இலங்கை: டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதா?
இலங்கையில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு பெருகுவதை கட்டுப்படுத்த சுகாதார துறையினரால் பல்வேறு பணித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் இதுவரை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படவில்லை என தெரியவருகின்றது.

கடந்த ஆண்டுடன் ஓப்பிடும்போது இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையில் 64 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை சுகாதார அமைச்சு தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
மலேரியா மற்றும் யானைக்கால் நோய்கள் அற்ற நாடு என உலக சுகாதார அமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழை பெற்றுள்ள இலங்கை கொசுக்களால் பரவும் மற்றுமோர் நோயான டெங்கு காய்ச்சலுக்கு எதிராக தற்போது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு காரணமாக மரணங்களும் அதிகரித்துள்ளன சென்ற ஆண்டு 12 மாதங்களிலும் மொத்தம் 55 ஆயிரத்து 150 டெங்கு நோயாளிகள் இனம் காணப்பட்டனர். 97 மரணங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு கூறுகின்றது.
இந்த ஆண்டு ஜனவரி தொடக்கம் இதுவரை 59 ஆயிரத்து 760 நோயாளிகள் இனம்காணப்பட்டுள்ளதோடு 150 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவிக்கின்றது..

கடந்த ஆண்டு முதல் 5 மாதங்களில் 19 ஆயிரத்து 83 டெங்கு நோயாளிகள் இனம்காணப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இதே காலப் பகுதியில் 64 சதவீத அதிகரிப்பை இது காட்டுகினறது.
குறிப்பாக கொழும்பு , கம்பகா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மேல் மாகாணத்திலே 47 சதவீதமான நோயாளிகள் அதாவது 23 ஆயிரத்து 460 பேர் பேர் இனம்காணப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு கிழக்கு மாகாணத்திலும் டெங்கு கொசுவின் பாதிப்பு அதிகரித்து காணப்படும் நிலையில் 16 சதவீதமான டெங்கு நோயாளிகள் அதாவது 8 ஆயிரத்து 833 பேர் அம்மாகா ணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாட்டின் பல பாகங்களிலும் அண்மையில் பெய்த மழையாலும், அதனால் உருவான வெள்ளப்பெருக்கு காரணமாகவும் இந்த ஆண்டு டெங்கு கொசு பெருகுவது மேலும் அதிகாிக்க வாய்ப்புகள் காணப்படுவதால், அதனை ஓழிப்பதற்கான நடவடிக்கை சுகாதார துறையினர் எதிர்கொள்ளும் பெரிய சவாலாகவே கருதப்படுகின்றது.
பிற செய்திகள்
கல்வியும், ஆன்மீகப் பயிற்சியும் அளிக்கும் பாரம்பரிய இந்திய மகளிர் பள்ளிக்கூடம் (புகைப்படத் தொகுப்பு)
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












