2012 வெலிக்கடை சிறைத் தாக்குதல்: சாட்சி வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு

2012 ம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலைக்குள் அரச பாதுகாப்புப் படை மேற்கொண்ட தாக்குதல் காரணமாக 27 கைதிகள் கொல்லப்பட்டு பலர் காயமடைந்த சம்பவத்தின் பிரதான சாட்சியான சுதேஷ் நந்திமால் டி சில்வாவின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
நேற்று இரவு 11.00 மணியளவில் மொரட்டுவ, லூனாவ பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டின் மீது இந்த தாக்குதல் நடந்துள்ளது.
இந்த துப்பாக்கிச்சூடு காரணமாக சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ள போலீசார் சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்காக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தைக் கண்டித்து அறிக்கை விடுத்துள்ள இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் ரஜித் கீர்த்தி தென்னக்கோன், கடந்த ஆட்சியாளர்களைப் போன்று தற்போதையை அரசாங்கமும் வெலிக்கடைத் தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர்களை பாதுக்காக முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டினார்.

இத்தாக்குதல் சம்பந்தமாக விசாரணை மேற்கொள்ளுமாறு கோரி போலீசாரிடம் தாம் புகாரொன்றை சமர்ப்பித்திருப்பதாக சுதேஷ் நந்திமால் டி சில்வா தெரிவித்தார்.
சம்பவத்திற்கு பொறுப்புக் கூற வேண்டிய நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி தாம் தாக்கல் செய்த மனுவொன்று வரும் 12 ம் தேதி மேல்முறையிட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் அவரது இல்லம் மீது மேற்கோள்ளப்பட்ட துப்பாக்கி சூடு என்பது பிரதான சாட்சியை அச்சுறுத்தும் செயலென்று கூறியுள்ள இலங்கை மனித உரிமைகள் அமைப்பு அவரது பாதுகாப்பை உறுதி படுத்துமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
2012 ம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலைக்குள் நடந்த தாக்குதல் தொடர்ப்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பல அரச பாதுகாப்பு அதிகாரிகள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












