மில்கா சிங் - கொரோனா தொற்று பாதிப்பால் காலமானார்

மில்கா சிங்

இந்தியாவின் புகழ்பெற்ற தடகள வீரர் மில்கா சிங் கொரோனா தொற்று பாதிப்பால் காலமானார். அவருக்கு வயது 91.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சண்டிகரின் PGIMER மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று அவரின் உடல்நிலை மோசமானது.

பிபிசி ஹிந்தி சேவைக்காக செய்தி சேகரிக்கும் அஷோக் குமாரிடம், நேற்று இரவு 11 மணியளவில் மில்கா சிங்கின் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மில்கா சிங்கிற்கு ஒரு கட்டத்தில் கொரோனா நெகடிவ் ஆனபோதும், தொற்றால் ஏற்பட்ட பாதிப்பால் அவர் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவர்கள் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளுக்கு பலன் கிடைக்காமல் வெள்ளிக்கிழமையன்று அவர் உயிர் பிரிந்தது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மில்கா சிங்கின் மனைவி நிர்மல் மில்கா சிங் ஐந்து நாட்களுக்கு முன் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போராட்டமிகுந்த இளமை காலம்

தடகளத்தில் பல சிறப்புகளை பெற்ற மில்கா சிங், 1947ஆம் ஆண்டு இந்திய பிரிவினையை தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில் தன் கண்முன்னே பெற்றோர் கொலை செய்யப்படுவதை கண்டார்.

அவரின் தந்தை அவருக்கு சொன்ன கடைசி வார்த்தைகள் `ஓடு மில்கா ஓடு` என்பதுதான் இதை பிபிசியின் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார் மில்கா சிங். கொலை செய்ய வந்த கும்பலிடமிருந்து தப்பித்து ரயிலில் டெல்லி வந்தார் மில்கா சிங்.

பெற்றோர் இல்லாமல் ஆதரவற்று இருந்த மில்கா சிங்கிற்கு, 1951 ஆம் ஆண்டு இந்தியா ராணுவத்தில் சேரும் வரை வாழ்க்கை பெரும் போராட்டமாகவே இருந்தது. ராணுவ சேவையின்போது அவரின் விளையாட்டுக்கான ஆர்வம் வெளிப்பட்டது.

"நான் ராணுவத்தில் இருந்த போது ராணுவப் பயிற்சியாளர் ஒருவர் எனக்கு ஓடுவது குறித்து கற்றுக் கொடுத்தார். அங்குதான் எனது வாழ்க்கை தொடங்கியது," என பிபிசியிடம் பேசிய மில்கா சிங் தெரிவித்திருந்தார்.

1958ஆம் ஆண்டு கார்டிஃபில் நடைபெற்ற காமல்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு முதல் முக்கிய தங்கப் பதக்கத்தை பெற்ற தந்தபின் இந்தியாவின் ஹீரோ ஆனார் மில்கா சிங்.

2013ஆம் ஆண்டு அவரின் வாழ்க்கையை மையப்படுத்தி `பாக் மில்கா பாக்` (ஓடு மில்கா ஓடு) என்ற ஹிந்தி திரைப்படம் வெளியானது.

மில்கா சிங் என்ற `பறக்கும் சீக்கியர்`

`பறக்கும் சீக்கியர்` என்று அழைக்கப்பட்ட மில்கா சிங், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் 400 மீட்டர் ஓட்டப் பந்தயப் பிரிவில் தங்கம் வென்ற ஒரே இந்தியர்.

1958ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் மில்கா சிங் 200 மீட்டர் மற்றும் 400மீட்டர் பிரிவில் தங்க பதக்கங்களை வென்றார். 1962ஆம் ஆண்டு ஜகார்டாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில், 400ஓட்டப் பந்தயம் மற்றும் 400மீட்டர் தொடர் ஓட்டப் பிரிவில் தங்கப் பதக்கங்களை வென்றார்.

1958ஆம் ஆண்டு பிரிட்டன், வேல்ஸின் கார்டிஃப்பில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் மில்கா சிங் 440 யார்ட் பிரிவில் தங்கம் வென்றார். 1960ஆம் ஆண்டு ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை சிறிய வித்தியாசத்தில் தவறவிட்டாலும் அந்த போட்டி அவருக்கு பெரும் புகழைப் பெற்று தந்தது.

மில்கா சிங்

1956ஆம் ஆண்டு மெல்பர்னில் நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள், ரோமில் 1960ஆம் ஆண்டு மற்றும் 1964ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக பங்கேற்றார் மில்கா சிங்

ரோம் ஒலிம்பிக் போட்டியில் மில்கா சிங் 400 மீட்டர் பிரிவில் 45.73நொடிகளில் நிறைவு செய்தார். ஜெர்மனை சேர்ந்த தடகள வீரர் கார்ல் கஃப்மனை முந்த முடியவில்லை என்றாலும், மில்கா சிங்கின் சாதனை அடுத்த 40 வருடங்களுக்கு இந்திய வீரர்களால் முறியடிக்க முடியாத சாதனையாக நீடித்தது.

பிரதமர் மோதி இரங்கல்

மில்கா சிங்கின் மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

"எண்ணற்ற இந்தியர்கள் இதயத்தில் சிறப்பான இட்த்தை பிடித்திருந்த ஒரு விளையாட்டு வீரரை நாம் இழந்துவிட்டோம். அவரின் உற்சாகம் ஊட்டும் பண்பு மில்லியன் கணக்கானவர்களிடம் அவரை கொண்டு சேர்த்தது. அவரின் இழப்பு பெருந்துயர்."என்று பதிவிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: