நாக்பூர் டெஸ்ட்: .300 விக்கெட்டுகள் எடுத்த அஸ்வின் - இந்தியா அபார வெற்றி

நாக்பூரில் இலங்கை அணிக்கு எதிராக நடந்த இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற இந்தியா, 1-0 என்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

300 விக்கெட்டுகள் எடுத்த அஸ்வின்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, 300 விக்கெட்டுகள் எடுத்த அஸ்வின்

இந்தியா வந்துள்ள இலங்கை அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட் எத்தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி சமன் ஆனது.

இந்நிலையில், நாக்பூரில் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸில் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 205 ரன்களை மட்டுமே எடுத்தது. அணித்தலைவர் சண்டிமால் அதிகபட்சமாக 57 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் சார்பாக அஸ்வின் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

TWITTER/BCCI

பட மூலாதாரம், TWITTER/BCCI

மூவர் சதம்; கோலி இரட்டை சதம்

தனது முதல் இன்னிங்க்ஸை தொடங்கிய இந்திய அணி, தொடக்கம் முதலே மிக அதிரடியாக விளையாடியது.

தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த போதிலும், மற்ற வீரர்கள் நன்கு விளையாடினர்.

இந்திய அணியின் சார்பாக முரளி விஜய், புஜாரா மற்றும் ரோகித் சர்மா ஆகிய மூவரும் சதமடித்த சூழலில், அணியின் தலைவரான விராட் கோலி மிகச் சிறப்பாக விளையாடி இரட்டை சதமடித்தார். 267 பந்துகளை சந்தித்த கோலி, 2 சிக்ஸர்கள் மற்றும் 17 பவுண்டரிகளை விளாசி 213 ரன்கள் எடுத்தார்.

இரட்டை சதம் விளாசிய கோலி

பட மூலாதாரம், TWITTER/ICC

படக்குறிப்பு, இரட்டை சதம் விளாசிய கோலி

தனது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுக்கு 610 ரன்கள் எடுத்து 405 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா இன்னிங்க்ஸை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.

தொடக்கத்திலேயே அதிர்ச்சி

பின்னர், தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய இலங்கை அணி ஆரம்பம் முதலே இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.

இந்தியா அபார வெற்றி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அபார வெற்றி பெற்ற இந்தியா

முதல் ஓவரிலிலேயே இஷாந்த் சர்மா விக்கெட் எடுக்க, தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி மட்டைவீச்சாளர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். தனியாக போராடிய அணித்தலைவர் சண்டிமால் மட்டும் 61 ரன்கள் எடுத்தார்.

அபாரமாக பந்துவீசிய இந்திய சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் 4 விக்கெட்டுகளை பெற்றார். ஜடேஜா, உமேஷ் யாதவ் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை எடுத்தனர்.

300-ஆவது டெஸ்ட் விக்கெட்டை பெற்ற அஸ்வின்

பட மூலாதாரம், इमेज कॉपीरइटAFP/GETTY IMAGES

படக்குறிப்பு, 300-ஆவது டெஸ்ட் விக்கெட்டை பெற்ற அஸ்வின்

166 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இலங்கை அணி இழந்ததால், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

இந்த போட்டியில் தனது 300-ஆவது டெஸ்ட் விக்கெட்டை அஸ்வின் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :