ஐபிஎல் 2021: ஐக்கிய அரபு அமீரகத்தில் இரண்டாம் கட்ட போட்டிகள் - அணிகளுக்கு காத்திருக்கும் சவால்கள்

தோனி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்
    • எழுதியவர், மனோஜ் சதுர்வேதி
    • பதவி, பிபிசி இந்தி சேவைக்காக

கொரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் 18-20ஆம் தேதிக்குள் தொடங்கி அக்டோபர் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

ஆனால் அதே நேரம் மீதமுள்ள போட்டிகளில் பல வெளிநாட்டு வீரர்கள் கலந்துகொள்ளாமல் போக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக அணியின் உரிமையாளர்களுக்கு, ஒரு முழுமையான அணியை களத்தில் இறக்குவது கடினமானதாக இருக்கக்கூடும். மேலும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றாலும் அதிக கவனத்தை பெருமா? அதிக ரசிகர்களை கவர்ந்திழுக்குமா என்பதும் சந்தேகமே என்கின்றனர் துறைச் சார்ந்த நிபுணர்கள்.

அக்டோபரில் நடைபெறவுள்ள டி 20 உலகக் கோப்பை போட்டிகள், ஐபிஎல் போட்டிக்கு ஒரு பெரிய தடையாக இருப்பதை பிசிசிஐ நன்கு அறிந்துள்ளது. ஆயினும், ஐபிஎல் போட்டிகள் தடைப்பட்டதால் ஏற்பட்டுள்ள 2500 கோடி ரூபாய் இழப்பை ஈடுசெய்யும் வழிவகைகளை அது தேடுகிறது.

ஐ.பி.எல். போட்டிகளை நடத்திமுடிப்பதிலேயே தங்கள் முக்கிய கவனம் இருக்கும் என்றும் வெளிநாட்டு வீரர்கள் இல்லாததால் எந்த வித்தியாசமும் ஏற்படாது என்றும் பிசிசிஐ-ன் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியதற்கு இதுவே காரணம்.

மேலும் பல நாட்டின் வீரர்கள் டி20 உலகக் கோப்பை போட்டிகளுக்கு தேவையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற காரணத்தாலும் ஐபிஎல் போட்டிகளில் பங்கு பெற இயலாத சூழல் உள்ளது.

இங்கிலாந்து வீரர்கள் இல்லை

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் தனது வீரர்களை அனுப்ப திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இதன் காரணமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் இயான் மார்கன் உட்பட ஜானி பேர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர், மொயீன் அலி, சாம் கரன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் போன்ற இங்கிலாந்து வீரர்கள், ஐபிஎல் போட்டியின் இந்த கட்டத்தில் விளையாட மாட்டார்கள்.

இது தவிர, வங்கதேசம் தனது வீரர்களான ஷாகிப் அல் ஹசன் மற்றும் முஸ்தாபிசூர் ரஹ்மான் ஆகியோரை விளையாட அனுமதிக்கவில்லை.

அதே நேரத்தில், இது தொடர்பாக ஆஸ்திரேலியா இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஐபிஎல்லில் இருந்து திரும்பியபிறகு அந்த நாட்டு வீரர்கள் இரண்டு முறை தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். மே 31 ஆம் தேதிதான் அவர்களது குடும்பத்தினரை சந்திக்க முடிந்தது. இந்த அழுத்தம் காரணமாகவே, ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் இரண்டாவது கட்ட போட்டிகளில் பங்கேற்க மறுத்துவிட்டார்.

கரீபியன் லீக் போட்டியும் ஒரு காரணம்

ஆஸ்திரேலிய வீரர்களின் விவகாரம் இன்னும் தீர்க்கப்படவில்லை. அப்படியிருக்க மேற்கிந்தியத் தீவுகளின் வீரர்களும் கரீபியன் லீக் போட்டிகளால் ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்வது சந்தேகம்தான்.

