இலங்கை : இந்த வாரத்துடன் கலையவுள்ள 3 மாகாண சபைகள்
இலங்கையில் சப்ரகமுவ, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாண சபைகளின் பதவிக்காலம் இந்த வாரத்தில் முடிவடைகிறது . சப்ரகமுவ மாகாண சபை இன்று (செவ்வாய்கிழமை) நள்ளிரவுடன் கலைகின்றது.

2012-ஆம் ஆண்டு நடைபெற்ற சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 28 இடங்களை பெற்று அறுதிப் பெருன்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. ஐக்கிய தேசிய கட்சியில் 14 பேர் , மற்றும் இலங்கை தொழிலாளர்கள் காங்கிரஸ் சார்பாக இருவர் ஆகிய ஏனைய உறுப்பினர்கள் தேர்வாகியிருந்தனர்.
201-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதியன்று குறித்த மூன்று மாகாண சபைகளுக்கும் தேர்தல்கள் நடைபெற்றன. தேர்தலின் பின்னர் சபை கூடிய நாளிலிருந்து 5 ஆண்டுகள் அதன் பதவிக் காலமாகும்.
சப்ரகமுவ மாகாண சபை இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவுடனும், கிழக்கு மாகாண சபை எதிர்வரும் சனிக்கிழமையும், வட மத்திய மாகாண சபை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடனும் கலைகின்றன.
அரசியலமைப்பு 13-ஆவது திருத்தத்தின் கீழ் ஓரு மாகாண சபை கலைந்தால், ஒரு வாரத்திற்குள் தேர்தல் ஆணையம் அடுத்த தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். அடுத்த சபை தேர்வாகும் வரை ஆளுநரின் கீழ் மாகாண சபை நிர்வாகம் இருக்கும்.
ஏற்கனவே தேர்தல்கள் ஆணையம் குறித்த மாகாண சபைகளுக்கு அக்டோபர் 2-ஆம் தேதி தேர்தல் வேட்பு மனு கோரல் தொடர்பான அறிவித்தலை வெளியிட்டு டிசம்பர் 9-ஆம் தேதி தேர்தல்களை நடத்த உத்தேசித்திருந்தது.

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மாகாண சபைகள் தேர்தல் சட்ட திருத்தம் காரணமாக ஏற்கனவே தீர்மானித்தவாறு தேர்தல்களை நடத்த முடியாத நிலை தேர்தல்கள் ஆணையத்திற்கு ஏற்பட்டுள்ளது.
தொகுதி மற்றும் விகிதாசாரம் என கலப்பு முறை தேர்தல் காரணமாக தொகுதி எல்லை நிர்ணய பணிகள் முடிவடைந்த பின்னர் அடுத்த வருடம் மார்ச் மாதம்தான் தேர்தல்களை நடத்த முடியும் என பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
அரசாங்கம் அனைத்து மாகாண சபைகளுக்கும் ஓரே நாளில் தேர்தலை நடத்தும் வகையில் முன் வைத்த அரசியலமைப்பு 20-ஆவது திருத்த மசோதா காரணமாக இம்மாகாண சபைகளின் பதவிக்காலம் குறிப்பிட்ட காலம் நீடிக்கும் வாய்ப்பு இருந்தது.
திருத்த மசோதாவிற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெருன்பான்மை மூலமும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு மூலமும் நிறைவேற்றப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரை காரணமாக இறுதி நேரத்தில் அரசு அதனை கைவிட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- போர் பிரகடனம் செய்த அமெரிக்க விமானங்களை சுட்டு வீழ்த்துவோம்- வடகொரியா
- 'கல்லைப் போல் இறுகும் உடல்'-அரிய வகை நோயால் அவதிப்படும் பெண்
- உலக அளவில் கடற்படையை விரிவாக்க முயற்சி செய்யும் சீனா
- இலங்கையிலிருந்து பணிப்பெண் வேலைக்கு செல்வோர் எண்ணிக்கை வீழ்ச்சி?
- 16 வயது பெண்ணிடம் மனதை பறிகொடுத்த ஜின்னா
- கிரிக்கெட்: தரவரிசையில் முதலிடத்தை பிடித்த இந்தியா - உள்ளூரில் புலி, வெளியூரில் எலியா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












