குற்றமற்ற அமைச்சர்கள் மீதான நடவடிக்கையை கைவிட விக்னேஸ்வரனுக்கு சம்பந்தன் கடிதம்
இலங்கை வட மாகாண சபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தணிப்பதற்காக, குற்றவாளிகளாக இனம் காணப்படாத இரு அமைச்சர்களின் தண்டனையில் திருத்தம் தேவை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்திருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
வட மாகாண சபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பாக வட மாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரனுக்கு அனுப்பிய கடிதத்தில் இரா. சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை அறிக்கையை அடுத்து குற்றங்கள் நிரூபிக்கப்படாத அமைச்சர்களுக்கு எதிராக விசாரணை நடத்துவதை எதிர்க்கவில்லை என்று தெரிவித்துள்ள சம்பந்தன், அவர்களை தண்டிக்கும் வகையில், அவர்களை விடுமுறையில் செல்லுமாறு அறிவித்திருப்பதை இயற்கை நீதிக் கோட்பாடுகளுக்கு முரணானதும் பொருத்தமற்றதாகவுமே பார்க்கப்படுவதாக கூறியுள்ளார்.
அதே நேரத்தில், எதிர்காலத்தில் நீங்கள் மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு எந்தவிதத் தடையும் ஏற்படாது என்றும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Dushyanthini Kanagasabapathipillai
இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களிடம் விக்னேஷ்வரன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த போதிலும், நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை. சேனாதிராஜாவுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தாதது தொடர்பாக ஏற்கெனவே தனது கவலையை வெளிப்படுத்தியிருந்ததையும் சம்பந்தன் தன்னுடைய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு முன்னதாக இந்த விடயம் குறித்து முதலமைச்சர் விக்னேஷ்வரனுடன் நடத்திய தொலைபேசி உரையாடல் பற்றியும் சம்பந்தன் தனது கடிதத்தில் நினைவூட்டி இருக்கிறார்.
கடந்த 14-ம் தேதி குற்றவாளிகளாக இனம் காணப்படாத அமைச்சர்களுக்கு எதிராக நீங்கள் நடவடிக்கையை அறிவித்த பிறகு ஏற்பட்ட விளைவுகள், உங்களால் ஏற்படுத்தப்பட்டவைதான் என்றும் விக்னேஸ்வரனின் செயல்பாட்டை சம்பந்தன் சூசகமாகக் கண்டித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












