லாரல் ஹப்பார்ட்: ஒலிம்பிக்கில் போட்டியிட முதல் முறையாக தேர்வான திருநங்கை

லாரல் ஹப்பார்ட்: ஒலிம்பிக்ஸில் போட்டியிட முதல்முறையாக திருநங்கை ஒருவர் தேர்வு

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, லாரல் ஹப்பார்ட்

மிகுந்த சர்ச்சைகளுக்கு இடையே, நியூசிலாந்தை சேர்ந்த லாரல் ஹப்பார்ட், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் திருநங்கை என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

அடுத்த மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் பளு தூக்குதல் போட்டியின் பெண்கள் பிரிவில் அவர் பங்கேற்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆறாண்டுகளுக்கு முன்பு, போட்டியாளர்களின் தேர்வு முறை தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் சங்கம் விதிகளில் மேற்கொண்ட மாற்றத்தின்படி, இவர் தகுதிவாய்ந்த நபராக உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2013ஆம் நடந்த பளு தூக்குதல் போட்டிகளில் இவர் ஆண்கள் பிரிவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

"நியூசிலாந்து மக்கள் எனக்கு காட்டிய கருணை மற்றும் ஆதரவு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நான் அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளேன்" என்று ஹப்பார்ட் கூறியதாக நியூசிலாந்து ஒலிம்பிக் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பளு தூக்குதல் போட்டியின் பெண்களின் 87 கிலோ பிரிவில் லாரல் ஹப்பார்ட் போட்டியிட உள்ளார்.

டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்களின் அளவு ஒரு குறிப்பிட்ட எல்லைக்குக் குறைவாக இருந்தால், திருநங்கை விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் ஒரு பெண்ணாக போட்டியிட அனுமதிக்கும் வகையில் 2015ஆம் ஆண்டில் சர்வதேச ஒலிம்பிக் சங்கம் (ஐஓசி) தனது விதிகளை மாற்றியமைத்தது. அதன்படியே தற்போது 43 வயதான லாரல் ஹப்பார்ட் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.

டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோன், ஒருவரது உடலில் தசைகளின் வளர்ச்சிக்கு காரணமாக உள்ளது.

சர்ச்சைக்குரிய தேர்வு

லாரல் ஹப்பார்ட்: ஒலிம்பிக்ஸில் போட்டியிட முதல்முறையாக திருநங்கை ஒருவர் தேர்வு

பட மூலாதாரம், Getty Images

லாரல் ஹப்பார்ட்டின் டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் வரையறுக்கப்பட்ட எல்லைக்குக் கீழே இருந்தாலும், அவர் ஒலிம்பிக்கில் பங்கேற்பது என்பது பெண்ணாக பிறந்த விளையாட்டு வீரர்களுக்கு நியாயமற்றதாக இருக்கும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஆண்களாக பருவமடைந்துள்ளவர்களின் எலும்பு மற்றும் தசை அடர்த்தி போன்ற உயிரியல் சாதகங்களை பெற்ற திருநங்கைகள் எப்படி பெண்களின் பிரிவில் போட்டியிட அனுமதிக்கப்படுவார்கள் என்பது உள்ளிட்ட கேள்விகள் இந்த முடிவுக்கு எதிராக விமர்சகர்களால் முன்வைக்கப்படுகிறது.

இதே பிரிவில் போட்டியிடும் பெல்ஜிய பளு தூக்குதல் வீராங்கனையான அன்னா வான்பெல்லிங்கன் கடந்த மாதம் இதுதொடர்பாக பேசியபோது, ஹப்பார்ட் டோக்கியோ ஒலிம்பிக்கில் போட்டியிட்டால் அது பெண்களுக்கு நியாயமற்றதாக இருக்கும் என்றும் அது "ஒரு மோசமான நகைச்சுவையைப் போல" இருக்கும் என்றும் கூறியிருந்தார்.

திருநங்கை சமூகத்தை தான் முழுவதுமாக ஆதரித்தாலும், அவர்களை ஒலிம்பிக் போட்டிகளில் சேர்ப்பது என்பது மற்றவர்களை பாதிக்கக்கூடியதாக இருக்கக்கூடாது என்று அவர் கூறினார்.