கரீபியன் பிரீமியர் லீக் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 19 வரை நடைபெற உள்ளது. எனவே மேற்கிந்திய தீவுகளின் வீரர்கள் ஐ.பி.எல் போட்டிகளில் பங்கு பெறுவது கடினம். லீக் முடிந்து வந்தாலும் பல அணிகளின் ஆரம்ப போட்டிகள் ஏற்கனவே முடிந்திருக்கும்.

இந்தப் பிரச்னையை தீர்க்க, டி20 லீக்கை ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்கு முன்பே தொடங்குமாறு, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அமைப்பிடம் பிசிசிஐ வலியுறுத்தியுள்ளது.

இது நடந்தால், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் -கிறிஸ் கெய்ல், கீரோன் பொல்லார்ட், நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரே ரஸல் போன்றவர்கள் போட்டிக்கு சரியான நேரத்தில் வந்துசேரலாம்.

வெளிநாட்டு வீரர்கள் அற்ற அணிகள்

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் வெளிநாட்டு வீரர்கள் இல்லாதபட்சத்தில் பெரிதும் பாதிக்கப்படும். இந்த இரு அணிகளும் முதல் கட்ட போட்டிகளில், நான்கு மற்றும் ஆறு புள்ளிகள் மட்டுமே பெற்று ஏற்கனவே பின்தங்கியுள்ளன.

கொல்கத்தாவைப் பொருத்தவரை, இங்கிலாந்து கேப்டன் மோர்கன் இல்லாத நிலையில் கேப்டனைத் தேர்ந்தெடுப்பது முக்கிய பிரச்னையாக இருக்கும். இது தவிர, பாட் கம்மின்ஸும் வரவிருக்கும் பந்தயங்களில் விளையாட மறுத்துவிட்டார், பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் ஷாகிப்பை அனுப்ப மறுத்துவிட்டது.

இது அந்த அணிக்கு ஒரு நெருக்கடியை உண்டாக்கும். கூடவே வெஸ்ட் இண்டீஸ் வீரர்களான ரஸல் மற்றும் சுனில் நரைன் ஆகியோரும் வரவில்லை என்றால், ஒரு வலுவான அணியை களமிறக்க முடியாது. இருப்பினும், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் வரும்பட்சத்தில், கம்மின்ஸின் குறையை லாக்கி பெர்குசன் மூலம் நிரப்ப முடியும்.

அதே நேரத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏற்கனவே தடுமாறிக் கொண்டிருந்தது. இந்நிலையில் ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜோஸ் பட்லர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இல்லாத நிலையில், அணி மேலே முன்னேறிச்செல்வது இன்னும் கடினமாக இருக்கும்.

கே எல் ராகுல் மார்கன்

பட மூலாதாரம், BCCI/IPL

பஞ்சாப் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளும் நிச்சயமாக பாதிக்கப்படும். இவற்றில், சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டுமே முதல் கட்டத்தில் சிறப்பாக விளையாடியுள்ளது.

கடந்த சீசனில் பிளேஆஃப் கட்டத்தைக்கூட எட்டமுடியாத சென்னை சூப்பர் கிங்ஸ், அதிலிருந்து மீண்டு இந்த முறை முதல் ஏழு போட்டிகளில் 10 புள்ளிகளைப் பெற்றிருந்தன. ஆனால் இந்தப்போட்டிகளில் முக்கிய பங்கு வகித்த மொயீன் அலி மற்றும் சாம் கரன் இருவரும் இரண்டாவது கட்டத்தில் விளையாடமாட்டார்கள். இருப்பினும் இந்த பின்னடைவிலிருந்து மீளக்கூடிய திறன் சிஎஸ்கே. அணிக்கு உள்ளது.

ஆனால் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி, எட்டு போட்டிகளில் ஆறு புள்ளிகளையும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஏழு போட்டிகளில் இரண்டு புள்ளிகளையும் பெற்றதால் அவர்கள் ஏற்கனவே மிகவும் பின்தங்கியுள்ளனர். பஞ்சாப் அணியின் பேட்டிங்கைப் பொருத்தவரை, டேவிட் மலேன் இல்லாததால் அதிக வித்தியாசம் ஏற்படாது. ஆனால் ஜேய் ரிச்சர்ட்சன், ரிலே மெரிடித் மற்றும் கிறிஸ் ஜோர்டான் இல்லாத நிலையில், பந்துவீச்சு கண்டிப்பாக பலவீனமடையும்.

ஜானி பேர்ஸ்டோவ் விளையாடாதது சன்ரைசர்ஸ் அணிக்கு பெரிய அடியாக இருக்கும். அதே நேரத்தில், டேவிட் வார்னரும் (ஆஸ்திரேலியா) ஜேசன் ஹோல்டரும் (மேற்கிந்திய தீவுகள்) வரவில்லை என்றால், அந்த அணியின் நிலை ஆட்டம் கண்டுவிடும்.

ஐபிஎல் அணி

பட மூலாதாரம், BCCI/IPL

டெல்லி அணிக்கு பாதிப்பு ஏதும் இல்லை

டெல்லி கேப்பிடல்ஸ் அணி, முதல் கட்ட போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளது. எட்டு போட்டிகளில் இருந்து 12 புள்ளிகளுடன் அது முதலிடத்தில் உள்ளது. வெளிநாட்டு வீரர்கள் இல்லாதது அந்த அணியின் மீது எந்த விளைவையும் ஏற்படுத்தப்போவதில்லை. ஸ்டீவ் ஸ்மித் வரவில்லை என்றால், அந்த இடத்தை ரஹானே எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது.

இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸ் மற்றும் டாம் கரன் ஆகிய இரண்டு பந்து வீச்சாளர்கள் வரவில்லையென்றாலும்கூட அவர்களின் இடங்களை மற்றவர்களால் நிரப்பமுடியும். டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பேட்டிங் உயிர்நாடி, இந்திய பேட்ஸ்மேன்கள்தான்.

வெளிநாட்டு நட்சத்திரங்கள் போட்டியில் பங்கேற்காதது, மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி போன்ற அணிகள் மீதும், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. க்ளென் மேக்ஸ்வெல்லின் வருகை ஆர்சிபியின் பேட்டிங்கை பலப்படுத்தியுள்ளது என்பது உண்மைதான் என்றாலும்கூட, அவர் வராத நிலையில் விராட் கோலி, கில்கிறிஸ்டுடன் நடு வரிசையில் விளையாடுவதன் மூலம் இந்த இடைவெளியை நிரப்ப முடியும்.

மும்பை இந்தியன்ஸ் அணி, பொல்லார்ட் இல்லாத குறையை உணரும். ஆயினும், அதை சரிகட்டும் வழிகளும் அதனிடம் உள்ளது. எப்படியிருந்தாலும், இந்த மூன்று அணிகளும் பிளே-ஆஃப் கட்டத்தில் விளையாட தகுதி பெறக்கூடும்.

ஐ.பி.எல் முடிந்த உடனேயே , அதாவது அக்டோபர் 18 முதல் டி20 உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடத்தப்பட உள்ளன. இருப்பினும் இதுகுறித்த உறுதியான முடிவு எடுக்கப்பெறவில்லை.

இந்தியாவில் கொரோனா நிலைமை சரியாகவில்லை என்றால், இந்த உலகக் கோப்பை போட்டிகளும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும்.ஆனால் போட்டிகளை இந்தியாதான் நடத்தும்.

ஆனால் உலகக் கோப்பைக்கான மைதானத்தை தயார் செய்ய ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு குறைந்தபட்சம் மூன்று வாரங்கள் தேவைப்படும்.

ஆகவே அத்தகைய சூழ்நிலையில் ஐபிஎல் பிளே-ஆஃப் போட்டிகளை ஒரே இடத்தில் நடத்தலாம். மீதமுள்ள இரண்டு அரங்கங்களை உலகக் கோப்பை போட்டிகளுக்குக்கான தயாரிப்புகளுக்காக ஒப்படைக்க முடியும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :