இரான் பெண்கள் புதன்கிழமை தலையில் வெள்ளைத்துணி அணிவது ஏன்?
புதன்கிழமைகளில் பெண்கள் தலையில் வெள்ளைத்துணி அணியும் முறையைக் கட்டாயப்படுத்துகின்ற ஒரு சட்டத்திற்கு எதிரான புதியதொரு சமூக ஊடகப் பரப்புரை இரானில் வேகமாக பரவி வருகிறது.

பட மூலாதாரம், My Stealthy Freedom
எதிர்ப்பை வெளிப்படுத்துவதன் அடையாளமாக, தலையில் வெள்ளைத் துணியை அல்லது வெள்ளைத் துண்டை அணிந்து தங்களின் புகைப்படங்களையும், காணொளிகளையும் #whitewednesdays (#வெள்ளைபுதன்கிழமைகள்) என்ற ஹேஸ்டாக்கை பயன்படுத்தி இரான் பெண்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இந்தப் பரப்புரை, கட்டாய ஆடைமுறைக்கு எதிரான ஆன்லைன் இயக்கமான 'மை ஸ்டீல்த்தி ஃபீரீடம்' என்பதை நிறுவிய மஷிக் அலிநஜத் என்பவரின் மூளையில் உதித்ததாகும்.
பறிபோன சுதந்திரம்
1979 ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சிக்கு முன்பு, குட்டை பாவாடை, குறுகிய கையுடைய மேலாடை உள்பட மேற்குலக பாணி ஆடைகளை இரானியப் பெண்கள் அணிந்து வந்தனர். ஆனால், மறைந்த அயதொல்லா கொமேனி அதிகாரத்திற்கு வந்த பிறகு எல்லாம் மாறிவிட்டது.
"அடக்கம்" பற்றிய இஸ்லாமிய சட்டத்தின் கடுமையான விளக்கத்தோடு பெண்கள், அவர்களின் தலைமுடியை மூடுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டனர். அது மட்டுமல்ல, ஒப்பனை செய்யாதிருப்பதும், முழங்கால் நீள மன்டீவ் (manteau) அணிவதும் கட்டாயமானது.

பட மூலாதாரம், AFP
1979 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தை எதிர்த்து ஒரு லட்சத்திற்கும் மேலான பெண்களும், ஆண்களும் போராட்டம் நடத்தினர். அப்போது தொடங்கி இதுவரை இந்தச் சட்டத்திற்கான எதிர்ப்பு ஒருபோதும் அகலவில்லை.
அதிகரிக்கும் எதிர்ப்பு
பெண்கள் தலையை மூடிக்கொள்ளாமல் எடுக்கப்பட்ட 3 ஆயிரத்திற்கு மேலான புகைப்படங்களையும், காணொளிகளையும், தொடங்கிய மூன்று ஆண்டுகளில், 'மை ஸ்டீல்த்தி ஃபீரீடம்' பெற்றுள்ளது.
'மை ஸ்டீல்த்தி ஃபீரீடம்' இணைய பக்கங்களில் பதிவிடப்பட்ட புகைப்படங்கள், அதிகாரிகளிடம் சிக்கிக்கொள்வதை தவிர்ப்பதற்காக ரகசிய இடங்களில் எடுக்கப்பட்டவைகளாகும். #whitewednesdays (#வெள்ளைபுதன்கிழமைகள்) என்ற ஹேஸ்டாக் ,பொதுவாக பெண்கள் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கு தளம் அமைத்து கொடுக்கிறது.
ஆபத்தான முயற்சி
#whitewednesdays (#வெள்ளைபுதன்கிழமைகள்) என்ற ஹேஸ்டாக் தொடங்கப்பட்ட ஐந்தாவது வாரத்தில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோர் அதனை பின்பற்ற தொடங்கிவிட்டனர். முதல் இரண்டு வாரங்களில் 200 காணொளிகளுக்கு மேலாக அலிநஜத்துக்கு அனுப்பப்பட்டன. அவற்றில் சிலவற்றை 5 லட்சத்திற்கு மேலானோர் பார்த்துள்ளனர்.
பிரதான சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது காணொளி ஒன்றில் பேசியுள்ள ஒரு பெண், தான் தலையில் அணிந்திருந்த துணியை தளர்த்திவிட்டு, "நான் இந்தப் பரப்புரையில் பங்கேற்பதில் உற்சாகமடைகிறேன். என் சிறைவாசம் பற்றி உங்களோடு பேச விரும்புகிறேன். நான் ஏழு வயதாக இருந்தபோது தொடங்கி அவர்கள் என்னை ஹிஜாப் அணிய செய்தனர். அதனை நான் விரும்பவில்லை. விரும்பவும் மாட்டேன்" என்று தெரிவித்திருக்கிறார்,

பட மூலாதாரம், My Stealthy Freedom
பெண்கள் தைரியமாக எதிர்ப்புணர்வை காட்டுவதை பார்த்து ஆச்சரியமடைந்துள்ளதாக அலிநஜத் தெரிவிக்கிறார். சில பெண்கள், தாங்கள் தெருக்களில் நடக்கிறபோது, தலையில் துணி எதுவும் இல்லாமலேயே காணொளி பதிவு செய்து அனுப்பியுள்ளனர்.
"இவ்வாறு காணொளி அனுப்பிய ஒருவரின் பாதுகாப்பு பற்றி அவரிடமே நான் கேட்டபோது, இரானிய பெண்கள் கடந்த 38 ஆண்டுகளாக சந்தித்து வருகின்ற இந்த அடக்குமுறையின் கீழ் வாழ்வதைவிட அவருடைய வேலை பறிபோவதற்கும் தயாராக இருப்பதாக பதிலளித்தார்" என்கிறார் அலிநஜத்.
அன்பை வெளிப்படுத்தும் முயற்சி
அலிநஜத்தை பொறுத்தவரை இந்த பரப்புரை முயற்சி அன்பை வெளிக்காட்டுவது. அவர் தனியாகவே, இந்த பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். சிலவேளைகளில் தொண்டர்கள் சிலரிடம் உதவி பெறுகிறார். ஆன்லைனில் காணொளிகளை பதிவேற்றுவதற்கு இரவு முழுவதும் அவர் தூங்காமல் இருந்த நாட்களும் உண்டு.
பெரும்பாலான புகைப்படங்களும், காணொளிகளும் இரானுக்குள் வாழ்வோரிடம் இருந்துதான் அவருக்கு வந்துள்ளன. ஆனால், சௌதி அரேபியாவில் (இங்கும் தலையில் துணி அணிவது கட்டாயம்) இருந்தும் அலிநஜத் சிலவற்றை பெற்றுள்ளார். ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இருந்தும் சில அனுப்பப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், My Stealthy Freedom
ஆப்கானிஸ்தானில் இருந்து பதில் அனுப்பியுள்ள பெண்ணொருவர், ஹிஜாப் அணியாத புகைப்படத்தை பதிவிட மிகவும் அச்சமுற்றாலும், இந்த பரப்புரை பணியையும், அதில் பங்கேற்போரையும் புகழ்வதாக தெரிவித்திருக்கிறார்.
ஆப்கானிஸ்தானில் தலையில் துணி அணிவது கட்டாயமல்ல. ஆனால், பல சிறுமியரும், பெண்களும் அதனை அணிய குடும்பத்தினரால் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
விடுதலைக்கு வித்து
இரானியப் பெண்களுக்கு ஆதரவு அளிக்கும் ஆண்களோடு, இரான் பெண்களின் விடுதலைக்காக உழைப்பதாக அலிநஜத் தெரிவிக்கிறார்.
"இந்தப் பரப்புரை முக்கியமானது. இது சிறைக்கும் மற்றும் கரப்பான்பூச்சிகளோடும் தூங்குவதற்கு இட்டுசென்றாலும், அடுத்த தலைமுறைக்கு உதவுவதாக அமையும்" என்று இந்தப் பரப்புரையில் பதிவிட்ட ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
இந்தப் பரப்புரையை தலைமையேற்று நடத்துவதை விட இதற்கு உதவுவதாகவே அலிநஜத் கூறுகிறார்.

பட மூலாதாரம், My Stealthy Freedom
இரானியப் பெண்கள், அவர்களே தலைமையேற்றுக் கொள்வர். அவர்களுக்கு நான் தேவையில்லை. அவர்களுக்கு ஒரு தளம் மட்டுமே தேவை. அதனை நான்வழங்கியுள்ளேன்" என்கிறார் அவர்.
அலிநஜத் தான் மேற்கொண்டு வரும் இந்தச் செயல்பாடுகளுக்காக, சவால்களை சந்தித்து வருகிறார். தானாகவே நாடு கடந்து வாழும் அவர், 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் இரான் செல்லவில்லை. கைது செய்யப்படுவார் என்ற பயத்தால் இப்போது அவர் சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் உள்ளார்.
இரான் ஊடக விமர்சனம்
சமீபத்திய இந்தப் பரப்புரையை தொடர்ந்து, இரானிள் தஸ்னிம் செய்தி நிறுவனத்தின் தலைமைப் பதிப்பாசியர், அலிநஜத்தை விலைமகள் என்று குறிப்பிட்டு, கணவருடன் அலிநஜத் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Masih Alinejad
இரானின் இஸ்லாமிய புரட்சிப் படையோடு இணைந்தது என்று கூறப்படும் இணையதளமான மாஷ்ரெக் நியுஸ், தாய், தந்தையுடன் அலிநஜத் இருக்கின்ற பழைய குடும்பப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதில் அவருடைய தாய், தலை முதல் கால் வரை கறுப்பு சாடோர் அணிந்திருக்கிறார். அந்தப் புகைப்படத்தில் தடிமனான எழுத்துக்களில் இருக்கும் குறிப்பு, "மாஷிக் உனக்கு மரணமே" என்கிறது.
இத்தகைய பயமுறுத்தல்கள் எல்லாம், பெண்களுக்கு சுதந்திரத்தை மீண்டும் வென்று கொடுப்பதில் இருந்து தன்னை தடுத்துவிடாது என்கிறார் அலிநஜத்.
தன்னுடைய இந்தப் பரப்புரையை ஒருங்கிணைந்த உலகளாவிய இயக்கமாக மாற்றுவதற்கு தற்போது அவர் முயன்று வருகிறார். அதனால், உலக நாடுகளிலுள்ள பெண்கள் #whitewednesdays (#வெள்ளைபுதன்கிழமைகள்) என்கிற ஹேஸ்டேக்கை இனம் காணலாம். எளிய, நவீன அறிக்கை வெளியிட்டு, வலுவான ஆதரவு தெரிவிக்கலாம் என்று அவர் எண்ணுகிறார்.
தொடர்புடைய செய்திகள்
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