திருநங்கைகள் விளையாட்டுப் போட்டிகளில் பெண்களின் பிரிவில் அனுமதிக்கப்படுவதை எதிர்க்கும் சேவ் வுமன்ஸ் ஸ்போர்ட் ஆஸ்ட்ராலசியா என்ற அமைப்பும் ஹப்பார்ட் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பதை விமர்சித்துள்ளது.

"சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் குறைபாடுள்ள கொள்கையே தன்னை பெண்ணாக அடையாளப்படுத்திக்கொள்ளும் உயிரியல் ரீதியில் ஆணானவரை பெண்கள் பிரிவில் போட்டியிட அனுமதித்துள்ளது" என்று அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரவேற்கும் நியூசிலாந்து

லாரல் ஹப்பார்ட்: ஒலிம்பிக்ஸில் போட்டியிட முதல்முறையாக திருநங்கை ஒருவர் தேர்வு

பட மூலாதாரம், Getty Images

எனினும், லாரல் ஹப்பார்ட் ஒலிம்பிக்கில் பங்கேற்க செய்யும் முடிவை நியூசிலாந்து அரசாங்கமும், அந்த நாட்டின் விளையாட்டு அமைப்பும் வரவேற்றுள்ளது.

சர்வதேச பளு தூக்குதல் அமைப்பு மற்றும் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தகுதி வரம்புகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே ஹப்பார்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக நியூசிலாந்து ஒலிம்பிக் சங்கத்தின் தலைமை நிர்வாகி கெரீன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விளையாட்டில் பாலின அடையாளம் என்பது மிகவும் உணர்திறன் மற்றும் சிக்கலான பிரச்னை என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். விளையாட்டுத் துறையில் மனித உரிமைகளுக்கும் நியாயத்திற்கும் இடையில் சமநிலை தேவைப்படுகிறது. நியூசிலாந்து அணியை பொருத்தவரை, நாங்கள் அனைவருக்கும் மரியாதையளிக்கும் கலாசாரத்தை கொண்டிருக்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்தகால சர்ச்சைகள்

லாரல் ஹப்பார்ட்: ஒலிம்பிக்ஸில் போட்டியிட முதல்முறையாக திருநங்கை ஒருவர் தேர்வு

பட மூலாதாரம், Reuters

தான் போட்டியிடும் பிரிவில் உலகின் மிகச் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராக லாரல் ஹப்பார்ட் திகழ்கிறார்.

ஒவ்வொரு நாட்டிலிருந்தும் ஒரு பிரிவுக்கு ஒரு பளு தூக்குதல் வீரர் மட்டுமே இருக்க வேண்டும் என்ற சர்வதேச பளு தூக்குதல் கூட்டமைப்பின் (ஐ.டபிள்யூ.எஃப்) விதிகள் காரணமாக எண்ணற்ற வீரர்கள் போட்டியிட மாட்டார்கள் என்பதால், லாரல் ஹப்பார்ட் பதக்கம் வெல்வதற்கு அதிகளவில் வாய்ப்புள்ளது.

கடந்த காலங்களிலும் ஹப்பார்ட் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.

2019ஆம் ஆண்டில் சமோவாவில் நடந்த பசிபிக் கேம்ஸில் அதே நாட்டை சேர்ந்த வீரரை வீழ்த்தி லாரல் தங்கப் பதக்கம் வென்றார். இது அப்போது சர்ச்சையாக வெடித்தது.

2018ஆம் ஆண்டு தங்களது நாட்டின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் ஹப்பார்ட் பங்கேற்பதை தடுப்பதற்கு ஆஸ்திரேலியாவின் பளு தூக்குதல் அமைப்பு முயற்சி செய்தது.

இதற்கு போட்டி ஏற்பாட்டாளர்கள் மறுப்பு தெரிவித்திருந்தாலும், காயத்தின் காரணமாக ஹப்பார்ட் அப்போது போட்டியில் இருந்து விலக நேரிட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :