"ஸ்டெர்லைட் ஆலையில் மிகக் குறைந்த அளவே மருத்துவ ஆக்ஸிஜனை தயாரிக்க முடியும்" - தமிழக அரசு

பட மூலாதாரம், Getty Images
ஸ்டெர்லைட் ஆலையில் 1050 டன் ஆக்ஸிஜனை உற்பத்திசெய்ய முடியுமென்றாலும் மருத்துவத்திற்குத் தேவைப்படும் ஆக்ஸிஜனை மிகக் குறைந்த அளவே தயாரிக்க முடியுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் ஏற்பாடுகள் எந்த அளவுக்கு இருக்கின்றன என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்துவந்தது. எந்த அளவுக்கு ஆக்ஸிஜன் இருக்கிறது, ரெம்டெசிவிர் மருந்து இருக்கிறது, படுக்கை வசதிகள் இருக்கின்றன என்பது குறித்தும் நீதிமன்றம் கேட்டிருந்தது.
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பது தொடர்பாகவும் முதலமைச்சர் ஆக்ஸிஜன் தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதியது குறித்தும் நீதிபதிகள் கேள்வியெழுப்பியிருந்தனர். தமிழ்நாட்டில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லையென்றால், பிற மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் அனுப்பக்கூடாது என பிரதமருக்கு ஏன் கடிதம் எழுத வேண்டுமெனக் கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணன், "பற்றாக்குறை இருக்கிறது என்பதால் அவ்வாறு கடிதம் அனுப்பப்படவில்லை. ஆக்ஸிஜன் கூடுதலாகத் தேவைப்படும் பட்சத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக்கூடாது, அதன் இருப்பை உறுதிசெய்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அப்படிக் கடிதம் எழுதப்பட்டது" என்று கூறினார்.

பட மூலாதாரம், Reuters
அதேபோல, ஸ்டெர்லைட் ஆலையில் 1050 டன் அளவுக்கு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய முடியும் என்றாலும் அதில் 35 மட்டுமே திரவவடிவில் உற்பத்திசெய்ய முடியும் என்றும் அதன் தூய்மைத் தன்மையும் குறைவுதான் என்றும் அரசுத் தரப்பில் நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்பட்டது.
ரெம்டிசிவிர் மருந்தைப் பொறுத்தவரை, கள்ளச்சந்தையில் விற்பனையைத் தடுக்கவும் மருந்தின் இருப்பைத் தெரிந்துகொள்ளவும் 104 என்ற எண் மூலம் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொள்ள முடியுமென அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இன்னும் சில நாட்களில் அந்த மருந்து தேவைப்படுபவர்கள் நேரடியாக வந்து பெற்றுக்கொள்ளும் வகையில் கீழ்ப்பாக்கத்தில் கவுண்டர் ஒன்று திறக்கப்படுமென்றும் கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
தமிழக மருத்துவமனைகளில் படுக்கை வசதியைத் தெரிந்துகொள்ள "stopcorona" என்ற இணையதளத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் தற்போதுவரை 52 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் அளிக்கப்பட்டிருப்பதாகவும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
தமிழக அரசு கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டுமென்றும், இல்லாவிட்டால் வாக்கு எண்ணிக்கையை ஜூன், ஜூலை மாதத்திற்கு தள்ளிவைக்கவும் தயங்கமாட்டோம் என்றும் மற்றொரு வழக்கில் கூறியிருப்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். கொரோனா சிகிச்சை வருபவர்களிடம் வி.ஐ.பி. கலாசாரத்தைப் பின்பற்ற வேண்டாமென்றும் நீதிபதிகள் கூறினர்.
இந்த வழக்கின் விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












