IND vs NZ உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி: இந்திய அணி வெற்றி வாய்ப்பை தவறவிட்ட தருணங்கள்

கேன்

பட மூலாதாரம், Reuters

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அதன் முதல் சாம்பியன்களை கண்டுள்ளது. ஆம் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஐசிசி தர வரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

சவுத்ஹாம்ப்டனில் நடைபெற்ற ஆறாவது நாள் போட்டியில் பேட்டிங், பந்து வீச்சு என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டது நியூசிலாந்து அணி.

நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனும், ரோஸ் டெய்லரும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

மழையின் பாதிப்பால் ஆறு நாட்களாக நடைபெற்ற இந்த போட்டியில் நியூசிலாந்து ஒரு புதிய வரலாற்றைப் பதித்துள்ளது. 89 பந்துகளை எதிர்கொண்ட கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 52 ரன்களை எடுத்திருந்தார்.

பவுண்டரியின் மூலம் வெற்றியை உறுதி செய்த டெய்லர் ஆட்டமிழக்காமல் 47 ரன்களை எடுத்திருந்தார்.

ஆறு நாட்களாக நடைபெற்ற போட்டியில், இரண்டு நாட்கள் மழை வந்து ஆட்டத்தை பாதித்தது. இந்தியா நியூசிலாந்துக்கு வெற்றி இலக்காக 139 ரன்களை நிர்ணயித்தது.

இந்திய அணி தரப்பில் அஷ்வின் வீரர்களை பெவிலியனுக்கு திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தாலும், வில்லியம்சனும் டெய்லரும் நின்று விளையாடி இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை தகர்த்துவிட்டனர்.

நியூசிலாந்து அணி

பட மூலாதாரம், Reuters

இந்திய அணி தவறவிட்ட வாய்ப்புகள்

நியூசிலாந்து அணி 31ஆவது ஓவரில் ஆடிக் கொண்டிருந்தபோது. டெய்லர் 26 ரன்களை எடுத்து களத்தில் இருந்தார். அப்போது பும்ரா வீசிய பந்தில் டெய்லர் அடித்த பந்தை தவறவிட்டார் புஜாரா.

அடுத்து வெற்றிக்கு 12 ரன்களே மீதம் இருந்த நிலையில் முகமது ஷமி வீசிய பந்தில் கேன் வில்லியம்சன் அடித்த பந்தை தவறவிட்டார் பும்ரா.

அடுத்த பந்திலேயே பவுண்டரியை தட்டிவிட்டு தனது அரை சதத்தை நிறைவு செய்தார் கேன் வில்லியம்சன். இன்னிங்ஸின் 46ஆவது ஓவரில் முகமது ஷமி அடித்த பந்தில் பவுண்டரியை அடித்து நியூசிலாந்தின் வெற்றியை உறுதி செய்தார் டெய்லர்.

நியூசிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிவைத்த லாதம் மற்றும் கான்வே முறையே 9 மற்றும் 19 ரன்களை எடுத்து அஷ்வின் வீசிய பந்தில் ஆட்டமிழந்தனர்.

இந்தியா வெற்றியை தவறவிட்டது எங்கே?

இந்திய அணிக்கு வெற்றியின் பாதையை நோக்கி செல்வதற்கோ அல்லது போட்டியை சமம் செய்வதற்கான வாய்ப்போதான் முதலில் காத்திருந்தது ஆனால் அதற்கான நம்பிக்கை பேட்ஸ்மேன்கள் மீது இருந்தது.

அஷ்வின்

பட மூலாதாரம், Reuters

இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி வெறும் 170 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 249 ரன்களை எடுத்திருந்தது இந்திய அணி 217 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. நியூசிலாந்து அணி இந்தியை அணியைக் காட்டிலும் 32 ரன்களை கூடுதலாக பெற்றிருந்தது. எனவே நியூசிலாந்து அணிக்கு 139 ரன்கள் என்ற இலக்கு இருந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் ரிஷப் பண்டை தவிர இந்திய அணியில் வேறு யாரும் பிரகாசிக்கவில்லை. ரிஷப் பண்ட் 41 ரன்களை எடுத்திருந்தார்.

ஆறாம் நாள் போட்டியை 64 ரன்களுடன் தொடங்கிய இந்திய அணி, வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய சூழலில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் விராட் கோலி 13 ரன்களிலும், புஜாரா 15 ரன்களிலும், துணை கேப்டன் ரஹானே 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

ஐந்தாம் நாள் போட்டியில் ஜடேஜா 16 ரன்களையும், ஷமி 13 ரன்களையும், ரோஹித் ஷர்மா 30 ரன்களையும் எடுத்திருந்தனர்.

நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர் டிம் செளதீ நான்கு விக்கெட்டுகளை எடுத்திருந்தார். ப்ரெண்ட் போல்ட் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

முதல் இன்னிங்ஸிலும் பிரகாசிக்கவில்லை

மழையால் பாதிக்கப்பட்ட இந்த போட்டியில் இந்திய அணியால் முதல் இன்னிங்ஸிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. டாஸை வென்றிருந்த நியூசிலாந்து அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இந்திய அணி சார்பில் ரஹானே 49 ரன்களையும், கோலி 44 ரன்களையும் ரோஹித் ஷர்மா 34 ரன்களையும் எடுத்து மொத்தமாக 217 ரன்கள் இந்திய அணியின் ஸ்டோர் கார்டில் இருந்தது. நியூசிலாந்து பந்து வீச்சாளர் ஜேமிசன் ஐந்து விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டாலும், நியூசிலாந்து அணியில் கான்வே 54 ரன்களையும், கேன் வில்லியம்சன் 49 ரன்களையும் எடுத்து மொத்தமாக 249 ரன்களை எடுத்திருந்தனர்.

ஒருநாள் போட்டிகள் மற்றும் டி 20 கிரிக்கெட் போட்டிகள் ஆகியவற்றுக்கு உலகக்கோப்பை போட்டிகள் நடத்தப்படும் சூழலில், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கும் உலா சாம்பியன்ஷிப் பட்டத்தை வழங்கும் நோக்கில், முதல் சாம்பியன்ஷிப் பட்டத்துக்கான லீக் போட்டிகளை 2019 ஆகஸ்ட் மாதம் தொடங்கியது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.

இதில் பங்கேற்ற ஒன்பது நாடுகளில், புள்ளி பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடித்துள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள், இறுதிப்போட்டியில் மோதின் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :