இலங்கையில் தேங்காய் விலை 100 ரூபாயை எட்டியது

பட மூலாதாரம், INDRANIL MUKHERJEE/AFP/Getty Images
இலங்கையில் தேங்காய் விலை அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் தேங்காய் ஏற்றுமதியை நிறுத்துமாறு, இலங்கை நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் கேட்டுகொண்டுள்ளது.
இது குறித்து அச்சங்க தலைவர் ரஞ்சித் விதானகே வெளியிட்டுள்ள அறிக்கையில், எப்போதும் இல்லாதவாறு தேங்காய் ஒன்றின் விலை, 100 ரூபாய் வரை அதிகரித்துள்ளதால், மக்கள் அதிக சிக்கலை எதிர்கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, தேங்காய் விலை வீழ்ச்சி ஏற்படும் வரை,வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்துமாறு அரசிடம், அந்த சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதேவேளையில், அதிக விலைகளுக்கு தேங்காய்களை விற்பனை செய்யும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்று தேங்காய் உற்பத்தி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசிய, அச்சபையின் தலைவர் கபில யகந்தாவள, "கடந்த இரண்டு ஆண்டுகளாக, நாட்டில் நிலவும் வறட்சியே, தேங்காய் விலை உயர்வுக்கு காரணம். தேங்காய் ஒன்று 75 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" , கூறினார்.
ஆனால் கட்டுப்பாட்டைமீறி அதிக விலைகளுக்கு உணவு பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இலங்கை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
அந்த சபையின் அதிகாரி கூறுகையில், `தேங்காய்களை அதிக விலைகளுக்கு விற்பனை செய்யும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தனது அதிகார சபைக்கு அதிகாரங்கள் இல்லை. அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் அந்த அதிகாரம் தங்களுக்கு வழங்கப்பட்டால் மட்டுமே அதனை மேற்கொள்ள முடியும்`, என்றார்.
இதேவேளையில், தேங்காய் விலை அதிகரிப்பு காரணமாக தேங்காய் எண்ணெயையில் விலையும் அதிகரித்துள்ளது. ஒரு பாட்டில் எண்ணெய், ரூ270 முதல் ரூ300 வரை விற்கப்படுகிறது.
இதனால், சந்தையில் தரம் குறைந்த எண்ணெய் மற்றும் பாமாயில் விற்பனை செய்யப்படுவதாக இலங்கை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். தரம் குறைந்த பொருட்களை விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அதிகார சபையிடம் அவர்கள் கேட்டுகொண்டுள்ளனர்.
கட்டுப்படுத்தத் திட்டம்
தேங்காய் விலையை கட்டுப்பாட்டுற்குள் கொண்டுவர, விசேஷ திட்டமொன்றை நடைமுறைபடுத்த உள்ளதாக, பெரும்தொட்ட அபிவிருத்தி அமைச்சர், நவீன் திசாநாயக்க கூறினார்.
இதன்படி, விசேஷ அமைச்சரவை பத்திரமொன்றை அடுத்த அமைச்சரவை கூட்டத்தின் போது தான் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்த அமைச்சர், கட்டுப்பாட்டு விலைக்கு நாடுமுழுவதும் தேங்காய்களை விநியோகிக்கும் திட்டமொன்றை அரசாங்கத்தின் தலையீட்டுடன் விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்தார். "இதன் மூலம் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அதிகரித்துள்ள தேங்காய் விலைகளை குறைக்க முடியும்" என தெரிவித்தார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- ட்விட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












