IPL 2021 KKR vs PBKS: பந்து வீச்சில் கலக்கிய கொல்கத்தா, நிதானம் காட்டி வென்ற மார்கன்

பஞ்சாப் vs கொல்கத்தா

பட மூலாதாரம், BCCI/IPL

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி, நேற்று, ஆமதாபாத் நரேந்திர மோதி மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற கொல்கத்தா, பஞ்சாபை பேட்டிங் செய்ய அழைத்தது. சிறப்பாகத் தொடங்கிய கே எல் ராகுல், மயங்க் அகர்வால் இணை, 36 ரன்களில் பிரிந்தது. 5.4-வது ஓவரில் பஞ்சாப் அணித் தலைவர் தூக்கி அடித்து அவுட் ஆனார்.

அடுத்து களமிறங்கிய க்ரிஸ் கெய்லை ஒரு ரன்னைக் கூட எடுக்க விடாமல் வீழ்த்தி உடனடியாக பெவிலியன் அனுப்பியது கொல்கத்தா.

இந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியோடு அதிரடி காட்டி 64 ரன்களைக் குவித்த தீபக் ஹூடாவாவது நம்பிக்கையளிப்பார் என எதிர்பார்த்த போது, அவரையும் ஒரு ரன்னில் வீழ்த்தி, போட்டியில் கொல்கத்தா ஆதிக்கம் செலுத்துவதை உறுதி செய்தது. தீபக் ஹூடா அடித்த பந்தை, மார்கன் கேட்ச் பிடித்த விதம் அருமை.

மூன்று விக்கெட் இழப்பு வரை நிதானமாக விளையாடிக் கொண்டிருந்த மயங்க் அகர்வால், 11.2 ஓவரில் அடித்த பந்தை ராகுல் திரிபாதி பிடித்த கேட்ச் கொல்கத்தா ரசிகர்களின் நம்பிக்கையை தவிடுபொடியாக்கியது. 12 ஒவர் முடிவில் பஞ்சாப் அணி 63 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

மயங்க் அகர்வால்

பட மூலாதாரம், BCCI/IPL

அடுத்தடுத்து களமிறங்கிய நிகோலஸ் பூரன், ஹென்ரிக்ஸ் ஆகியோர் போல்டாகி வெளியேறினர். தன் அணியின் விக்கெட் வீழ்ச்சியை நிலைப்படுத்திக் கொண்டே ரன்களை குவிக்க விரும்பிய ஷாரூ கான் 13 ரன்கள் எடுத்து மார்கனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

மறு முனையில் க்ரிஸ் ஜோர்டன் பஞ்சாப் ரசிகர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் சிக்ஸராக அடிக்கத் தொடங்கினார். அவரை சரியான நேரத்தில் போல்டாக்கி பெவிலியன் அனுப்பினார் ப்ரஷித் கிருஷ்ணா.

அடுத்து வந்த ரவி பிஷ்னாய் ஒரு ரன்னில் தன் விக்கெட்டை இழந்தார். மொஹம்மத் ஷமி மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா ஒரு ரன்னோடு களத்தில் நின்றனர்.

20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்களை மட்டுமே குவித்திருந்தது பஞ்சாப் அணி.

மயங்க் அகர்வால், ராகுல் இணை 36 ரன்களை எடுத்தது. அதன் பிறகு ஒரு நல்ல பேட்டிங் இணை உருவாகவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய சர்வதேச அனுபவமில்லாத ப்ரஷித் கிருஷ்ணா 4 ஓவர்களை வீசி 30 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், பேட் கமின்ஸ் மற்றும் சுனில் நரேன் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.

ஷிவம் மவி 4 ஓவர்களை வீசி வெறும் 13 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு முக்கிய விக்கெட்டை (க்ரிஸ் கெய்ல்) வீழ்த்தி இருந்தார். அவரது எகானமி 3.25 என்பது குறிப்பிடத்தக்கது.

124 ரன்களை எடுத்தால் வெற்றி என்கிற இலக்கோடு களமிறங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

0.4-வது ஓவரிலேயே ஹென்ரிக்ஸ் வீசிய ஃபுல்டாசை சமாளிக்க நிதிஷ் ரானா அடித்த பந்தை, ஷாரூ கான் ஒரு நொடிப் பொழுதில் சட்டென கேட்ச் பிடித்தார்.

1.5-வது ஓவரில் சுப்மன் கில்லின் விக்கெட் பறிபோனது. 2.6-வது ஓவரில் சுனில் நரேன் அடித்த பந்தை பவுண்டரி லைனுக்கு அருகில் ரவி பிஷ்னாய் பாய்ந்து பிடித்து அவர் விக்கெட்டை வீழ்த்தினார். ரன்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறினார் சுனில் நரேன். 3 ஓவர் முடிவில் கொல்கத்தா 3 விக்கெட்டுகளை இழந்து 17 ரன்களை குவித்திருந்தது.

ஆட்டம் பஞ்சாப் அணிக்கு சாதகமாகத் தொடங்கியதைப் பார்க்க முடிந்தது.

இயான் மார்கன்

பட மூலாதாரம், BCCI/IPL

அதுவரை ஒரு நல்ல இணை உருவாகாமல் திணறிக் கொண்டிருந்த ராகுல் திரிபாதி உடன் கைகோர்த்தார் கொல்கத்தா தலைவர் மார்கன்.

இருவருமே விக்கெட்டை இழக்கக் கூடாது என்கிற கவனத்தோடு மெல்ல ரன்களைக் குவிக்கத் தொடங்கினர். மார்கன், ராகுல் திரிபாதி இணை 48 பந்துகளில் 66 ரன்களைக் குவித்தது.

ரன் குவிப்பை வேகப்படுத்த, ராகுல் திரிபாதி மீண்டும் பவுண்டரி லைனை நோக்கி அடித்த பந்தை ஷாரூ கான் பாய்ந்து வந்து பிடித்தார். 32 பந்துகளில் 41 ரன்களைக் குவித்திருந்த ராகுல் திரிபாதியை பெவிலியனுக்கு அனுப்பினார்.

வெற்றி இலக்கை அடைய மார்கனோடு இணைந்தார் ஆண்ட்ரூ ரஸ்ஸல். பஞ்சாப் அணி தன் பந்து வீச்சாளர்களை முழுமையாகப் பயன்படுத்தி கொல்கத்தாவின் ரன் குவிப்பு வேகத்தை சில ஓவர்களுக்கு குறைத்தது.

ரஸ்ஸல் விக்கெட் வெறும் 10 ரன்களில் பறிபோக, தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். மீண்டும் ஒரு நல்ல இணை உருவானது. ஏற்கனவே கொல்கத்தாவின் ரன்ரேட் சிறப்பாக இருந்த போதிலும், இந்த இணை சடசடவென ரன்களைக் குவித்து, தங்கள் வெற்றியை உறுதி செய்தது.

16.4 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு கொல்கத்தா 126 ரன்களைக் குவித்து தன் வெற்றியை உறுதி செய்தது. மார்கன் 40 பந்துகளை எதிர்கொண்டு 47 ரன்களைக் குவித்திருந்தார்.

பந்துவீச்சில் கலக்கிய கொல்கத்தா, பேட்டிங் வந்து போது தொடக்க ஓவர்களிலேயே சடசடவென விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும் கேப்டன் மார்கனின் பொறுப்பான ஆட்டம், கொல்கத்தாவை கரை சேர்த்தது.

பஞ்சாப் இன்னும் 20 - 30 ரன்களைக் குவித்திருக்கலாம் என அவ்வணியின் தலைவர் கே எல் ராகுலே கூறினார்.

எப்படியோ, தொடர் தோல்விகளுக்குப் பிறகு கொல்கத்தா வெற்றிக் கணியைச் சுவைத்திருக்கிறது. இந்த வெற்றிக்குப் பிறகு புள்ளிப் பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்திருக்கிறது கொல்கத்தா, பஞ்சாப் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

இன்று மாலை டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஆமதாபாத் மோதி மைதானத்தில் மோதவிருக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: