பௌத்த விஹாரையை அரசியல், தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த தடை

கொழும்பு, நாராஹேன்பிட்டி அபயாராம புத்த விஹாரையை அரசியல் மற்றும் தொழில்சங்க நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதை தடை செய்யும் உத்தரவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் அந்த விகாரையின் விகாராதிபதி முருத்தேட்டுவே ஆனந்த தேரருக்கு பிறப்பித்துள்ளது.

பௌத்த விகாரை

பட மூலாதாரம், ISHARA S.KODIKARA/AFP/Getty Images)

படக்குறிப்பு, கோப்புப்படம்

பத்பெறியே விமலஞான தேரர் எனும் பௌத்த துறவி தாக்கல் செய்த மனுவொன்றை விசாரித்த பின்னரே, நீதிபதி இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அபயாராம விஹாரையை அரசியல் கூட்டங்கள் , தொழிற்சங்க கூட்டங்கள் நடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டு வருவதால், பொது மக்களின் வழிபாட்டு நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுவதாக இந்த புகாரை சமர்ப்பித்த விமலஞான தேரர் கூறினார்.

எனவே, இத்தகைய நடவடிக்கைகளுக்காக விஹாரையை பயன்படுத்துவதை தடை செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு அவர் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்த தடை உத்தரவை பிறப்பித்ததுடன் வழக்கு விசாரணைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 22-ஆம் தேதி வரை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஊடக சந்திப்புக்கள் மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் ஊடக சந்திப்புக்கள் அபயாராம விஹாரையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :