ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.
ஏமன் வந்த ஐ.நா உதவி கப்பலுக்கு அனுமதி

பட மூலாதாரம், EPA
சௌதி தலைமையிலான கூட்டணி கடந்த மூன்று வாரங்களாக ஏமன் மீது நீட்டித்து வந்த தடையை தளர்த்தியதையடுத்து, உணவு பொருட்களை கொண்டு வந்த ஐ.நா உதவி கப்பல் ஏமனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள துறைமுகத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
தடையினால் லட்சக் கணக்கான மக்கள் பட்டினியில் தவிக்கும் அபாயம் ஏற்பட்டது.
சௌதி அரேபியா மீதான ஏவுகணை தாக்குதலையடுத்து, கடந்த நவம்பர் 6 ஆம் தேதி இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மியான்மர் செல்லும் போப் ஃபிரான்சிஸ்

பட மூலாதாரம், Reuters
இன அழிப்பு செய்ததாக பரவலாக குற்றஞ்சாட்டப்பட்ட மியான்மர் நாட்டுக்கு செல்ல, வத்திக்கான் நகரத்தில் இருந்து போப் ஃபிரான்சிஸ் புறப்பட்டுள்ளார். மியான்மரின் நடைமுறைத் தலைவரான ஆங் சான் சூச்சி மற்றும் அந்நாட்டின் ராணுவத் தலைவரையும் போப் சந்திக்க உள்ளார்.
பின்னர் வங்கதேசத்திற்கு செல்லும் அவர், ஒரு சிறிய ரோஹிஞ்சா அகதிகள் குழுவையும் சந்திக்கிறார்.

தஞ்சம் கோரி வந்தவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை

பட மூலாதாரம், EPA
பப்புவா நியூ கினியாவில் தஞ்சம் கோரி வந்தவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்க, மூத்த ஆஸ்திரேலிய மருத்துவர்கள் குழு அந்நாட்டு அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
மேனஸ் தீவுகளில் தஞ்சம் கோரிய 300 நபர்களை 'கட்டாயப்படுத்தி வெளியேற்றியதாக' ஐ.நா குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் அவர்களின் உடல் மற்றும் மன நலன் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சிரிய அரசு தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டனர்

பட மூலாதாரம், Reuters
சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் டமாஸ்கஸ் புறநகர் பகுதிகளில், சிரிய அரசு துருப்புகள் நட்த்திய தாக்குதலில் சமார் 23 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
அதே சமயத்தில், டமாஸ்கசின் அல்-மிடான் பகுதியில் நடைபெற்ற ராக்கெட் தாக்குதலில் 4 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவிக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












