ரவிகுமார் தஹியா: டோக்யோ ஒலிம்பிக் மல்யுத்த இறுதியில் நுழைந்த இந்திய வீரரின் கதை

ரவிகுமார் தஹியா

பட மூலாதாரம், Reuters

டோக்யோ ஒலிம்பிக்கில் 57 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் ரவிகுமார் தஹியா.

அரையிறுதிப் போட்டியில் கஜகஸ்தானின் நூரிஸ்லாம் சனாயேவைத் தோற்கடித்து இந்தியாவிற்கு குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார்.

ஆரம்பத்தில் பின்னடைந்திருந்த இவர், தனது அற்புதமான விளையாட்டால் தனது எதிராளியையைத் தோற்கடித்தார். ஒரு கட்டத்தில் ரவிக்கு இரண்டு புள்ளிகளும் நூரிஸ்லாமுக்கு ஒன்பது புள்ளிகளும் இருந்தன. ஆனால் ரவிக்குமார் சவாலை ஏற்று ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.

தொடக்கத்தில் தடுமாறிய ரவிகுமார் கடைசி இரு நிமிடங்கள் வரை பின்தங்கியே இருந்தார். அதன் பிறகு ரவிகுமாரின் கிடிக்கிப் பிடியில் நூரிஸ்லாம் சிக்கினார். இறுதியில் ரவிகுமார் வெற்றி பெற்றார்.

முன்னதாக, 57 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட ரவிகுமார் பல்கேரியாவின் ஜார்ஜி வாங்கெலோவை 14-4 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தினார்.

அதற்கு முன் கொலம்பியாவின் ஆஸ்கர் உர்பனாவை 13-2 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்திருந்தார்.

தமது கிராமத்தின் மூன்றாவது ஒலிம்பிக் வீரர்

ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தின் நஹரி கிராமத்தில் பிறந்த ரவி தஹியா, இந்த நாளுக்காக 13 ஆண்டுகளாக இரவு, பகல் பாராமல் உழைத்துக்கொண்டிருந்தார்.

ரவிகுமார் இருக்கும் கிராமத்தின் மக்கள் தொகை சுமார் 15 ஆயிரம்தான். ஆனால் இந்த கிராமம் இதுவரை மூன்று ஒலிம்பிக் வீரர்களை வழங்கியுள்ளது.

ரவிகுமார் தஹியா: டோக்யோ ஒலிம்பிக் மல்யுத்த இறுதியில் நுழைந்த இந்திய வீரர்

பட மூலாதாரம், Getty Images

மகாவீர் சிங் 1980 மாஸ்கோ மற்றும் 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றார், அமித் தஹியா 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றார்.

ரவி தாஹியா இந்தப் பாரம்பரியத்தை புதிய உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளார். 10 வயதிலிருந்தே, டெல்லியில் உள்ள சத்ரசால் விளையாட்டு மைதானத்தில் சத்பால் வழிகாட்டுதலின் கீழ் மல்யுத்தத்தின் நுட்பங்களைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார்.

விவசாயம் செய்யும் தந்தை

இந்தப் பயணத்தில் விவசாயம் செய்து வரும் இவரது தந்தை ராகேஷ் தஹியாவும் பங்களித்துள்ளார். அவர் நீண்ட காலமாகத் தனது மகனை மல்யுத்த வீரராக மாற்ற பால், உலர் பழங்களைக் கொடுத்து வந்துள்ளார்.

ரவியின் தந்தை, காலையில் நான்கு மணிக்கு எழுந்து அருகிலுள்ள ரயில் நிலையத்திற்கு ஐந்து கிலோமீட்டர் நடந்து சென்று அங்கிருந்து ஆசாத்பூர் ரயில் நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சத்ரசால் விளையாட்டு மைதானத்திற்கு மகனை அழைத்துச் சென்று வந்தார். கடந்த பத்து ஆண்டுகளாக இது தடையின்றித் தொடர்ந்தது.

ரவிகுமார் தஹியா இதுவரை பெற்ற வெற்றிகள் என்ன?

ரவிகுமார் தஹியா: டோக்யோ ஒலிம்பிக் மல்யுத்த இறுதியில் நுழைந்த இந்திய வீரர்

பட மூலாதாரம், Maddie Meyer/Getty Images

2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலமும், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளியும் வென்றுள்ளார் சுஷில் குமார். அதே லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார் யோகேஷ்வர் தத். பின்னர் 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார் சாக்ஷி மாலிக்.

2015ஆம் ஆண்டு ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற போது ரவி தஹியா முதலில் உலகின் கவனத்தை ஈர்த்தார்.

இதற்குப் பிறகு, அவர் 2018இல் 23 வயதுக்குட்பட்ட உலக சாம்பியன்ஷிப்பிலும் வெள்ளிப் பதக்கம் வென்றார். அவர் 2019இல் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார், ஆனால் 2020 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றார்.

2021இல் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பிலும் தங்கப் பதக்கத்தை வென்று தமது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தார்.

2019ஆம் ஆண்டில், கஜகஸ்தானில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்று ஒலிம்பிக்கில் நுழைந்தார்.

அதன் பின்னர் அவர் இந்தியாவுக்காக ஒலிம்பிக் பதக்கம் பெறக்கூடிய நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராகக் கருதப்பட்டார். அவர் இந்திய அரசாங்கத்தின் 'டார்கெட் ஒலிம்பிக் போடியம்' திட்டத்திலும் பங்கு வகிக்கிறார்.

தர வரிசை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :