
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்














